Friday, September 9, 2011

எண்ணங்கள்

வாழ்வை இனிதே ருசிக்க
கொண்டாடுவோம் திருவோணம்!



(மகாபலிபுரம் சிற்பக்காட்சி)

நமது பண்பாடு மிகப் பழமையானது. அதிலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் என தனித்த குணாசிசயங்களுடன் கூடிய பண்டிகைகள் உள்ளன. தமிழகத்தில் பொங்கல் திருவிழா, கர்நாடகாவில் தசரா, ஆந்திராவில் யுகாதி, பஞ்சாபில் பைசாகி திருவிழா, வங்கத்தில் துர்க்கா பூஜை, மகாராஷ்டிராவில் கணேச சதுர்த்தி, வடமாநிலங்களில் ஹோலி, காஷ்மீரில் ஜிரி மேளா... என பண்டிகைகள் பலவிதம். இவை அனைத்தின் நோக்கம், மக்களைப் பிணைப்பதும், வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்துவதுமே.

அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, அலாதியான சிறப்புகளுடன் மலையாள மக்களை மகிழ்விக்கிறது.

தன்னகந்தையால் அழிந்த மகாபலி மன்னனுக்கு திருமால் அளித்த வரத்தின் பயனாக, ஆண்டுக்கு ஒருமுறை தனது நாட்டு மக்களின் நலத்தை அறிய மகாபலி சக்கரவர்த்தியே பாதாளத்திலிருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்க கேரளம் முழுவதும் வண்ணக்கோலமாக மாறும் அழகே அழகு.

சிவன் கோவிலில் அணையும் நிலையிலிருந்த விளக்கின் திரியைத் தூண்டி எரியச் செய்த எலிக்கு புண்ணியம் கிடைத்தது. அது அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுத்தது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த எண்ணமே, ஆலயப் பணிகளில் மக்களை ஊக்கமுடன் ஈடுபடுத்துவதாக உள்ளது.

நல்லாட்சிக்கு இலக்கணமாக நாட்டை ஆண்டுவந்த மகாபலி, தானத்தில் சிறந்தவராகவும் விளங்கினார். நாடி வந்தவர்களுக்கு இல்லையென மறுக்காமல் தானம் செய்வதே மகாபலியின் இயல்பு. இவரால் போரில் வெல்லப்பட்ட தேவர்கள் திருமாலைச் சரணடையவே, வாமன அவதாரம் எடுத்து மகாபலியை சம்ஹாரம் செய்தார் என்று பாகவதம் கூறும். எத்தகைய வீரனும் அகந்தையால் அழிவான் என்பதையும் மகாபலியின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது.

எனினும், தனது தான தர்மத்தின் வலிமையால் இறைவனிடம் அவர் பெற்ற வரமே, அற்புதமான ஓணம் பண்டிகையை நாம் கொண்டாட வழிவகுத்திருக்கிறது. மூன்றடி நிலம் கேட்ட குறுமுனியின் தந்திரத்தை அறிந்தும், வாக்குத் தவறா வாய்மையின் இலக்கணமாக, தாரை வார்த்தார் மகாபலி. வாமனன் திரிவிக்கிரமனாக வளர்ந்து வானையும் பூமியையும் அளந்து நின்றபோது, தனது தலையையே மூன்றாம் அடிக்குக் கொடுத்து, மலையாள நாயகன் ஆனார்.

அன்று அவர் இறைவனிடம் கேட்ட வரமும் கூட மக்கள்நலம் சார்ந்ததாகவே இருப்பது, இன்றைய ஆட்சியாளர்களுக்கான பாடம். தனது மக்கள் நலமாக இருக்கிறார்களா என்று காண வரும் மன்னனை மகிழ்விக்க விழா கொண்டாடி தாமும் மகிழ்கிறார்கள் மக்கள். மக்கள் நலனை விரும்பும் மன்னன்! மன்னன் சந்தோஷமாகத் திரும்ப வேண்டும் என்று விரும்பும் மக்கள்!

ஓணம் திருவிழாவுக்கே உரித்தான ஓணம் சத்ய விருந்து, அத்தப் பூக்களம், ஓணக்களி, வள்ளம்களி ஆகியவை கேரளத்தின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன. இந்நிகழ்வுகளில் களிக்கும் தம் மக்களைக் கண்டு மகிழ்ந்து ஆசி அளித்து பாதாளம் திரும்புகிறார் மகாபலி.

இந்த விழாவின் இனிய நினைவுகளுடன் அடுத்த ஆண்டு வரை உழைப்பதற்கான உற்சாக ஊற்று எங்கும் பரவுகிறது. நமது முன்னோர் வாழத் தெரிந்தவர்கள். வாழ்வை இனிமையாக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் வழியில் நாமும் கொண்டாடுவோமா திருவோணம்?

நன்றி: தினமணி - கோவை (ஓண நிலாவு- விளம்பரச் சிறப்பிதழ்- 08.09.2011 )

No comments:

Post a Comment