Wednesday, November 21, 2012

பழனியிலிருந்து ஒரு பாதயாத்திரை- சிறுகதை


தூரத்தில் மலையும் கோயிலும் தெரிந்தபோதே கன்னத்தில் போட்டுக் கொண்டார் மருதாசல கவுண்டர். ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் வாங்க நிற்கும் கும்பல் போல பயணிகள் பஸ்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியே வந்த மெல்லிய காற்று இல்லாவிட்டால் உள்ளே இருக்க முடியாது.

கவுண்டரின் பேரன் ரங்கநாதன் பக்கவாட்டில் நசுக்கியபடி உராய்ந்து நின்ற குண்டு மனிதரைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். ஆனால் அவனது கஷ்டம் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. இன்னும் கால் மணிநேரம் தான், பழனி வந்துவிடும். எட்டாம் வகுப்பு காலாண்டு பரீட்சை லீவ் நேற்றுத்தான் துவங்கியிருந்தது. லீவில் உருப்படியான காரியமாக, பலநாள் வேண்டுதலை நிறைவேற்ற பேரனை அழைத்துக்கொண்டு பழனி செல்கிறார் கவுண்டர்.

பஸ்சுக்குள் சந்தைக்கடை இரைச்சல். பின்சீட்டில் யாரோ கொய்யாப்பழம் சாப்பிடும் வாசனை. பழனி கொய்யாப்பழத்துக்கு பிரபலம். வீடு திரும்பும்போது பேத்திக்கு வாங்கிப்போக வேண்டும். ஆனால் போனமுறை வந்தபோது ஏமாந்தது போல இம்முறை ஏமாந்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டார். அப்போது தனது முகத்தில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டதை யாரும் பார்த்துவிட்டார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டார். யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவருக்கு அவரவர் கவலை.


கடைசியாக பழனி வந்தது நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய தைப்பூச சமயம். ஏழெட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்ததால் பழனி பஸ்நிலையம் மாறியிருந்தது. கிராமத்து ஆளான கவுண்டர் சற்று தடுமாறித்தான் போனார். பஸ்நிலையத்தின் மறுபுறம் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் பஸ் நின்ற இடம் அவருக்குப் புலப்படவில்லை. எனவேதான் கோயிலுக்குச் செல்ல வழிகேட்க பக்கத்தில் நின்றவரை அணுகினார் கவுண்டர். அப்படித்தான் அவனிடம் மாட்டிக்கொண்டார்.

அதை நினைத்தபோதே சிலிர்த்துக்கொண்டது. பழனி வரும் புதிய நபர்களை மொட்டையடிக்கவென்றே ஒரு கும்பல் பஸ்நிலையத்தில் காத்துக் கிடக்கும். புதியவர்களைப் பார்த்தவுடன் அவர்களுக்கு பொறிதட்டிவிடும். முட்டுச்சந்தில் சிக்கிய ஆடுபோல திருதிருவென விழித்த மருதாசல கவுண்டர் புரோக்கர் பொன்னுசாமியிடம் மாட்டியது இப்படித்தான்.

“வாங்க ஐயா. பழனிக்குப் புதுசுங்களா? என்ன முடி காணிக்கையா?” பொன்னுசாமியின் கரிசனமான பேச்சில் தூண்டில் இருந்தது கவுண்டருக்குத் தெரியவில்லை. கிராமத்து வெள்ளைச்சோளம். வானம் பார்த்த பூமியில் சோளம் விதைத்தே காலம் கரைந்து போனவர் அவர். “ஆமாம்ப்பா, ஆச்சு ஏழெட்டு வருஷம் பழனி வந்து. எல்லாம் மாறிப்போச்சா? அதான்…” என்று இழுத்தார்.

“விடுங்க பெரியவரே. வாங்க நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்” கவுண்டரின் பதிலுக்குக் காத்திருக்காமல், அவரது மஞ்சள்பையை கிட்டத்தட்ட பறித்துக்கொண்டு முன்னால் செல்லத் துவங்கினான் பொன்னுசாமி. அவர்களுக்கு எதிரே ஆடு ஒன்றைப் பிடித்திழுத்தபடி கசாப்புக் கடைக்காரன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். ‘அப்போதாவது சுதாரித்திருக்க வேண்டும்’. பஸ்சுக்குள் மீண்டும் தலையை சிலுப்பிக் கொண்டார் கவுண்டர். ரங்கநாதன் தாத்தாவை வித்யாசமாகப் பார்த்தான்.

