Wednesday, May 11, 2011

எண்ணங்கள்


அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம்.

ஈழத் தமிழர்கள் குறித்த கவலை (ஈழப்படுகொலைகள்,காலச்சுவடு) இந்தியத் தமிழர்களுக்கு இல்லாமல் போனதற்கு நீங்கள் யூகித்துள்ள காரணம் சரியே. தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதிகளும், போலிப் பகுத்தறிவு பேசும் நாத்திகவாதிகளும், இந்தியா ஒரே நாடு என்பதை மறுத்துக்கொண்டே இருக்கும் குறுகிய கண்ணோட்டமுள்ள கும்பல்களும் ஈழத் தமிழர்களுக்குஆதரவான நிலைப்பாடு எடுக்கத் துவங்கியபோதே ஈழத் தமிழர் பிரச்னையிலிருந்து வெகுவான இந்தியத் தமிழர்கள் விலகஆரம்பித்தார்கள்.

ஈழத் தமிழருக்காக வீராவேசமாக முழங்கிய பெருஞ்சித்திரனார், பழ.நெடுமாறன், கு.ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி (கவனிக்கவும்: இப்பட்டியலில் வீரமணியாரை சேர்க்கவில்லை) போன்றவர்கள் மட்டுமல்லாது காலச்சுவடுபோன்றபத்திரிகைகளும் இதே தவறைச் செய்தன. இவர்களது இந்திய எதிர்ப்பு உணர்வு, பிராமண எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து மாறிஇந்து எதிர்ப்பு உணர்வாகவும் வடிவம் பெற்றது. அதன் விளைவாக, இந்து என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்துகிடைத்திருக்க வேண்டிய பிற மாநிலத்தவர்களின் ஆதரவையும் ஈழத் தமிழர்கள் இழந்தார்கள்.

ஈழத் தமிழருக்காக முழங்கிய கருணாநிதி, வைகோ, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் நாடக நடிகர்கள் என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் கண்டுகொண்டுவிட்டது. அதன் விளைவாக ஏற்பட்ட அதிருப்தியும் இலங்கை வாழ் ஈழத்தமிழரையே பாதித்தது. போதாக்குறைக்கு ராஜீவ் படுகொலை (1991) தமிழக மக்களை முற்றிலும் ஈழத் தமிழர்களிடமிருந்துஅந்நியப்படுத்தியது. அப்போதும் ராஜீவ் படுகொலையை சில ஆசாமிகள் நியாயப்படுத்திப் பேசி, ஈழத் தமிழரின் வேரில் வெந்நீர்ஊற்றினார்கள்.

நான் தனிப்பட்ட முறையில் இது குறித்து பழ.நெடுமாறன், மா.நன்னன் போன்றோரிடம் விவாதித்திருக்கிறேன். அப்போது ஈழத்தமிழரின் வாழ்க்கை மேம்பாட்டை விட அவர்கள் முக்கியமானதாகக் கருதியது, இந்திய ஒற்றுமை, இந்து மத உணர்வுக்குஎதிரான நிலைப்பாடு தான். நெடுமாறன் அவர்களிடம், ”ஈழத் தமிழர்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்தஇந்தியாவிலும் நீங்கள் ஆதரவை திரட்டலாமே?என்று நான் (2000) கூறினேன். அப்போது, ‘’இந்து மதம் என்ற ஒன்றேஇல்லாதபோது அந்த கேள்வியே எழவில்லை’’ என்றார். நிதர்சனத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கும் இத்தகையவர்களிடம் ஆலோசனை பெற்ற பிரபாகரன் தவறான முடிவு எடுத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

இலங்கை இனப்பிரச்னையில் மொழிப் பாகுபாடு மட்டுமல்லாது மதப் பாகுபாடும் பெரும் பங்கு (புத்தமத ஆதிக்கம்- இந்து மதபாதிப்பு) வகித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஈழத் தமிழருக்கு ஆதரவான அமைப்புகள் அனைத்தும் பகுத்தறிவு, நாத்திகவாதம், இந்து எதிர்ப்பு சிந்தனைகளில் ஊறியவையாக இருந்ததால், இந்து என்ற அடிப்படையிலான ஆதரவு இலங்கை வாழ் தமிழருக்குதடுக்கப்பட்டுவிட்டது. பெரும் தமிழறிஞர்கள் பலர் இந்த விவாதக் களத்திலிருந்து ஒதுங்கவும் இதுவே காரணமானது. ஈழத்திலும்தமிழகத்திலும் கலாச்சார வேர்களை மத அடிப்படையில் ஒன்றாகவே கொண்டிருந்தும், வாரியார், ..ஞானசம்பந்தம், தெ.ஞானசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமைதி காக்கவும் இதுவே காரணம்.

