Monday, January 11, 2010

மரபுக் கவிதை - 64



தேசக் கொடி


திருப்பூர்க் குமரனைப் போலே - நம்
தேசக் கொடியைக் காப்போம்!
நெருப்பினில் வீழினும் வீழ்வோம் - நம்
நேசக் கொடியினைக் காப்போம்!

மேலே இருப்பது காவி -அது
மேவிய தியாகம் காட்டும்!
கீழே இருப்பது பசுமை - அது
நாட்டின் வளத்தைத் தீட்டும்!

உலகில் அமைதி தேவை - என
வெண்மை மத்தியில் பரவும்!
இலங்கும் சக்கரம் நடுவில் - நல்
நியாயம், நீதியை நிறுவும்!
பாரத நாட்டின் பண்பை -நம்
கொடியே நமக்குச் சொல்லும்!
வீரம் விழுமிய தேசம் - நம்
விழைவுகள் எல்லாம் வெல்லும்!

ஆவி பிரிகினும் பிரிக- நம்
ஆருயிர்க் கொடிக்கென வீழ்வோம்!
தேவி பாரத அன்னை - தம்
சேவகம் செய்திட வாழ்வோம்!
(திருப்பூர்க் குமரனை போல...)

குறிப்பு: இன்று திருப்பூர்க் குமரன் நினைவு நாள் (1932)

.

No comments:

Post a Comment