Saturday, October 31, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா,
யானும் வந்தே னொரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன்மணிஎன் மாசக்தி வையத் தேவி...
-மகாகவி பாரதி
(பாரதி அறுபத்தாறு)

ஏதேதோ எண்ணங்கள்


வெற்றிகரமான அறுபதாவது நாள்!

'குழலும் யாழும்' வலைப்பூவைத் துவங்கி இன்றுடன் அறுபது நாட்கள் நிறைவடைந்து விட்டன. நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன். நினைத்தது அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும், ஓரளவு நடந்தேறி இருக்கிறது. இறைவனுக்கு நன்றி!
பத்திரிகைகளில் வெளியானவை, பிரசுரம் ஆகாதவை, புதியவை என, பலதரப்பட்ட கவிதைகளை இதில் இடம் பெறச் செய்திருக்கிறேன். மரபுக் கவிதை (41), புதுக்கவிதை (36), வசன கவிதை (20), உருவக கவிதை (11), மொழிமாற்றக் கவிதை (5) என இதுவரை 113 கவிதைகளை 'குழலும் யாழும்' வலைப்பூவில் கோர்த்திருக்கிறேன். இவற்றைப் படித்து மகிழ்ந்த, படிக்கப் போகிற அனைவருக்கும் நன்றி!
'எழுத்து' என்பது பிறர் படிப்பதற்காகவே படைக்கப் படுகிறது. சங்க இலக்கியம் தொடங்கி, நவீன இலக்கியம் வரை, படைப்பாளர் யாராயினும் எதிர்பார்ப்பது, படைப்புகள் படிக்கப்பட வேண்டும் என்பது தான். இந்த இலக்கணத்துக்குள் எனக்கும் இடம் உண்டு. அந்த வகையில், இந்த வலைப்பூவை நிறைய நேயர்கள் முகரவும் நுகரவும் வேண்டும் என்பது ஆசை. பாரதியின் கவிதைகள் அவர் காலத்தில் முழுமையான மதிப்பைப் பெறவில்லை. அத்தகைய நிலை ஏற்படாமல் இன்றைய எழுத்தாளர்களுக்கு இணையம் ஆபத்பாந்தவனாக உதவுகிறது. அதற்கும் நன்றி!
இப்போதெல்லாம் புதிய திரைப்படங்கள் வந்தவுடன், 'வெற்றிகரமான ஐந்தாவது நாள்; குதூகலமான பத்தாவது நாள்; முரசு கொட்டும் பதினைந்தாவது நாள்; சரித்திரம் படைக்கும் இருபதாவது நாள்; வெள்ளிவிழா காணும் இருபத்தைந்தாவது நாள்...' என்றெல்லாம் சுவரொட்டி ஒட்டி மகிழ்கிறார்கள். தங்களைத் தாங்களே ஆனந்தப் படுத்திக் கொள்கிறார்கள்; திரையரங்கில் மக்கள் கூட்டம் காற்று வாங்கும். அது போல, இந்த அறுபதாவது நாளைக் கருதல் கூடாது. ஏனெனில் அது வர்த்தகம்; இது லட்சியம்.
இன்று விதைக்கும் விததுக்களுககு இன்றே பலன் கிடைக்காது என்பது விதைப்பவனுக்குத் தெரியும். விதைப்பவனை எப்படி விளைவிப்பது என்பது அந்த ஆண்டவனுக்குத் தெரியும். எனது 'குழலும் யாழும்' வலைப்பூவில் வித்துக்கள் தொடரும்...
-வ.மு.முரளி.

புதுக்கவிதை - 36


நன்றி!

நான் நன்றி சொல்வது
சரியாகப் படவில்லை; ஏனென்றால்
எழுதியதே நானல்ல.
எழுதப்பட்டது தான் கவிதையே ஒழிய
எழுதியவன் 'நான்' அல்ல.

அப்புறம் இன்னொரு ஐயம்;
தூக்கம் கேட்டு, துன்பப்பட்டு,
கவிதை எழுதுபவன் நன்றி சொல்ல
அதை
மேலோட்டமாகப் புரட்டிப் பார்ப்பவன்
ஏற்பது முறையாயிருக்குமா?
பரவாயில்லை-
புரட்டப்படுவது தான் கவிதையே ஒழிய
புரட்டுவது நீங்கள் அல்ல.

