Saturday, April 16, 2011

எண்ணங்கள்



கிரிக்கெட்டில் அரசியல் கலக்கலாமா?


அரசியலில் மதத்தைக் கலக்கக் கூடாது; மதத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. மொழியையும்கூட அவ்வப்போது இப்பட்டியலில் சேர்த்துக் கொள்வோருமுண்டு. இரண்டுமே உணர்ச்சிகரமானவை என்பதே அதற்குக் காரணம்.

அந்தப் பட்டியலில் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, கிரிக்கெட் போட்டியையும் அரசியலையும் கண்டிப்பாகக் கலக்கக் கூடாது என்று, போட்டி விதிமுறைகளிலேயேகூடச் சேர்க்கலாம் என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு உள்ள முக்கியத்துவம் வேறெந்த விளையாட்டுக்கும் இல்லை. கிரிக்கெட் வீரர்களைக் கனவு நாயகர்களாக வழிபடும் இளைஞர் கூட்டமும் இங்குண்டு. அதனால்தான், கிரிக்கெட் போட்டிகளுக்கு ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்நிலையில் 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, ரசிகர்களின் களமாக மட்டுமல்லாது, அரசியல்வாதிகளின் தளமாகவும் மாறியிருந்தது கூர்ந்த கவனத்துக்குரியது.

பிரபல அரசியல்வாதிகள் பலரும் தன்னை கிரிக்கெட் அபிமானியாகவும், தேசப்பற்றுள்ள குடிமகனாகவும் காட்டிக்கொள்ள இந்தக் கிரிக்கெட் போட்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சர் சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என இந்திய அரசியல் பிரபலங்கள் பலரையும் மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் காணமுடிந்தது.

திரைத்துறையினரும் இதில் சளைக்கவில்லை. ஐபிஎல் அணிகளை நடத்துவதில் போட்டியிடும் அரசியல்வாதிகளும் திரைத்தாரகைகளும் உலகக்கோப்பை போட்டிகளைக் காணாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம்.

கிரிக்கெட் போட்டியை ரசிக்கவும் ஆராதிக்கவும் சாதாரண ரசிகர்களுக்குள்ள அதே உரிமைகள் அரசியல்வாதிகளுக்கும் திரைத்தாரகைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால், தங்கள் மைதான இருப்பால் கிரிக்கெட் போட்டிக்கே உரித்த தனிப்பண்பை இவர்கள் மடை மாற்றுவதைத்தான் ரசிக்க முடியவில்லை.

இல்லங்களுக்கே கிரிக்கெட் போட்டியைக் கொண்டுவந்து சேர்க்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள், போட்டியை ரசிக்கும் பிரபலங்களை அடிக்கடி காட்டுகின்றன. அதன் விளைவாகவே, 'கிரிக்கெட் சிண்ட்ரோம்' என்று அழைக்கத்தக்கதாக, புதிய காட்சிகள் அரங்கேறுகின்றன.

கோவைக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடங்கத் தாமதமானதற்கும் கிரிக்கெட் போட்டியே காரணமானது. கிரிக்கெட் போட்டியை மைதானத்திலோ, வீட்டிலிருந்தபடியோ ரசிக்காத அரசியல் தலைவர், திறமையான தலைவரே அல்ல போலிருக்கிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக, நாட்டின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதிலும் அரசின் பங்காளியாகி இருக்கிறது கிரிக்கெட். அண்டைநாடான பாகிஸ்தானுடன் நிலவிவரும் உரசல்போக்கை மாற்றக் கிடைத்த அரிய வாய்ப்பாக, இந்திய- பாக். அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியை மாற்றினார் பிரதமர் மன்மோகன் சிங். அவரது அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மொஹாலி வந்து போட்டியை ரசித்துச் சென்றிருக்கிறார்.

எதிர்பார்த்தது போலவே, ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி இருநாட்டு உறவுகளும் மலர்ந்ததாக மகிழ்ந்தன. ஒரு கிரிக்கெட் போட்டியை இருநாட்டுப் பிரதமர்களும் அருகருகே அமர்ந்து ரசித்ததால், மும்பைத் தாக்குலுக்கும் நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் உதவிய பாகிஸ்தானின் பழைய சரித்திரத்தை மாற்றிவிட முடியாது. ஆனால், அமைதிக்கான நல்ல தொடக்கம் என்று இரு நாட்டு அரசியல்வாதிகளும் முழங்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிரிக்கெட்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இரு நாடுகளிடையே பேருந்துப் பயணத்தைத் தொடங்கியபோதும், இதேபோல அமைதிப் பிரசாரம் உச்சத்தை எட்டியது. அதன்பிறகே இந்தியா மீது பல மறைமுகத் தாக்குதல்களை பாகிஸ்தான் தொடுத்தது என்பதை நாடு மறந்துவிடாது.

இறுதிப்போட்டியில் இலங்கை அணியை மும்பையில் சந்தித்தது இந்திய அணி. அதில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. இப்போட்டியைக் காண குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், இலங்கை அதிபர் ராஜபட்சவும் வந்திருந்தனர். இரு நாடுகளிடையிலான சிறப்பான உறவை மேலும் மேம்படுத்த இந்தப் போட்டி உதவும் என்று நம்பியது நமது வெளியுறவுத்துறை.

இந்த அரசியல் விளையாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டுக்குப் பெருமை சேர்வதாகப் பலர் கருதலாம். உண்மையில் மதமோ, மொழியோ, கலைத்துறையோ, விளையாட்டோ எதுவாயினும் அரசியல் அதனுடன் சேர்ந்தால் அரசியலுக்குத்தான் லாபம் சேரும்.

உடனிருந்து கொல்லும் வியாதியாகவே இதுவரை அரசியல் இருந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் சுயநல விளையாட்டில் கிரிக்கெட் "கிளீன் போல்டு'ஆகிவிடவே வாய்ப்புகள் அதிகம். சுயலாபத்துக்காக தன்மீது சவாரி செய்பவர்களை, எஜமானர்களாகக் கருதும் குதிரையாக கிரிக்கெட் இருந்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி (15.04.2011)

தலையங்கப்பக்க துணைக்கட்டுரை

1 comment:

மனோவி said...

கிரிக்கெட்டே இப்போதெல்லாம் பெரிய அரசியல் ஆகி விட்டது..

அதில் (போர்டு) உள்ளவர்களில் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்கள் எத்தனை பேர்?

ஒரு ரெண்டு மூணு இருக்குங்களா?

Post a Comment