Saturday, January 2, 2010

மரபுக்கவிதை - 61


எல்லோரும் நல்லவரே!

எல்லோரும் நல்லவரே- இந்த
எண்ணமே நம்மைப் புனிதர்களாக்கிடும்!
எல்லோரும் நல்லவரே!

குற்றமே அற்றவர் யார்? இந்தக்
குவலயத்தில் பிறந்தோர்களுள் பிறர்மனம்
குதறாத பெருமகன் யார்? என்று
சுற்றமாய் மனிதர் தம்மை எண்ணி
சுறுசுறுப்பாகவே தொண்டுகள் செய்பவர்
சுவர்க்கத்தை ஆக்குகின்றார்!
(எல்லோரும்)
பொற்பதம் வாய்க்குமேனும் - அன்றி
பொசுக்கிடும் கொடுந்துயர் எதிரினில் நிற்பினும்
பொறுமையாய் அணுக வேண்டும் - உள
நற்றுணை தெய்வமாகும் - இதில்
நம்பிக்கை கொண்டுநற் பணிகளில் முனைபவர்
நமனுக்கு அஞ்ச மாட்டார்!
(எல்லோரும்)
வற்றாத அன்பு வேண்டும் -முகம்
வாடாத பொலிவுடன் வளர்கின்ற சேவையே
வாழ்வுக்கு அர்த்தமாகும்- ஆசை
பற்றாத உள்ளம் வேண்டும் - நலம்
பகர்கின்ற பணிகளால் மானுடம் தழைத்திட
பாரதம் உயர வேண்டும்!
(எல்லோரும்)
நன்றி: விஜயபாரதம் (23.06.2000)
.

No comments:

Post a Comment