ஆமாம், 'நன்றி' என்றால் என்ன?
'தன்யவாத்'தா?
'தேங்க்ஸ்'சா?
'நன்றி'ன்னா என்ன?
பரவாயில்லை-
கண்டிப்பாக
நானோ, நீங்களோ அல்ல.

நான் நன்றி சொல்வது
சரியாகப் படவில்லை;
ஏனென்றால்-
இன்னும் நான் எழுதவும் இல்லை-
நீங்கள் படிக்கவும் இல்லை.

(எழுதிய நாள்: 28.03.1994)

Friday, October 30, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


...பாம்பைக் கம்பால் அடிக்க வேண்டும்.
வலை வீசியும் தூண்டிலிட்டும் மீனைப் பிடிக்க வேண்டும்.
பறவையைக் கண்ணிவைத்து மடக்க வேண்டும்.
ஆனால்-
தூண்டிலிட்டு பாம்பைப் பிடிக்க முடியாது.
கம்பாலடித்து பறவையைப் பிடிக்க முடியாது.
பயங்கர மிருகங்களை கொல்வதற்கு பயங்கர ஆயுதங்கள் தேவை....
கணையும் வில்லும் கையிலே தாங்கி ''புலி எங்கே? சிங்கம் எங்கே?'' என்று புறப்படுவோர் மானைப் பார்த்து மயங்கி விழுந்தால், மலர்களைப் பார்த்து சொக்கி நின்றால், வேட்டையும் நடக்காது, விரும்பியதும் கிடைக்காது.
அவன் புறப்பட்டது என்னவோ வேட்டைக்குத் தான். வேட்டையாடும் நேரமும் தூரமும், அவன் கண்களுக்கு விலகியே போய்க் கொண்டிருந்தன...
-கவிஞர் கண்ணதாசன்
(வனவாசம்)

வசன கவிதை - 20


பெய்யாமல் பெய்யும் மழை

உரைநடையைக் கூட
உருப்படியில்லாமல்
எழுதித் தவிப்பவரா நீங்கள்?
கவலை வேண்டாம்-
கவிஞராகி விடுங்கள்!

அரைக்கால் புள்ளிகளும்
ஆச்சரியக் குறிகளும்
கேள்விக் குறிகளும்
தொடர் புள்ளிகளும் கொண்டு...

இரண்டிரண்டு வரிகளாய்
பிரித்து எழுதினால்,
எதை எழுதினாலும்
கவிதையாகி விடும்-
நீங்கள் ஒரு
தலைவராக இருக்க வேண்டும்.
அவ்வளவு தான்.

தலைவராவதற்கு நீங்கள்
தலைகீழாய் நடக்க வேண்டாம்!
தலைவராக இருப்பவரின்
நிழலாக மாறுங்கள்
நாலு நண்பர்களின்
முதுகில் குத்துங்கள்
பகுத்தறிவு பேசியே
பணத்தைக் குவியுங்கள்!
கைதட்டல் கூலிகளை
காசுக்கு அமர்த்துங்கள்
கற்கண்டு பேச்சென்று
தமிழ் மேடையை
கண்டதுண்டமாக்குங்கள்!
நேரம் வரும்போது
பேரம் பேசுங்கள்!
தலைவரைக் கழற்றிவிட்டு
தலைவராய் ஆகுங்கள்!

தலைமையைத் தக்கவைக்க
தகிடுதத்தம் செய்யுங்கள்!
தமிழைக் காக்க
தூக்கில் தொங்கவும்
தயாராக இருப்பதாக
முற்போக்குடன் முழங்குங்கள்!

கேள்வி கேட்க ஆளில்லாத
எவனையாவது ஏசுங்கள்!
ஏசு சாமி பற்றி
கொஞ்சம் புகழ்ந்து பேசுங்கள்!
இந்து மதம் மீது தொடர்ந்து
சாணத்தை வீசுங்கள்!
நீங்கள்
முற்போக்காளர் ஆகிவிடுவீர்கள்!

இனிக்கும் இஸ்லாமை
திகட்டத் திகட்ட புகழுங்கள்!
இந்தியா ஒரு நாடா?
என்று கேலி பேசுங்கள்!
'மதச்சார்பின்மை' காக்கும்
மடமாக மாறுங்கள்!

