Thursday, August 4, 2011

எண்ணங்கள்


திசை திருப்பும் வாயாடிகள்... திணறுகிறது ஜனநாயகம்


இதுவரை காணாத மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு, புகார் கூறுபவர்களையே எள்ளி நகையாடி வருகிறது. லோக்பால் மசோதாவுக்காகப் போராடும் அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மிரட்டியது இருநாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முழுமையான லோக்பால் சட்டம் கொண்டுவராவிட்டால் தில்லியில் உண்ணாவிரதம் இருப்பதாக அண்ணா ஹசாரே அறிவித்தபோது, "ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஹசாரேவுக்கும் ஏற்படும்' என்று எச்சரித்தார் திக்விஜய் சிங். அதன்மூலமாக, ஊடகங்களின் கவனத்தை சில நாட்களுக்கு திசை திருப்பினார் அவர்.

இதன்மூலமாக யோகாகுரு பாபா ராம்தேவையும் அண்ணா ஹசாரேவையும் ஒப்புமைப்படுத்தினார் திக்விஜய் சிங். இவ்வாறு இருவேறு தரப்பினரை இணைத்துப் பேசுவதும், அதற்கு இரு தரப்பினரும் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதும் இவருக்கு கைவந்த கலை.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது 2ஜி ஊழலில் புகார் கூறப்பட்டவுடன், அதுபற்றிப் பேசாமல், சம்பந்தமே இல்லாமல் வலதுசாரி தீவிரவாதம் குறித்து எச்சரித்தார் அவர். மும்பையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை திசைதிருப்ப இந்து இயக்கங்களை வம்புக்கு இழுத்தார் திக்விஜய் சிங்.

சீறிவரும் காளையை துணியால் போக்குக் காட்டி திசை மாற்றும் உத்தியே இது. இப்போதைக்கு கபில் சிபல், மணிஸ் திவாரி, ஜெயந்தி நடராஜன் போன்ற பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கடைபிடிக்கும் தந்திரம் இதுவே.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களை மிகவும் லாவகமாகக் கையாள்வார். சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எதிரிகளை நிந்திப்பதும், கேள்வி கேட்பவர்களையே திசைதிருப்பி திக்குமுக்காட வைப்பதும் கருணாநிதியின் தனித்திறன். அதை திமுகவின் கூட்டாளியான காங்கிரஸýம் கற்றுக் கொண்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது.

"சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வழிநடத்தப்படுகிறார்' என்ற, அமைச்சர் கபில் சிபலின் வாதமும் இதே வகையானதுதான். இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதே கபில் சிபலின் நோக்கம். ஊழலுக்கு எதிராகப் போராட ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உரிமை உண்டு என்பது தெரியாதவரல்ல கபில் சிபல். ஆனால், மதவாத முத்திரை குத்தி ஊழலுக்கு எதிரான அறப் போராட்டத்தை சிதைப்பதே அவரது திட்டம்.

அண்ணா ஹசாரேவும், சந்தோஷ் ஹெக்டேவும் பாஜக-வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் நன்றாகவே அறிவர். கர்நாடகாவில் எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்தவர் சந்தோஷ் ஹெக்டே. மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக- சிவசேனை கூட்டணி அரசுக்கு எதிராகப் போராடி இருக்கிறார் ஹசாரே. ஆயினும் இரு தரப்பினரையும் கள்ள உறவாளிகளாகச் சித்தரிப்பது காங்கிரஸ்காரர்களின் தொடர் முயற்சியாக உள்ளது. இதற்கு பதிலளித்து தங்கள் சக்தியை விரயம் செய்கிறார்கள் ஊழலுக்கு எதிரான போராளிகள்.

இந்தப் பிரித்தாளும் தந்திரத்தை தெரிந்தோ தெரியாமலோ தொலைக்காட்சி ஊடகங்களும் பின்பற்றுகின்றன. யோகாகுரு பாபா ராம்தேவ் கூறுவதுபோல,  உண்ணாவிரதம் துவங்கும் முன்னர் காங்கிரஸ் காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அவர் சர்ச்சைக்குரியவராகத் தெரியவில்லை. பிறகே அவரது சொத்துக்கள் தோண்டப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு சமய சஞ்சீவியாக கைகொடுப்பவையாக ஆங்கில ஊடகங்கள் உள்ளன. அவற்றுக்கு தீனி போடுவது, திக்விஜய் சிங் வகையறாக்களின் வேலையாக உள்ளது.

ஊடக மேலாண்மை மட்டுமே போதும், ஊழல் படுகுழியிலிருந்து வெளிவந்துவிடலாம் என்று காங்கிரஸ் நம்புவதாகத் தெரிகிறது. அதற்காகவே வகுப்புக் கலவர தடுப்பு மசோதா போன்ற விபரீதமான முயற்சிகளையும் மத்திய அரசு அரங்கேற்றுகிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஊழல்புகார்களிலிருந்து அரசு தப்புவதற்கான கேடயங்களாக கர்நாடக அரசியலும், வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவும் இருக்கும் என்பது திண்ணம்.

பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவோ, வார்த்தை வித்தகர்களான காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லுக்கு நிற்பதிலேயே காலம் கடத்துகிறது. தன்மீதான தாக்குதலைத் தடுக்க முரட்டுத்தனமான தாக்குதல் நடத்துவது சதுரங்க விளையாட்டில் முக்கியமான தற்காப்பு உத்தி. இதையே காங்கிரஸ் செய்கிறது. இது புரியாமல், ஊழலுக்கு எதிராக பிரிந்துநின்று போராடும் பல தரப்பினரும் மேலும் பிளவுபடுகிறார்கள்.

"எதிர்க்கட்சிகள் மட்டும் யோக்கியமா என்ன?' என்று அண்மையில், திருவாளர் பரிசுத்தமாகப் போற்றப்படும் நமது பிரதமர் மன்மோகன் கேட்டிருக்கிறார். அதாவது, தான் யோக்கியமில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகளை தம்முடன் ஒப்பிடுகிறார்.

ஒருவேளை பிரதமரின் இந்த வாக்குமூலம் பிரச்னையை ஏற்படுத்தினால், இருக்கவே இருக்கிறது ராகுல் புராணம். மாயாவதி, நக்ஸல் பிரச்னை, குஜராத் விவகாரம், ரயில் விபத்துக்கள் என்று ஏதாவது ஒரு பிரச்னையைப் பெரிதுபடுத்தினால், இந்த விஷயம் சிறியதாகிவிடும்.

நூறுகோடி மக்களின் ஜனநாயகம் இப்போது சில வாயாடிகளின் வார்த்தை விளையாட்டுக்களில் சிக்கித் தவிப்பது குறித்து நாம் அறிந்திருக்கிறோமா? நமது ஜனநாயகத்தை அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்ற சாமியாடிகள் தான் மீட்க வேண்டும்.

நன்றி: தினமணி (04.08.2011) தலையங்கப் பக்க துணைக் கட்டுரை. 
.

No comments:

Post a Comment