Saturday, August 27, 2011

எண்ணங்கள்


ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஊழல்  குற்றச்சாட்டுகளை அடுத்து கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா பதவி விலகியது, பிற கட்சிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியதோ இல்லையோ, அவர் சார்ந்த பாஜகவுக்கு நிம்மதி அளித்திருக்கும். ஊழலுக்கு எதிராக தேசிய அளவிலான போரில் முனைப்பு காட்டும் பாஜகவுக்கு எடியூரப்பா ஒரு கரும்புள்ளியே. அதைவிட, அவரை பதவியிலிருந்து விலகவைக்க பாஜக மேற்கொண்ட பகீரத முயற்சிகள், அக்கட்சி மீது பரிதாபத்தையே ஏற்படுத்தின.
எந்த ஒரு தலைவரோ, தொண்டரோ கட்சியைவிட பெரியவர் அல்ல. எந்த ஒரு கட்சியும் தேசத்தைவிட பிரதானமானது இல்லை. இதுதான் ஜனநாயகத்தின் மூலாதாரம். தொண்டர்கள் இணைந்து இயக்கமாகிறார்கள். அதை திறமையுடன் வழிநடத்துபவர்கள் தலைவர் ஆகிறார்கள். அதே தலைவர்கள் தாங்கள் வளர்த்த இயக்கத்தையே சுயநலனுக்காக அடகுவைக்கத் துணியும்போது இயக்கங்களின் நிலை கேள்விக்குறி ஆகிறது.
 
ஜனநாயக அடிப்படையில் இயங்கும் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் நிலை, இதுபோன்ற தருணங்களில் தடுமாற்றத்துக்கு உள்ளாவது இயற்கையே. தனிநபரை முதன்மையாகக் கொண்ட எதேச்சதிகாரம் மிகுந்த கட்சிகளுக்கு இத்தகைய தர்மசங்கடங்கள் நேர்வதில்லை. இதற்கு மிகச் சரியான உதாரணம், காங்கிரஸ் கட்சி.
 
அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கே ஆயினும், நேரு குடும்பத்தின் ஆளுகைக்கு உட்பட்டாக வேண்டும். திமுக, அதிமுக, சமாஜ்வாதி, சிவசேனை, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், தெலுங்குதேசம் என பெரும்பாலான அரசியல் கட்சிகளிலும் குடும்ப ஆதிக்கம் அல்லது தனிநபர் ஆதிக்கமே கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
 
மாறாக, கொள்கையை முன்னிலைப்படுத்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு அடிக்கடி இத்தகைய சிக்கல்கள் நேரிடுகின்றன. பிற கட்சிகளின் செயல்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம் இக்கட்சிகளையும் பாதிக்கிறது.
 
இதில் வேடிக்கை என்னவென்றால், தனிநபர் மேலாதிக்கம் மிகுந்த கட்சிகளைப் பாராட்டும் ஊடகங்கள், அவற்றில் உள்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள்- உள்கட்சி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கட்சிகள் சுயநலத் தலைவர்களிடம் சிக்கித் தவிக்கும்போது, அவற்றை மேலும் காயப்படுத்துகின்றன.
 
பாஜகவுக்கு உயர்மட்டத் தலைவர்கள் பிரச்னையாவது புதிதல்ல. அதன் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் அகில பாரதத் தலைவராக இருந்த பால்ராஜ் மதோக் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதற்காக நீக்கப்பட்டிருக்கிறார். கோவிந்தாச்சார்யா, சங்கர்சிங் வகேலா, உமாபாரதி, கல்யாண் சிங், ஜஸ்வந்த் சிங் என சமீபகாலத்தில் கட்சிக்குள் சர்ச்சையைக் கிளப்பிய தலைவர்களுக்கு பாஜகவில் பஞ்சமில்லை.
 
மார்க்சிஸ்ட் கட்சியிலும் இதேபோன்ற காட்சிகள் உண்டு. திரிபுராவின் முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியும், கேரளாவின் கெüரியம்மாளும் மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சட்டர்ஜியும் கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் கூட கேரளா மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நிகழ்ந்துவரும் பினராயி விஜயன்- அச்சுதானந்தன் மோதல் அனைவரும் அறிந்தது.
ஆனால், இந்தியாவில் உள்ள கட்சிகளில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே உள்கட்சி ஜனநாயகம் ஓரளவேனும் காக்கப்படுகிறது. சரியான கால இடைவெளிகளில்  கீழிருந்து மேல்மட்டம் வரை உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது இக்கட்சிகளில் மட்டுமே.
 
இதன் காரணமாகவே, எந்த ஒரு பதவியிலும் யாரும் நிலையாக ஒட்டிக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை இக்கட்சிகளில் காணப்படுகிறது. புதிய தலைவர்கள் உருவாக இம்முறை வழிவகுத்தாலும், நிலையான ஆளுமை கொண்ட தலைவர்கள் இக்கட்சிகளில் உருவாவதில்லை. நரேந்திர மோடி, ஜோதிபாசு போன்ற தலைவர்கள் இதில் விதிவிலக்கு.
 
அத்வானி போன்ற மாபெரும் ஆளுமைகளும் கூட கட்சிக் கட்டுப்பாட்டின் முன் சரணடைந்த நிலையையும் கண்டிருக்கிறோம். அத்வானி தனக்கு கட்சியில் ஏற்பட்ட சரிவையும் கூட, கொள்கைக்கு முக்கியத்துவம் தந்ததால் பொறுத்துக் கொண்டார். அதையே எடியூரப்பாவிடமும் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். இது பாஜகவுக்கு கிடைத்துள்ள பாடம்.
 
எடியூரப்பாவும் அத்வானி வளர்ந்த அதே லட்சியச் சூழலில் வளர்க்கப்பட்டவர்தான். ஆனால், தனிநபர் குணாம்சங்கள் லட்சியக் கனவுகளை வென்றுவிடுகின்றன. இதற்கு தற்போதைய சுயநல அரசியல் உலகமும் ஒரு காரணம் எனில் மிகையில்லை. 
 
1990களில் ஹவாலா மோசடியில் தன்மீது புகார் கூறப்பட்டதும் தனது பதவிகளை ராஜிநாமா செய்த அத்வானி, அக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும்வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று சபதம் செய்தார். பிறகு அவரது நேர்மை நிரூபிக்கப்பட்டது. அவரும் மீண்டும் அரசியலுக்கு வந்து பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்.
 
அதேபோன்ற தார்மீக வேகம் எடியூரப்பாவிடம் இல்லாதது பாஜகவுக்கு மட்டுமல்ல, நல்லரசியலை விரும்பும் எவருக்கும் ஏமாற்றமே. அத்வானி போன்றவர்களுக்கு ஏற்படும் சரிவு, எடியூரப்பா போன்றவர்களை குறுக்குத்திசையில் சிந்திக்கச் செய்வதைத் தவிர்க்க முடியாது.
 
அரசியலில் தார்மீக நெறிகளின் வீழ்ச்சி, நமது ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும். குறைந்தபட்சம், கொள்கையை முன்னிறுத்தும் கட்சிகளேனும் சுயநலவாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். முன்னுதாரணங்கள் போற்றப்படுவதும், பின்பற்றப்படுவதுமே இதற்கான தீர்வு. சாமானிய இந்தியனின் எதிர்பார்ப்பும் இதுவே.

 

நன்றி: தினமணி (26.08.2011)
.

No comments:

Post a Comment