கறுப்புக் கண்ணாடி
அணியத் துவங்குங்கள்!
கண்ணின் நரிப்பார்வை
காணாமல் மறையுங்கள்!
கைத்தடிகளை மட்டுமே
அருகில்
காவலுக்கு வையுங்கள்!

இப்போது நீங்கள்-
பகுத்தறிவு கழகமாகி
விட்டீர்கள்!
முற்போக்கு மன்றமாகி
விட்டீர்கள்!
மதச்சார்பின்மை மடமாகி
விட்டீர்கள்!
மொத்தத்தில் இப்போது
தமிழன்னையின் தவப் புதல்வராகி
விட்டீர்கள்!
நீங்கள் தலைவர்!
'கவிதை மழை' பொழியுங்கள்!

உங்கள் பெயரை
'கவிஞர்' என்று
உடனே அறிவியுங்கள்!
இயற்பெயரைச் சொன்னாலே
செருப்படி தான் கிடைக்குமென
எடுபிடிகள் மூலம்
எல்லோருக்கும் சொல்லுங்கள்!

உங்கள் கட்சிக்கு
வாரிசை
உடனே நியமியுங்கள்!
கவலையின்றி
'கவிதை மழை' புத்தகத்தை
வெளியிடுங்கள்!

கூட்டணியை மாற்றி மாற்றி
'ராச தந்திரி' ஆகுங்கள்!
கூட்டத்தைக் கூட்டிக் கூட்டி
'குடியரசன்' ஆகுங்கள்!
பெய்யாமல் பெய்யும்
'கவிதை மழை' ஆகுங்கள்!

வள்ளுவனும் இளங்கோவும்
கம்பனும் பாரதியும்
எங்கேனும் தொலையட்டும்!
நீடூழி வாழ்ந்திடுங்கள்!
'தமிழ்' என்றால் 'கவிஞர்'
'கவிஞர்' என்றால் 'தமிழ்' அன்றோ?
'தமிழே' வாழுங்கள்!
'தமிழே' வாழுங்கள்!!
நன்றி: விஜயபாரதம்
(20.08.2004)

Thursday, October 29, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


... அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்...
-இளங்கோவடிகள்
(சிலப்பதிகாரம் - பதிகம் -55 -60)

புதுக்கவிதை - 35


குறுங்கவிகள்-1

இரு
காத்திரு
காலம் வரும்.

பொறு
கொஞ்சம் பொறு
பூமி ஆள.

எழு
துடித்தெழு
எல்லாம் ஜெயம்.

விடு
ஆசை விடு
விசனம் இல்லை.

நடு
மரம் நடு
குளிரும் மனம்.

கொடு
தானம் கொடு
குறையும் குற்றம்.

மரபுக் கவிதை - 41



ராம மந்திரம் ஓது


அலைகளை மீறி எழுந்தது பாலம்
அதுதான் ராமர் பாலம் - ஆணவ
அலைகளை மீறி எழுந்தது பாலம்
அதுதான் ராமர் பாலம்!

சமுத்திர ராஜன் அகம்பாவத்தால்
சடுகுடு ஆடிய நேரம் - வீர
வில்லை வளைத்தான் தசரத ராமன்
வீழ்ந்தது அலைகளின் வேகம்!

வணங்கிப் பணிந்து வருணன் விலக
வளர்ந்தது ராமர் பாலம் - மனம்
இணங்கி இணைந்த வானர சேனை
இசைத்தது துந்துபி மேளம்!

கற்புக்கரசி சீதையை மீட்க
கடலும் அடங்கியதங்கு - இந்த
அற்புதம் கண்டு மெச்சி மகிழ்ந்த
அமரர்கள் ஊதினர் சங்கு!

வேருடன் பிடுங்கிய மரங்களை கடலில்
வீசி அமைத்தனர் பாலம் - தசக்
கிரீவனை அழிக்க ராமனின் சேனை
அமைத்தது கடலில் கோலம்!

அணிலும் கூட உழைத்தது கண்டு
அண்ணல் வருடி எடுத்தான் - அதன்
முதுகினில் மூன்று கோடுகள் விளைய
அன்பைப் பிழிந்து கொடுத்தான்!

அனுமனும் நளனும் நீலனும் தோளில்
அழகாய் சுமந்து கண்டு - பாறைக்
கற்களும் கூட கடுமை குறைந்து
மிதந்தன பூந்துகள் கொண்டு!

