Tuesday, August 7, 2012

எண்ணங்கள்


மிரட்டும் பிளக்ஸ் விளம்பர பேனர்கள்


எந்த ஒரு நவீனக் கண்டுபிடிப்பும் அதன் பயன்பாட்டில்தான் மதிப்பு பெறுகிறது. பாறைகளை உடைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட 'டைனமைட்' இன்று உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் கொடூர ஆயுதம் ஆகியிருப்பது இதற்கு உதாரணம்.

இதேநிலையில்தான் 'பிளக்ஸ் பேனர்' எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அச்சிடப்படும் விளம்பரங்களும் உள்ளன என்று சொன்னால் மிகையில்லை.

டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியால் புகைப்படங்களை உள்ளது உள்ளபடி அச்சிடும் வசதி இருப்பதால், சுயவிளம்பரத்தைத் தேடிக்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளின் எளிய சாதனமாக பிளக்ஸ் விளம்பரங்கள் மாறி இருக்கின்றன.

வர்த்தக நிறுவனங்களும் கூட நீண்ட நாள் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு பிளக்ஸ் விளம்பரங்களையே நாடுகின்றன. இதன் காரணமாக புற்றீசல்போல எங்கு பார்க்கினும் பிளக்ஸ் விளம்பரங்களே கோலோச்சுகின்றன. இவற்றின் ஆபத்து குறித்து யாருக்கும் கவலையில்லை.


பிளக்ஸ் விளம்பரம் அச்சிடப்படும் துணி போன்ற பொருள், பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி.) எனப்படும் ரசாயனப் பொருளால் தயாரிக்கப்படுவது. இது மக்காத தன்மை கொண்டது. இதில் அச்சிடப் பயன்படுத்தும் மையும் மிகுந்த நெடியுடைய ரசாயனத் திரவமே. இவை இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை.

அடிப்படையிலேயே ஆபத்தைச் சுமந்துகொண்டுள்ள பிளக்ஸ் விளம்பரங்களை வரைமுறையின்றி வைப்பதாலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. முச்சந்திகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகனங்களை மறைக்கும் வகையிலும் வைக்கப்படும் பிளக்ஸ் விளம்பரங்களால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளின் கவனங்களையும் இவை சிதறச் செய்கின்றன.

வர்த்தக நிறுவனங்களை மறைக்கும் வகையில் வைக்கப்படும் விளம்பரங்களால் ஆங்காங்கே சச்சரவுகளும் நிகழ்கின்றன. பிளக்ஸ் விளம்பரங்களைக் கிழிக்கும் அரசியல் கலாசாரமும் பல இடங்களில் மோதலை ஏற்படுத்துகிறது.

சாலையோரம் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்களின் கம்புகள் நீட்டிக்கொண்டு, போவோர் வருவோரைப் பதம் பார்க்கின்றன. தவிர இவற்றை நடுவதற்காக, ஏற்கெனவே மோசமான நிலையிலுள்ள தார்ச் சாலையைத் தோண்டுகின்றனர்.

இதுவும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றைத் தரையில் ஊன்றி நிறுத்தும்போது ஏற்படும் விபத்துகள் விபரீதமானவை. பேனர் நடுவதற்கு வைத்த இரும்புக் கம்பம் உயரத்தில் சென்ற மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடக்கின்றன.

மின்பாதை, மின்கம்பம், மின்மாற்றிகள் அருகே பிளக்ஸ் விளம்பரங்கள் வைக்கக் கூடாது என்ற விதியைக் கடைப்பிடித்திருந்தாலோ, விளம்பர அளவுக் கட்டுப்பாட்டை மீறாமல் இருந்திருந்தாலோ, பேனர் வைத்தவர்கள் இப்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

வேகமாக காற்று வீசும்போது பேனர் சரிந்து விழுந்து பாதசாரிகளும் வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், பிளக்ஸ் விளம்பர மோகம் நம்மிடையே அதிகரித்தபடியே இருக்கிறது. இதற்கு நவீன அச்சு இயந்திரங்களின் வருகையும் எளிதில் மங்கிவிடாத வண்ண அச்சும்தான் காரணம்.

தொழில் போட்டி காரணமாக இதற்கான அச்சுச் செலவு வெகுவாகக் குறைந்ததும் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த பிளக்ஸ் பேனர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் காவல்துறைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பேனர் எண்ணிக்கைக்கும், அளவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட சில நாட்கள் முன்னதாக மட்டுமே விளம்பரம் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்பது முக்கியமான விதியாகும். அதேபோல, நிகழ்ச்சி முடிந்தவுடன் அவற்றை வைத்தவர்களே உடனடியாக அகற்றிவிட வேண்டும் என்றும் விதி இருக்கிறது.

ஆனால், விதிகள் இருப்பதே மீறத்தானே? அளவு வரையறை, எண்ணிக்கைக் கட்டுப்பாடு, கால அவகாசம், சாலை விதிகள் ஆகியவற்றை மீறும் வகையில் பேனர்கள் அமைப்பதே இப்போது நடைமுறையாக இருக்கிறது. இதில் ஆளும் கட்சியினருக்கு என்றுமே சிறப்புரிமை உண்டு.

ஆளும் கட்சியினரே விதிகளை மீறும்போது, பிறரும் அவர்களைத் தொடர்கின்றனர். விளைவாக, விபத்துகளும் பாதிப்புகளும் தொடர்கதையாகின்றன.

தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அச்சுத் தொழில் வளர்ச்சியையும் யாரும் தவிர்க்க இயலாது. எனினும், கடுமையான விதிகளை உருவாக்குவதும், மீறுவோருக்கான தண்டனைகளை உறுதிப்படுத்துவதும் விபரீதங்களைத் தடுக்கத் தேவையே. பிளக்ஸ் பேனர்களை நிறுவ கண்டிப்பான விதிமுறைகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. இதைச் சரியான நேரத்தில் செய்வதே பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.

-தினமணி (06.08.2012)
.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான தகவல்கள்... நன்றி...

Post a Comment