1984 ல் மதுரையில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டில் பாஜக தலைவர் வாஜ்பாய் பேசி இருக்கிறார். ஆனால், வாஜ்பாய்ஆட்சியில் ஈழத் தமிழருக்கு நலம் விளையும் செயல்கள் மேற்கொள்ளப்படவில்லை; அதற்கான தூண்டுதலை அளிக்கதமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு அமைப்புகளால் இயலவில்லை. இதற்கும் காரணம், இரு தரப்பிலும் நிலவிய சந்தேகமனப்பான்மை தான். எனினும் காங்கிரஸ் கட்சியை விட பாஜக மீது இலங்கை அரசுக்கு சிறிது பயம் இருந்தது; 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக போரின் இறுதிக் கட்டத்தை இலங்கை ராணுவம் நிறுத்தி வைத்ததற்கு காரணம்இருந்தது.

இப்போதும்கூட, சீமான் மட்டுமே ஈழத் தமிழருக்காக பல அடக்குமுறைகளை மீறி பேசி வருகிறார். அவரும் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு முலாமுடன் தான் இயங்குகிறார். இவ்வாறாக, தவறான நபர்களிடம் சிக்கிக்கொண்ட மேடையாக ஈழத் தமிழரின்வாழ்க்கைக்கான போராட்டங்கள் மாறிவிட்டன. ஈழத்தமிழர் நல வாழ்வு என்பது தனி ஈழமாகவும் அதன் தொடர்ச்சிதனித்தமிழ்நாடு என்றும், எந்த விவேகமும் இன்றி பிதற்றிய அமைப்புகளே ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு வித்திட்டனர். இன்றுபுலம்பும் காலச்சுவடுஇதழும் இந்த திசையில் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்ததே. இதைச் சொன்னால், மதவாத முத்திரையுடன் பிற்போக்குவாதி பட்டமும் கிடைக்கும் என்பதால் பலரும் சொல்லத் தயங்குகின்றனர்.

மொத்தத்தில் ஈழத்தமிழருக்கான பாதுகாப்புக் கேடயமாக இருந்திருக்க வேண்டிய வாய்ப்பை தமிழகம் உதறிவிட்டது. இந்தியஎதிர்ப்பாளர்கள் வசமிருந்த களத்தை தனதாக்கும் விவேகமும் வேகமும் இல்லாமல் வேடிக்கை பார்த்த தேசிய உணர்வுள்ளதமிழர்களுக்கும் இதில் பங்குண்டு. இப்போதும் நம்மை நம்பிக் காத்திருக்கும் அப்பாவி ஈழத் தமிழருக்காக சுய அகந்தையைவிட்டுக்கொடுக்க யாரும் தயாரில்லை என்பதையே ‘காலச்சுவடு கருத்தரங்கிலிருந்து கழன்றுகொண்ட அறிவுஜீவிகள் காட்டிஇருக்கின்றனர்.

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் எதிரான போரில் வேடிக்கை பார்ப்பவர்களும் அதர்மத்திற்கு துணை போவதாகவே பொருள்என்பது நமது நாட்டின் தத்துவம். இலங்கைவாழ் தமிழர்கள் தொடர்பான போரில் மட்டுமல்லாது விவாதத்திலும் கூட தமிழகம்நீதியுடன் செயல்படாமலே உள்ளது. தமிழன் என்று சொல்லவே அவமானப்பட வேண்டிய தருணம் இது.

-வ.மு.முரளி

08.05.2011

--------------------------------------------------------------------

குறிப்பு: எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதிய கட்டுரை தொடர்பான விவாதத்தில் இடம் பெற்ற எனது கருத்து இது.

.

No comments:

Post a Comment