Wednesday, January 13, 2010

உருவக கவிதை - 21


சூரியோதயம்

கடவுள் வாழும் கோவிலிலே
கற்பூர தீபம்..
களை இழந்த மாடத்திலே
முராரி ராகம்...
பாடலைக் கேட்கும்போதே
மனதில் சங்கடம்-
பாடியவரைப் பார்த்த பின்
மிகுந்த சங்கடம்.

ரயில் பயணங்களில்
கட்டைகளைத் தட்டியபடி
இந்தப் பாடலை பாடிக்கொண்டு
யாரேனும் உங்களிடம்
தகரக் குவளையை
நீட்டியிருக்கலாம்.
நீங்களும் ஒரு ரூபாயோ,
பத்து ரூபாயோ போட்டிருக்கலாம்.

அந்த குருட்டு பிச்சைக்காரனின்
இருப்பு உங்களை
சங்கடப் படுத்தாமல் இருந்திருந்தால்
தான் அதிசயம்.
ரயில் பயணம் முடிந்து வீடு வந்தும்
அவனை நீங்கள் நினைத்திருந்தால்
அது அதிசயம்.

வாழ்க்கை ரயிலில்
தட்டுத் தடுமாறி
பிச்சை வாழ்க்கை வாழும்
குருடர்களுக்கு
குருட்டுப் பிச்சைக்காரனை
நினைக்க ஏது நேரம்?

ஆயினும்,
கண்கெட்ட பின்னே
சூரிய உதயம்
எந்தப் பக்கம் போனால்
எனக்கென்ன போடி...
என்ற கானம்
ரீங்காரமிட்டபடி
தொடர்ந்து பயணிக்கிறது.

நாளையேனும்
அதிகாலை எழுந்து
சூரியோதயத்தைப்
பார்த்துவிட வேண்டும்.



No comments:

Post a Comment