Tuesday, July 12, 2011

வசன கவிதை - 88







வென்றவனின் பிரகடனம்


ஆள்தான் பெரிய உருவம்

ஆனால், பரிதாபம்.


எதற்குத் துரத்துகிறார்கள் என்று

ஏதும் தெரியாமலே

ஓடிக் களைத்த போதில்தான்

பிருஷ்டத்தில் அந்த ஊசி பாய்ந்தது.

அடுத்த நிமிடம் என்ன நடந்தது?

மயங்கிச் சரிந்த பெரிய உருவம்

செங்கல் சூளைக்கு மண் அகழ்ந்த குழியில்

தன்னைத் தானே புதைத்துக் கொண்டது.


ஆள் தான் பெரிய உருவம்.

மனிதரின் பகுத்தறிவு சிறிதும் இல்லாத

பரிதாபத்திற்குரிய உயிரினம்.


கழுத்தில் ஒரு மின்னணுக் கருவியை மாட்டவே

துரத்துகிறார்கள் என்பது தெரியாத முட்டாள்.

துப்பாக்கியில் சுட்டது மயக்க ஊசி தான்

என்று தெரியாத ஐந்தறிவு ஜடம்.

ஓட ஓடத் துரத்துவார்கள் என்பது அறியாமல்

புவியில் பிறந்துவிட்ட அற்பப்பதர்.

ஆள் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால் போதுமா?


காட்டை ஆளும் லாவகம் தெரிந்தும்

நாட்டு மக்களின் அச்சம் புரியாமல்

எல்லை தாண்டிய பேராசைக்கு

சாவு தானே பரிசு?

'அட்டகாசம்' செய்யும் தும்பிக்கையான்

இப்போது உணர்ந்திருக்கக் கூடும்

மனிதரின் வலிமையை.


அப்பாவிகளுக்கும் பரிதாபிகளுக்கும்

மனிதரின் உலகில் என்றும் இடமில்லை.

வலிமை உடையவனுக்கே உலகம் சொந்தம்.

இது, உயிருடன் உள்ள பிற யானைகள்

புரிந்துகொள்ள வேண்டிய பாடம்.


காட்டைத் தாண்டாதே; தண்டனை உண்டு.

காட்டுக்குள் வந்தாலும் அனுமதி; அதுவே உன் தலைவிதி.

இது வென்றவனின் பிரகடனம்.

------------------------------------------------

குறிப்பு: கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் கடந்த ஜூலை 9 ம் தேதி இரவு,  காட்டு யானை ஒன்றுக்கு கழுத்தில் 'ரேடியோ காலர்' என்ற மின்னணுக் கருவியை மாட்டுவதற்காக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையின்போது மயக்க ஊசியால் யானை குழியில் விழுந்து பலியானது. அந்த யானைக்கு மூன்றாம் நாள் அஞ்சலி இது.

காண்க: பத்திரிகை செய்தி


படம்: இந்த யானைதான் வனத்துறை நடவடிக்கையில் பலியானதாக நம்பப்படுகிறது.
(பட உதவி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு, கோவை)

.

1 comment:

மதுரை சரவணன் said...

karandaa kavithai irukku.. vaalththukkal

Post a Comment