தேர்தல் களத்தில் பறந்த கூத்தாடிகளின் கொடி
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான நடவடிக்கைகளால் கட்சிக்கொடிகளின் எண்ணிக்கை குறைந்தது. பல இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அதேசமயம், "கூத்தாடிகள்' என்று ஒருகாலத்தில் விமர்சிக்கப்பட்ட திரையுலகினரின் பங்களிப்பு அமோகமாக இருந்தது. இந்தத் தேர்லில் தான் அரசியல் தலைவர்களின் பிரசாரத்திற்கு இணையாக திரையுலக நட்சத்திரங்களின் கொடி பறந்திருக்கிறது.
தமிழக அரசியலில் திரைத்தாரகைகளின் ஆதிக்கம் திராவிட அரசியல் கட்சிகளால்தான் முன்னெடுக்கப்பட்டது. பழம்பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு தமிழகத்தில் வித்திட்ட திராவிட இயக்கத்தின் செல்வாக்கிற்கு உதவியது திரையுலகம் தான்.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜி.ராமசந்திரன், எஸ்எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன், என்எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களின் திரையுலகப் பிரவேசமும் அவர்களது அரசியல் ஆவேசமும் தமிழக வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்படுத்தின. ஒரே நேரத்தில் திரையுலகிலும் அரசியலிலும் புரட்சிகரமான மாற்றம் 1960களில் நிகழ்ந்தது. நடிகர், நடிகையர் குறித்த கூத்தாடிகள் என்ற விமர்சனத்தைத் துடைத்ததில் திராவிட இயக்கத்தின் பங்கு அளப்பரியது.
திரையுலக நாயகர்களை அரசியல் தலைவர்களாக வரிக்கும் போக்கு அன்று துவங்கியது. அதன் விளைவாக, அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜி.ராமசந்திரன், ஜானகி, ஜெயலலிதா என திரையுலகினர் ஐந்து பேரை முதல்வர்களாக்கி அழகு பார்த்தது தமிழகம். அதன் தொடர்ச்சியாக, அரசியல் அபிலாஷைகளுடன் கட்சி துவக்கிய சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோரால் ஜொலிக்க முடியவில்லை.
இருப்பினும் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் திரைத்துறையினர் களம் இறங்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தனித்த திரையுலகப் பட்டாளம் உண்டு. தவிர, தேர்தல் நேரத்தில் கட்சிகளால் ஆசைகாட்டி அழைக்கப்படும் நடிக நடிகையரும் பிரசாரத்தில் இடம் பெறுவதுண்டு. ஆனால், இம்முறை நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இதுவரை நடந்த தேர்தல்களில் கொடுக்கப்பட்டதில்லை.
அரசியல் கனவுகளுடன் தேமுதிக என்ற கட்சியைத் துவங்கிய விஜயகாந்த் அதிமுக அணியில் பிரதான இடம் பெற்றார். இதற்காக, கூட்டணித் தோழரான வைகோவைக் கழற்றிவிட்டார் ஜெயலலிதா. நடிகர் அருண் பாண்டியன் தேமுதிக சார்பில் வேட்பாளராக களம் இறங்கினார்.
சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கும் சரத்குமாரும் அதிமுக அணியில் இடம் பெற்று மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார். அவரது துணைவியும் நடிகையுமான ராதிகா இம்முறை பிரசாரத்தில் ஈடுபடாதது குறிப்பிட வேண்டிய விஷயம். எம்பியும் நடிகருமான எஸ்எஸ்.சந்திரன் மறைவு அதிமுகவுக்கு இழப்பே.
