Friday, April 27, 2012

எண்ணங்கள்

உணர்ச்சிகளைத் தூண்டும் நேரமல்ல இது...

 

1999-ஆம் ஆண்டு, டிசம்பர் 30-ஆம் தேதி, நேபாளத்திலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தலிபான்களால் நடுவானில் கடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்தில் இறக்கப்பட்ட அந்த விமானத்தில் பிணைக் கைதிகளாக 178 பயணிகள் இருந்தனர்.

அவர்களை விடுவிக்க, இந்தியச் சிறைகளில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க நிறுவனர் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று தலிபான்கள் மிரட்டினர்.

இதையடுத்து, தலிபான்களுடன் பேச்சு நடத்த அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காந்தஹார் சென்றார். அவரே பயங்கரவாதிகள் மூவரையும் தலிபான்களிடம் ஒப்படைத்து, விமானத்தையும் பயணிகளையும் சிப்பந்திகளையும் மீட்டு வந்தார்.

இந்தச் சம்பவத்தில் தலிபான்களால் மீட்கப்பட்ட மசூத் அசார், பின்னாளில் 2001 டிசம்பரில் தில்லி நாடாளுமன்றம் மீது நடந்த தாக்குதலிலும், மும்பையில் 2008 நவம்பரில் நடந்த பயங்கரத் தாக்குதலிலும் மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது. இன்று உலகில் தேடப்படும் அதிபயங்கரக் குற்றவாளி என்று இவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

1989, டிசம்பர் 8-ஆம் தேதி காஷ்மீரில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா சயீத் பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த, சிறையிலுள்ள ஐந்து பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. தனது மகளை விடுவிக்க உள்துறை அமைச்சரே நேரில் சென்று பேச்சு நடத்தினார். இறுதியில் 5 பயங்கரவாதிகளை விடுவித்து, மகளை மீட்டு வந்தார் அன்புத் தந்தை. விடுவிக்கப்பட்ட அந்தப் பயங்கரவாதிகளால் ஜம்மு காஷ்மீரில் இன்றும் தொடர்கிறது பிரிவினைப் போராட்டம்.

இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் அரசின் மீது நமது ஊடகங்கள் செலுத்திய நிர்பந்த வலிமை அளப்பரியது. இதுபோன்ற ஆள்கடத்தல்களின்போது, ஊடகங்கள் பல சமயங்களில் தாங்களே தீர்ப்பு வழங்கும் நிலைக்குச் சென்று விடுகின்றன.

கடத்தப்பட்டவர் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அதேசமயம், கடத்தல்காரர்களுடன் அரசு பேச்சு நடத்திக் கொண்டிருக்கும்போது, அரசை நிலைகுலையச் செய்வதாக ஊடகங்கள் செயல்படக் கூடாது. ஆனால், பரபரப்புக்காக ஊடகங்கள் எல்லை மீறுகின்றன.

காந்தஹார் விமானக் கடத்தலின்போது, நமது 24 மணிநேர செய்தி சேனல்களின் நேரடி ஒளிபரப்பு ஒருவகையில் தலிபான்களுக்கு உதவுவதாகவே அமைந்தது. பிணைக் கைதிகளின் உறவினர்கள் நடத்திய போராட்டங்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கடத்தல்காரர்களின் பிடியில் விமானம் இருந்தபோது, பத்திரிகைகளும் ஊடகங்களும் தினசரி அரசைக் கடுமையாகக் கண்டித்துச் செய்திகள் வெளியிட்டு, அரசின் தன்னம்பிக்கையைக் குலைத்தன. அதனை பின்னாளில் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அரசு மீது செலுத்தப்பட்ட நிர்பந்தமே பயங்கரவாதிகளிடம் அரசு அடிபணியக் காரணமானது என்று அவர் கூறியிருக்கிறார்.

அதேபோன்ற நிலைதான் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் விவகாரத்திலும் காணப்படுகிறது. கடந்த 21-ஆம் தேதி வனப்பகுதியில் அரசு விழாவில் பங்கேற்ற சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டிருக்கிறார். அதற்கு முன் இரு காவலர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஏற்கெனவே ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் ஒரு மாதத்துக்கு முன் கடத்தப்பட்ட ஆளும் பிஜு ஜனதாதள எம்எல்ஏ ஜினா ஹிகாகா விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அதற்கு முன் கடத்தப்பட்ட இரு இத்தாலியர்களை மீட்பதற்காக 13 மாவோயிஸ்டுகளை ஒடிசா அரசு சிறைகளிலிருந்து விடுவிப்பதாக அறிவித்திருக்கிறது.

இனி இத்தகைய ஆள்கடத்தல் நாடகங்கள் தொடர்கதையாகக் கூடும். மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ளும் திறனற்று நமது அரசுகள் திண்டாடும் நிலையில், அரசுக்கு மேலும் சுமையாகின்றன, ஊடகங்களின் செய்திகள். சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழக ஊடகங்கள் இதில் விசேஷ கவனம் செலுத்துகின்றன.

கடத்தப்பட்ட அதிகாரியின் குடும்பத்தினர், உறவினர்கள், சொந்த ஊர்க்காரர்கள், அவர் படித்த பள்ளி, கல்லூரி, வசித்த பகுதிகளின் மக்களைப் பேட்டி கண்டு பரபரப்பாகச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் செய்யத் தவறிய ஒரு விஷயம், மாவோயிஸ்டுகளின் அசுரத்தனத்தை வெளிப்படுத்தாதது.

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதிலும் முறையிடுவதிலும் தவறில்லை. ஆனால், ரத்தத்தில் மனு எழுதி திருநெல்வேலி ஆட்சியரிடம் ஒருவர் அளித்திருப்பதை என்னென்பது?


தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், முக்கிய அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கடத்தப்பட்ட அதிகாரிக்காக அறிக்கை வெளியிடுகின்றனர். கடத்தப்பட்டபோது அவரைக் காக்கப் போராடி உயிர் நீத்த சத்தீஸ்கர் காவலர்கள் இருவரைப் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா?

 சிக்கலான நேரங்களில் தான் உணர்ச்சிகளைத் தள்ளிவைத்து அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். பதறிய காரியம் சிதறிவிடும். கடத்தப்பட்டவர்களை மீட்கப் போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே?

- தினமணி (27.04.2012)
.
 

1 comment:

சசிகலா said...

சிக்கலான நேரங்களில் தான் உணர்ச்சிகளைத் தள்ளிவைத்து அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். பதறிய காரியம் சிதறிவிடும். கடத்தப்பட்டவர்களை மீட்கப் போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே// சிந்திக்க வேண்டிய வரிகள் சிந்திப்பார்களா ?

Post a Comment