Monday, August 15, 2011

வசன கவிதை - 89

மூன்றாவது சுதந்திரப் போர் 

1857:


வியாபாரியிடம் அடகுவைக்கப்பட்ட

சுயஉரிமையை மீட்கத் துடித்த

வீரர்களின் வேகத்தால் கிளர்ந்தது

சிப்பாய்க் கலகம்.


அடிமைப்பட்டதை உணர்ந்த

நம் முதல்கணம் அது.

விட்டில்பூச்சிகளாய் அதில்

விழுந்த தியாகியர் ஆயிரம்!


1947:


வீட்டுக்குள் குத்துவெட்டு

நடத்திக்கொண்டு விண்ணப்பித்த

மக்கள் இயக்கம் மந்தம்நீங்க,

அடுத்தகட்டப் போராட்டம்

அஹிம்சையாய்த் துவங்கியது.


தடியடி, தூக்குமேடை,

சிறைவாசம், கல்லுடைப்பு,

நூல்நூற்பு, பகிஷ்கரிப்பு,

எனப் படிகள் பல தாண்டி,

லட்சக் கணக்கான

தேசியப் பைத்தியங்களால்

விலங்கு உடைந்தது.

நம்மை நாமே நமக்காய்

ஆள்வது சாத்தியமானது.


2011:


இப்போது நடப்பது

மூன்றாவது கட்டம்.

அரசியல் அராஜகம்,

ஆபத்தான மதவாதம்,

இடையூறான ஊழல்

இம்மூன்றும் வெறுத்த

மூன்றாவது தலைமுறை

நடத்தும் யுத்தம்

வளரட்டும் எங்கும்!


கோடிஇளைஞர்களின்

ஆவேசத்தின் முன்பு

அதிகாரபலம் பொடியாகட்டும்!

சுயநலக் கயவரின்

அரிதாரம் கலையட்டும்!

முந்தைய அனுபவம் வழிநடத்தட்டும்.

பிந்தைய தலைமுறை பயன்பெறட்டும்!

பாரதம் மீளவும் பண்படட்டும்!


நன்றி: தினமணி (கோவை) -(15.08.2011)
வந்தேமாதரம்- விளம்பரச் சிறப்பிதழ்
.

No comments:

Post a Comment