Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, August 5, 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அற்புத முயற்சி


தமிழின் முன்னணி எழுத்தாளரும் முன்னுதாரணமான திரைப்பட வசனகர்த்தாவாக ஜொலித்து வருபவருமான திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில்  புதிய எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு வருகிறார்.

அவரது சொல்புதிது இணைய குழுமத்தில் நண்பர்களான, அவரது வழிகாட்டுதலில் பட்டை தீட்டப்பட்ட பலரது சிறுகதைகள் அதில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மிகவும் தன்னம்பிக்கையும் பெருந்தன்மையும் இல்லாமல், இவ்வாறு இளம் எழுத்தாளர்களின் கதைகளை தனது சொந்தத் தளத்தில்  வெளியிட முடியாது. ஜெயமோகனால் கண்டுகொள்ளப்பட்ட இந்த புதிய எழுத்தாளர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.

Wednesday, November 21, 2012

பழனியிலிருந்து ஒரு பாதயாத்திரை- சிறுகதை


தூரத்தில் மலையும் கோயிலும் தெரிந்தபோதே கன்னத்தில் போட்டுக் கொண்டார் மருதாசல கவுண்டர். ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் வாங்க நிற்கும் கும்பல் போல பயணிகள் பஸ்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியே வந்த மெல்லிய காற்று இல்லாவிட்டால் உள்ளே இருக்க முடியாது.

கவுண்டரின் பேரன் ரங்கநாதன் பக்கவாட்டில் நசுக்கியபடி உராய்ந்து நின்ற குண்டு மனிதரைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். ஆனால் அவனது கஷ்டம் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. இன்னும் கால் மணிநேரம் தான், பழனி வந்துவிடும். எட்டாம் வகுப்பு காலாண்டு பரீட்சை லீவ் நேற்றுத்தான் துவங்கியிருந்தது. லீவில் உருப்படியான காரியமாக, பலநாள் வேண்டுதலை நிறைவேற்ற பேரனை அழைத்துக்கொண்டு பழனி செல்கிறார் கவுண்டர்.

பஸ்சுக்குள் சந்தைக்கடை இரைச்சல். பின்சீட்டில் யாரோ கொய்யாப்பழம் சாப்பிடும் வாசனை. பழனி கொய்யாப்பழத்துக்கு பிரபலம். வீடு திரும்பும்போது பேத்திக்கு வாங்கிப்போக வேண்டும். ஆனால் போனமுறை வந்தபோது ஏமாந்தது போல இம்முறை ஏமாந்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டார். அப்போது தனது முகத்தில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டதை யாரும் பார்த்துவிட்டார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டார். யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவருக்கு அவரவர் கவலை.