அதிமுகவின் முன்னாள் பிரசாரகர் ராமராஜன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இயக்குநர் ஆர்வி.உதயகுமார், நடிகர்கள் ராதாரவி, செந்தில், ஆனந்தராஜ், சிங்கமுத்து, நடிகைகள் சிகே.சரஸ்வதி, விந்தியா ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
இவர்களில் சிங்கமுத்து, அவரது வழக்கு எதிராளி வடிவேலுவின் திமுக ஆதரவு பிரசாரத்துக்கு பதிலடி கொடுப்பதற்காகவே களமிறக்கப்பட்டார். திரையுலகின் அதிருப்தியை வெளிப்படுத்த விஜயின் தந்தை இயக்குநர் எஸ்ஏ.சந்திரசேகர் களமிறங்கினார்.
திமுக.வுக்கு வாகை.சந்திரசேகர், குமரிமுத்து, தியாகு, எம்பி நெப்போலியன் போன்ற நிரந்தர நடிகர் பட்டாளம் எப்போதும் உண்டு. இம்முறை இயக்குநர் பாக்கியராஜ், பிரசாந்த், நடிகை குஷ்பு, லியோனி ஆகியோருடன் நகைச்சுவை நடிகர் வடிவேலின் அரசியல் பிரவேசம் திமுகவுக்கு உற்சாகம் அளித்தது.
குறிப்பாக, குஷ்புவின் கவர்ச்சியும், வடிவேலுவின் நையாண்டி பிரசாரமும் வாக்காளர்களைத் திரட்டுவதில் திமுகவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததை பல இடங்களில் காண முடிந்தது. திமுக தலைவர் கருணாநிதிக்கு கூடும் அளவிற்கு வடிவேலுக்கும் மக்கள் கூட்டம் திரண்டது. அதேசமயம், கோவையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற நிகழ்வில் இருக்கைகள் காலியாகக் கிடந்த காட்சியையும் காண முடிந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, எஸ்வி.சேகர், விக்ணேஷும், பாஜகவுக்கு தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி இரானியும் பிரசாரம் செய்தனர். கட்சி துவங்கி சுட்டுக்கொண்ட டி.ராஜேந்தர் இம்முறை களத்திலிருந்து ஒதுங்கியதால் பல நகைச்சுவைக் காட்சிகளை வாக்காளர்கள் இழக்க நேரிட்டது.
வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தனது இருப்பை நிரூபித்தார். "வாய்ஸ்' புகழ் ரஜினிகாந்த் எந்தப் பக்கமும் சேராமல் அமைதி காத்தது அவர்களது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்தார்.
இம்முறை இயக்குநர் சீமானின் பிரசாரம் திமுக கூட்டணிக்கு குடைச்சல் கொடுத்தது நிஜம். காங்கிரஸýக்கு எதிரான நிலைப்பாட்டுடன் கூடிய அவரது ஆவேசச் சொற்பொழிவு வாக்காளர்களிடம் பிரதிபலிக்கும் வாய்ப்புள்ளது.
நடந்து முடிந்த தேர்தலின் பிரசாரக் களத்தில் விஜயகாந்த், வடிவேலு, குஷ்பு, சீமான் ஆகியோரின் பங்களிப்பு அதிகம்; மக்கள் ஆதரவையும் இவர்கள் பெற்றனர். கொள்கைகளை விளக்கி அரசியல் நடத்த முடியாத அவல நிலைக்கு நமது அரசியல் கட்சிகள் சென்றுவிட்டதை திரையுலகினரின் அரசியல் பிரவேசம் காட்டுகிறது.
1960 களில் திராவிடக் கட்சிகளின் கரங்களுக்குள் தமிழக அரசியல் வர உதவிய அதே திரையுலகம், இப்போது, அவர்களது அரசியல் நெறிகளின் வீழ்ச்சிக்கும் சான்றாக இருப்பது காலத்தின் கோலம்.
நாவன்மையுடன் கொள்கைகளை விளக்கும் அரசியல் தலைவர்களைவிட கவர்ச்சியை மூலதனமாகக் கொண்ட திரைத்தாரகைகளே தமிழக அரசியலை நிர்ணயிப்பவர்களாக மாறி இருக்கிறார்கள். அரசியல் தரம் மேலும் வீழ்ச்சி அடைகிறது; சரித்திரம் திரும்புகிறது.
.
No comments:
Post a Comment