கன்னிவாடியைச் சேர்ந்தவனாம். ஊரில் நாற்பது ஏக்கர் பூமி இருக்கிறதாம். பாகத்தகராறில் விதைக்காமல் கிடப்பதாகப் புலம்பினான் பொன்னுசாமி. இன்னும் கல்யாணமாகவில்லை என்றான். பார்த்தால் அப்படித் தெரியவில்லை. முன்வழுக்கை விழுந்து, தொப்பை சரிந்து, காவிப்பற்கள் தெரிய அவன் சொன்ன தகவல்கள் எதுவும் நம்பகமாக இருக்கவில்லை. ஆனாலும், பழனி வரும் பக்தர்களை கோயிலுக்கு அழைத்துச்சென்று வழிகாட்டி, அவர்கள் கொடுக்கும் அஞ்சோ பத்தோ பணத்தைக் கொண்டுதான் ஜீவனம் நடத்துவதாகக் கூறியபோது கவுண்டர் கொஞ்சம் மனமுருகித்தான் போனார்.

கோவில் பாதையின் இருபுறமும் கடைகள். பெரிய அண்டாக்களுடன் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் கடைகளில் பிளாஸ்டிக் டப்பாக்கள் அடுக்கி வைக்கப்படிருந்தன.  பிளாஸ்டிக் சாமான்கள், பொம்மைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், சாமி படங்கள், ஐயப்பசாமி மாலைகள், முருகன் டாலர்கள், பழங்கள், விபூதி, சந்தனம், குங்குமம், பூஜைப்பொருள்கள், உப்பிய பூரிகள், பொரி கடலை, பேரிச்சை, என ஒவ்வொரு கடையிலும் பக்தர்கள் வரவுக்காக பொருட்கள் காத்திருந்தன.

கவுண்டரை இழுத்துக்கொண்டு சென்ற பொன்னுசாமி, கோயில் பாதையில் இருந்து இடதுபுறம் சென்ற சந்துக்குள் நுழைந்தான். சந்தனமும் பன்னீரும் மணந்த அந்தக் கடை முன்பு நின்றபோது, ஏதோ அவனுக்கு வாங்கத்தான் சென்றிருக்கிறான் போல என்று நினைத்துக் கொண்டார் கவுண்டர்.

வேகமாக நடந்து வந்ததில் கவுண்டருக்கு மூச்சிரைத்தது. காலையிலிருந்து விரதம் இருந்ததில் ஏற்பட்ட களைப்பு அசத்தியது. தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தார். பக்கத்து கலர்க்கடையில் சோடா வாங்கி அப்படியே வாய்க்குள் சரித்துக் கொண்டார்.

“விபூதி பெரிய பாக்கெட் ஒன்னு, சந்தனம் பத்து ரூபாய்க்கு, நயம் குங்குமம் அஞ்சு ரூபாய்க்கு, மஞ்சள்தூள் அஞ்சு ரூபாய்க்கு, கட்டிக் கற்பூரம், ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி ஒரு பாக்கெட், கல்கண்டு, பேரிச்சை, தேங்காய், பழம், பூ, வெற்றிலை, பாக்கு, பன்னீர் பாட்டில் ஒன்னு, சம்பங்கி மாலை ஒன்னு,…” பொன்னுசாமி மடமடவென பட்டியலிடுவதையும் அந்தப் பொருள்கள் தட்டைக்கூடையில் இடம் மாறுவதையும் பார்த்தபடியே கடைக்கு வந்தார்.

“மொத்தம் நூத்தெம்பது ரூபாய்” என்று கடைக்காரன் சொல்லவும், அங்கு கவுண்டர் சென்று சேரவும் சரியாக இருந்தது. “ஐயா, நூத்தெம்பது ரூபா கொடுங்க” உரிமையோடு கேட்ட பொன்னுசாமியைப் பார்த்தபோது திக்கென்று இருந்தது கவுண்டருக்கு. இத்தனை பொருளும் தனக்காகத் தான் பொன்னுசாமி வாங்கினான் என்பதைப் புரிந்துகொள்ள வெகுநேரம் ஆகவில்லை கவுண்டருக்கு. ஆள்தான் வெள்ளைச்சோளமே தவிர, கவுண்டருக்கு கற்பூரபுத்தி.

