Friday, August 30, 2013

பார்க் கல்லூரி விழாவில் பங்கேற்பு


திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை,  அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு. திருமாறன் எனது நண்பர்; விவேகானந்தம் 150 இணையதளத்தின் தொடர்ந்த வாசகர். அந்தத் தளத்தில் சென்னையைச் சார்ந்த ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்.  அவர் திரு. திருமாறன் அவர்களுடன் ஒரே கல்லூரியில் ஒரே ஆண்டில் படித்தவர். இது,  திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் சுதந்திர தினவிழாவில் திரு. திருமாறன் பங்கேற்றபோது, அவரே சொல்லி நான் அறிந்தது.

இந்நிலையில், அண்மையில் இவ்விருவருடனும் இணைந்து பார்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு திரு. திருமாறன் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 

அவரது அழைப்பை ஏற்று கல்லூரியின் கணிப்பொறியியல் துறை பேரவை துவக்க விழாவில் (27.08.2013) பங்கேற்றேன். சிறப்பு விருந்தினர் ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி அவர்கள்- கணிப்பொறித் துறையில் 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; காம்கேர் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர். அவர் தனது அனுபவங்களால் அத்துறை மாணவர்களுக்கு நல்ல வழி காட்டினார். அன்பான சகோதரி போல இயல்பான பேச்சு. மாணவ மாணவியருக்கு வாழ்க்கை அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் கலந்து அவர் அளித்த உரை நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய  திசைகளைக் காட்டி இருக்கும். 

Tuesday, August 20, 2013

திருப்தி அளிக்கும் நிகழ்வு



திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தினத் திருவிழாவில் இணைந்து பணி புரிந்தது மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

சுதந்திர தினத்தன்று வீட்டில் டி.வி. முன் அமர்ந்துகொண்டு சினிமா நடிகைகளின் பேட்டியைக் கண்டு ரசித்து  நேரத்தை வீணாக்காமல், சமூகத்திற்குப் பயனளிக்கும் விதமாக நாள் முழுவதும் கொண்டாட்டமாக, சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என்று திருப்பூர் அறம் அறக்கட்டளை திட்டமிட்டது. அதன் உறுப்பினர் என்ற முறையில் நானும் அதில் இணைந்து பணியாற்றினேன். அதன் தலைவர் ஆடிட்டர் திரு. சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழு உற்சாகமாகவும் ஒருங்கிணைந்தும் நடத்திக் காட்டியுள்ள இவ்விழா, பல அற்புதமான முன்னுதாரணங்களை உருவாக்கி உள்ளது.

Monday, August 5, 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அற்புத முயற்சி


தமிழின் முன்னணி எழுத்தாளரும் முன்னுதாரணமான திரைப்பட வசனகர்த்தாவாக ஜொலித்து வருபவருமான திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில்  புதிய எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு வருகிறார்.

அவரது சொல்புதிது இணைய குழுமத்தில் நண்பர்களான, அவரது வழிகாட்டுதலில் பட்டை தீட்டப்பட்ட பலரது சிறுகதைகள் அதில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மிகவும் தன்னம்பிக்கையும் பெருந்தன்மையும் இல்லாமல், இவ்வாறு இளம் எழுத்தாளர்களின் கதைகளை தனது சொந்தத் தளத்தில்  வெளியிட முடியாது. ஜெயமோகனால் கண்டுகொள்ளப்பட்ட இந்த புதிய எழுத்தாளர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.