பாரதம் எழுதிய
முதல்வோன்
நமது நாட்டில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு பல முதன்மைகள் உண்டு. மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை மகரிஷி வியாசர் சொல்லச் சொல்ல எழுதிய முதல் எழுத்தாளர் இவரே. பல லட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரதம், விநாயகரின் உடைந்த தந்தத்தால் எழுதப்பட்டது என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை.
எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் விநாயகப் பெருமானை வணங்கித் துவக்குவது நமது மரபு. திரிபுர அரக்கர்கள் மீது போர் தொடுத்த ஈசன், விநாயகரை மறந்ததால் அவரது தேரச்சு முறிந்த கதையை விநாயக புராணம் கூறுகிறது. இன்றும் "பிள்ளையார் சுழி'யுடன் கணக்குப் பதிவேடுகள் துவங்குவதைக் காண்கிறோம்.
இந்து மதத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலும் வழிபடப்படும் பிரிய தெய்வமாகவும் விநாயகர் விளங்குகிறார். சைவக் கோவில்களில் கணபதியாக வீற்றிருக்கும் விநாயகர், வைணவக் கோவில்களில் தும்பிக்கை ஆழ்வாராக அருள்பாலிக்கிறார். தனது வாஞ்சையான தரிசனம் மூலமாக, இருமதப் பிரிவினரையும் அரவணைப்பது கணநாதரின் சிறப்பு.
விநாயகரின் திருவிளையாடல்கள் குறித்த கதைகள், அவர்மீதான அபிமானத்தால் எழுந்தவை. தமிழ்க்கடவுள் குமரனின் அண்ணனாகவும், சிவ- சக்தி மைந்தனாகவும், மால் மருகனாகவும் கருதப்படுவதால்தான் சமய ஒருமைப்பாட்டை இவரால் எளிதாகக் கொண்டுவர முடிகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அறுசமய வழிபாடாக ஆதிசங்கரரால் வழிபாட்டு முறைகள் தொகுக்கப்பட்டபோது, "கணாபத்யம்' என்ற முறையை அதில் இணைத்தார். இதிலிருந்து, இவ்வழிபாட்டு முறையின் பழமை தெரிய வருகிறது. கணபதியை முதற்கடவுளாக வழிபடுவதே கணாபத்யம் ஆகும். இன்றும், தமிழகத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும், பிள்ளையார் கோவிலைக் காண முடியும்.
ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் காட்சிக்கு எளியவராக வீற்றிருக்கும் விக்னேஸ்வரரையே குழந்தைகள் கடவுளாக முதலில் அறியத் துவங்குகின்றன. மழலைகள் விரும்பும் யானைமுகம் கொண்டிருப்பதே அவரை நோக்கி புதிய பக்தர்களை ஈர்ப்பதாக உள்ளது.
குடகிலிருந்து தமிழகம் நோக்கி 'காவிரி' நதியைப் பாயவிட்டவர் கணேசனே என்று புராணம் கூறும். காக்கையாய் வந்து தமிழ்முனிவர் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து மக்களின் தாகம் தீர்த்தவர் விநாயகர்.
நாட்டில் விநாயகப் பெருமானுக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், கணேச உற்சவத்தை முன்னெடுத்து அதன்மூலமாக மக்களை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்தார். அவரது வெற்றியைத் தொடர்ந்தே, தனது அரசியல் இயக்கத்தை ஆன்மிக அடிப்படையில் அமைத்தார், மகாத்மா காந்தி. "கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- குணம் உயர்ந்திடவே, விடுதலை கூடி மகிழ்ந்திடவே'' என்று, திலகரின் சீடர் மகாகவி பாரதி பாடி மகிழ்ந்தார்.
கொழுக்கட்டையும் தோப்புக்கரணமும் கணபதிக்குப் பிரியமானவை. இவ்விரண்டுமே பக்தர்களின் உடல்நலனை மேம்படுத்த வல்லவை. கணபதிக்கு அர்ச்சிக்கப் பயன்படுத்தப்படும் அருகம்புல்லும் வெப்பம் குறைக்கும் அரிய மூலிகை.
இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில், அந்தத் தூயவனை வணங்கி, நாடு நலம்பெற பிரார்த்திப்போம். கணநாதர் அருள் இருந்தால் தடைகள் அகலும்; தன்னம்பிக்கை பெருகும். வினைகள் ஒழியும்; நம் வாழ்வும் ஒளிரும்.
நன்றி: தினமணி (விநாயக சதுர்த்தி சிறப்பிதழ்)
.
No comments:
Post a Comment