‘ஏம்ப்பா, இதெல்லாம் எதுக்கு?’ என்று கேட்க வாயெழுந்தாலும், ஆகிருதியான கடைக்காரனைப் பார்த்ததும் ஏனோ குரலே வெளிவரவில்லை. ஊரில் மருதாசல கவுண்டர் வந்தாரென்றால், பஞ்சாயத்து திண்ணையில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் விடலைகள் கூட தலைதெறிக்க ஓடுவார்கள். அது சொந்த ஊரில். அறுபது மைல் தள்ளி வந்திருக்கும் புது ஊரில் அவரது ஜம்பம் எடுபடுமா என்ன?

இருந்தாலும் பதில் சொன்னான் பொன்னுசாமி. “ஐயா, முடி காணிக்கை கொடுக்கணும்னு சொன்னீங்களே. இப்ப இந்தக் காணிக்கைச் சாமானெல்லாம் கொடுக்கணும்னு கோயில்ல ரூல்ஸ் கொண்டுவந்திருக்காங்க. இதைக் கொடுத்தால் சாமியை சீக்கிரமாப் பார்க்கலாம். ரொம்பநேரம் கும்பிடலாம்…”

இது சரியென்று பட்டது கவுண்டருக்கு. பணம் சாமிக்குத்தானே செலவாகிறது. எப்படியோ புண்ணியம் தான். கவுண்டரின் கை தானாக அண்டர்வேருக்குள் சென்றது. வெள்ளரிக்காய் விற்ற பணம் வியர்வையில் நனைந்து குளிர்ந்தது.

அப்போதுதான் கவனித்தார், பக்கத்திலேயே தனது பூஜை சாமான்களுடன் ஒடிசலான பெண்ணொருத்தி நிற்பதை. 45 வயது இருக்கும். நூல்சேலை. செம்பட்டை முடியைச் சுருட்டி கொண்டை போட்டிருந்தாள். ஸ்டிக்கர் பொட்டு. முகத்திலேயே வறுமை தெரிந்தது. “ஐயா, இவ உங்களை கோயில் மூலஸ்தானம் வரை கொண்டுபோய் விட்டிருவா. கவலைப்படாமப் போய்ட்டு வாங்க. தேவானை பத்திரமாக் கூட்டிட்டுப் போ பெரியவரை” சட்டைப்பையிலிருந்து பீடியை எடுத்தபடி சொன்னான் பொன்னுசாமி.

அப்படியானால், இவன் கூட வரப்போவதில்லையா? பரவாயில்லை, கூடையைச் சுமக்க ஆளாவது அனுப்புகிறானே. “அப்பனே முருகா, சண்முகநாதா” பெருமூச்செறிந்தார் கவுண்டர்.

கோயில் பாதையெங்கும் மொட்டைத்தலைகள் பரவலாகத் தெரிந்தன. சேவக்கட்டுக் கூட்டாளி கோவிந்தனைக் கூட்டிவந்திருக்க வேண்டும். அவன் கொஞ்சம் விவரமான ஆள். அவனுக்கு சுகமில்லாமல் போய்விட்டதால் தானே தனியாக வர வேண்டியதாகிவிட்டது. “ஐயா, இங்கதான் முடி கொடுக்கணும்” தேவானையின் குரல் சிந்தனையைக் கலைத்தது.

டோக்கன் வாங்கி, நாவிதர் கேட்ட பத்து ரூபாயைக் கொடுத்து முடி காணிக்கை கொடுத்த பிறகு, பக்கத்தில் கட்டணக் குளியலறையில் குளித்து ஆடை மாற்றிக் கொள்ளும்வரை, அவரது செருப்பின் அருகிலேயே தட்டைக்கூடையுடன் நின்றிருந்தாள் தேவானை. இளவெயில் அவளது முகத்தில் மின்னியது.

***

பஸ் திடீரென ஒரு குலுக்கலுடன் நின்றது. டயர் பஞ்சர் என்றார் டிரைவர். எப்படியும் அரைமணி நேரமாகிவிடும். இன்னமும் 2 மைல்தான். ஆனால் கொளுத்தும் வெயிலில் நடந்துபோக முடியாது. பஸ்சுக்குள் நெரிசல் குறைந்தது. பஸ்சை விட்டு இறங்கி சிலர் சிகரெட் புகைத்தனர். பேரன் சிறுநீர் கழிக்க கீழிறங்கிச் சென்றான். போகும்போது தாத்தாவை அவன் பார்த்த பார்வையில் ஏதோ குழப்பம் இருப்பதாகத் தோன்றியது.

