Friday, January 29, 2010

மரபுக் கவிதை - 71



கீதை பிறந்தது!

கண்ணிரு கனலெனச் சுடர,
கரத்திடை காண்டீபம் அதிர,
கண்ணனின் பின்புறம் பார்த்தன்
கயவரை அழித்திட நின்றான்!

த்வஜத்தினில் பிறந்தனன் அனுமன்;
துணையென நின்றனர் நால்வர்;
யுவக்களை மிகுந்திட நின்றான்-
'ஓம்' என ஒலித்தது சங்கம்!

'தன்'னெனும் ஆணவம் பிறக்க-
வில்லினில் ஓசையை எழுப்பி,
''என்வலி இருந்திடு வரையில்
எள்எனச் சிதறிடும் பகைமை...

கண்ணனே ரதத்தினை ஒட்டு,
கயவருக் கருகினில் நாடு,
மண்ணிலே தர்மமே வாழும்!''

என்றனன் போர்க்களம் அறிய!

உலகினை வாயினில் காட்டி,
உரியினில் வெண்ணெயைத் திருடி,
குலத்தினைக் காத்திட மலையைக்
குடைஎனப் பிடித்தவன் சிரித்தான்!

அர்ச்சுனன் அகந்தையை நீக்கி,
அதர்மத்தைச் சாய்த்திடும் காலம்-
அருகினில் நெருங்குதல் கண்டு
அவனுளம் நகைத்தது - உடனே

ரதத்தினைப் போர்க்களம் நடுவில்
செலுத்திய சாரதி ''பார்த்தா!
எதிரினில் இருப்பவர் பகைவர்;
எடுத்திடு அம்பினை!''
என்றான்.

எதிரினில் பார்த்தனன் பார்த்தன்-
எதிரிகள் யாவரும் உற்றார்!
எதிரினில் குருவுடன் பீஷ்மர்!
எதிரியாய் பந்தமும் நட்பும்!

கலங்கிய மனத்துடன் சோர்ந்து
களத்தினில் புலம்பினன் வீரன்:
''குலத்தினை குருவினை என்வில்
களத்தினில் சாய்ப்பதும் முறையோ?

ஆட்சியே கிடைப்பினும் என்ன?
அன்னவர் போனபின் மன்னர்
மாட்சியே கிடைப்பினும் என்ன?
மடியவும் வேண்டுமோ உறவோர்?''

புலம்பிடும் பார்த்தனைப் பார்த்து
புன்னகை புரிந்தனன் கண்ணன்:
''குலப்புகழ் மறந்தனை வீரா,
களத்தினில் கலங்குதல் மறமா?

உறவென்று கூறியே நழுவி
உண்மையை மறந்திடல் தீது!
உறவென்றும் குருவென்றும் இங்கு
உணராமல் வந்ததும் தவறே!

வந்தபின் முதுகினைக் காட்டி
விடைபெறும் வீரமும் நன்றோ?
சொந்தமும் பந்தமும் நட்பும்
திரௌபதியின் துகிலிற்கு நிகரோ?

பனிரெண்டு ஆண்டுகள் வனத்தில்
பட்டபல் துயரங்கள் யாரால்?
சனிகண்டு கைகொட்டிச் சிரிக்க,
சபையினில் துகிலுரிந்தது யார்?

கடமையை ஆற்றிடும்போது
கலங்குதல் என்றுமே தவறு!
கடமைக்கு பந்தமும் குருவும்
இடராக இருப்பினும் செய்க!

'கடமையே உன்விதி செய்க;
பலனினைக் கருதிடல் வேண்டா!
கடமையைச் செய்; பலன் எனதே!
களத்தினில் வீரமே கடமை!'

எடுத்திடு வில்லினை- அம்பைத்
தொடுத்திடு பகைவரை நோக்கி!
விடுத்திடு உன்குலக் கறையை!
வில்லினை ஒழித்திடு வீரா!''

என்றது கண்ணனின் திருவாய்;
எழுப்பினன் பார்த்தனின் மறத்தை!
'என்'என்ற ஆணவம் அழிய,
எளியவன் ஆகினான் பார்த்தன்!

''மண்ணிலே தர்மத்தை நாட்டி,
மனத்திருள் மயக்கத்தைப் போக்கி,
அண்ணலே காக்க நீ போற்றி!
அனைத்தையும் துறந்தவன் ஆனேன்!''

என்றபின் அர்ச்சுணன் வில்லை
எடுத்ததுடன் அம்பினைப் பூட்டி,
'நன்றதை நல்கட்டும் ஈசன்'
என்றனன்; தொடுத்தனன் போரை!

தர்மத்தை நாட்டிட கண்ணன்
களத்தினில் புகன்றது கீதை!
கர்மத்தைச் செய்வதே வாழ்க்கை;
பலனென்றும் பரந்தாமனுக்கே!

நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர் - 2000
.

No comments:

Post a Comment