மலைக்கோயில் இப்போது தெளிவாகவே தெரிந்தது. அரோகரா கோஷத்துடன் பாதயாத்திரை பக்தர்களின் ஓட்டம் கடந்து சென்றது. பக்கத்து மரத்திலிருந்து ஒற்றைக்காகம் கரைந்தது. நினைவுகள் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளுக்குச் செல்ல, கூடையுடன் செல்லும் தேவானையை மொட்டைத்தலையுடன் கவுண்டர் பின்தொடர்ந்தார். தலையில் தடவிய சந்தனவாசம் கலந்த மாவு ரொட்டியாகக் கழன்றுவந்தது. கழுத்தில் வியர்வை வழிய, தலையைத் தடவிக்கொண்டார்.

மலையடிவாரத்தில் பாதவிநாயகரை வலம்வந்து தரிசித்தபிறகு, ஆனைப்பாதையில் ஏறத் துவங்கியதுதான் தெரியும். அரைமணி நேரத்தில் கோயில் வந்துவிட்டது. இடையே இடும்பன் சன்னிதி, சர்ப்ப விநாயகர் சன்னிதிகளில் வழிபட நின்றபோது சற்றே மூச்சு வாங்க முடிந்தது. அப்போதுதான் கவனித்தார், பூஜைச்சாமான்களை சுமந்து வந்தாலும் சிறிதும் களைப்பின்றி தேவானை நிற்பதை. தினசரி மலையேறி ஏறி பழக்கமாகிவிட்டதுபோல. சிறுவயதில் அழகாக இருந்திருப்பாள்.

பொன்னுசாமி சொன்னதுபோலவே, நேராக கருவறைக்கே பக்கவாட்டுக் கதவு வழியாக அழைத்துச் சென்றுவிட்டாள் தேவானை. திவ்ய தரிசனம். அர்ச்சகரின் காதில் அவள் ஏதோ சொல்ல, அவர் நேரே கவுண்டரிடம் வந்தார். கையிலிருந்த பூமாலையை கழுத்தில் சூட்டினார். இருபது ரூபாய் தட்சிணை கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

கோயிலை விட்டு வெளிவந்ததும், தேவானை கேட்காமலே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் கவுண்டர். இவ்வளவு தூரம் நம்மோடு மலையேறி இருக்கிறாள், இதுகூடக் கொடுக்காவிட்டால் எப்படி? அவள் பெரிய கும்பிடு போட்டுவிட்டு வெற்றுக் கூடையுடன் போனாள்.

அர்ச்சனைப் பொருள்களால் மஞ்சள்பை கனத்தது. கோயில் உண்டியலில் ஐம்பது ரூபாய் போட்டுவிட்டு, தேவஸ்தான அபிஷேகக் கடையில் பஞ்சாமிர்தம் வாங்கினார். அப்போதுதான் தெரிந்தது. பையிலிருந்த பணம் ஊர்போய்ச் சேர போதாது என்பது. “அப்பனே முருகா, சண்முகநாதா”.

***

  பஸ் டயர் மாற்றிப் புறப்பட்டுவிட்டது. மீண்டும் நெரிசல். பழனி பஸ்நிலையத்தில் வழக்கம்போலக் கூட்டம். பஸ்ûஸவிட்டு இறங்கியவுடன் திருத்திருவென விழித்த பேரனை அதட்டினார் மருதாசல கவுண்டர். “ரங்கநாதா வெளியூருக்கு வந்தா பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பாக்கறது மாதிரி முழிக்கக் கூடாது”.

எப்போதும் வாஞ்சையுடன் பேசும் தாத்தா ஏன் இப்போது எரிந்து விழுகிறார்? ரங்கநாதனுக்கு குழப்பம். அவனுக்குத் தெரியுமா, பழனியிலிருந்து பாத யாத்திரையாகவே தாத்தா ஊர் திரும்பிய கதை?

- தினமணி தீபாவளி மலர்- 2012
.


2 comments:

Post a Comment