வளர்பிறை தசமியில் துவங்கிய பாலம்
நிறைந்தது பௌர்ணமியன்று - சேது
அமைந்ததும் வானவர் பூமழை தூவி
ஆசி வழங்கினர் நன்று!

இருபத்திமூன்று யோசனை தூரம்
சேதுவில் ராமன் சென்றான் - மானிட
அவதாரத்தின் மகிமையை நாட்டி
அரக்கனை இனிதாய் வென்றான்!

ராம காரியம் நன்றாய் அமைய
உதவிய பாலம் சேது - ராம
சேவகர் அமைத்த பாலம் காத்திட
ராம மந்திரம் ஓது - சீதா
ராம மந்திரம் ஓது!
நன்றி: விஜய பாரதம் - தீபாவளி மலர் -2007

Wednesday, October 28, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

இன்னல்கள் நேர்கின்றன; ஆனால் அவை என்றும் நிலைத்திராது. பாலத்தினடியில் ஓடும் நீரைப் போல அவை ஓடி மறைந்து விடும்.

-அன்னை சாரதா தேவி

மரபுக் கவிதை - 40


அஞ்சேல்! அபயம்!

துரோகம் செய்பவர் தண்டனை பெறுவர்;
துடித்திட வேண்டாம்; துயரம் வேண்டாம்!
துடிக்கும் கரத்தை அடக்குக மனமே!
துரோகியை அழிக்க புறப்பட வேண்டாம்!
துரோகிகள் சிந்தும் குருதியினாலே
துயரம் குறைந்தா போய்விடப் போகும்?
துவண்டிடு மனமே ஆறுதல் கொள்க-
துணைவன், மேலொரு இறைவன் உள்ளான்!

பகைவனைக் கண்டும் பதறிட வேண்டாம்;
பண்புடை நம்பி பயப்படலாமா?
பதறுவதாலே பயனெதும் உளவோ?
பகைவன் துரோகியைக் காட்டிலும் நன்று!
பகல்என்றிருந்தால் இரவும் உண்டு,
படுவது தானே பரம்பரை வழக்கம்?
படுத்துவன் இறைவன்- பட்டவன் முனிவன்
பயப்பட வேண்டாம்! அஞ்சேல்! அபயம்!

வசன கவிதை - 19


பூனைக்குட்டி

அறைக்குள்ளிருந்த புழுக்கம்
வெளியே வந்தவுடன்
அடித்த வெயிலில்
காய்ந்து போனது தெரியாமல்
கால்கள் நடக்கின்றன.
நேற்று இந்நேரம்
வீட்டில் கடும் மழை.
குளிருக்கு இதமாக
போர்வைக்குள் சுருண்டிருந்த
கால்களினிடையே
சுருண்டிருந்தது
பட்டு ரோமப் பூனைக்குட்டி.

'பூனையைக் கொஞ்சாதடா
ஒரு முடி விழுந்தாலும் பாவம்'
அம்மாவின் பாசக்குரல்
காதுகளில் ரீங்கரிக்கிறது.
அம்மா, அம்மா தான்.
ஒரு காலத்தில் பூனை போல
மடியில் சுருண்டவன் அல்லவா?

ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவில்
பூனைப்பாதம் வைத்து
கதவைத் திறந்தாலும்
அம்மா காத்துக் கொண்டிருப்பாள்-
கிண்டி வைத்த உப்புமாவோடு.
அப்பா புரண்டு படுக்கும் சத்தமும்
அம்மாவின் கண் சமிக்ஞையும்.
இப்போது என்ன செய்கிறாளோ?

விடுமுறை முடிந்து
பணிக்கு கிளம்புகையில்
விழிக் கடைநீரும் தயிர் சாதமுமாய்,
உடம்பைப் பார்த்துக்கொள்ளச் சொன்ன
அம்மாவின் அருமை
அருகாமையின் போது
தெரியாமல் போய்விட்டது தான்.
எப்படியோ,
பெட்டிக்கடை சென்று
அறைக்குத் திரும்பியாகி விட்டது.
நன்றி: ஓம் சக்தி
(ஏப்ரல் 2001 )

Tuesday, October 27, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடி வரும்
சற்றும் இதற்கோர் ஐயம்உண்டோ?...

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை கான்பீரேல்
ஞாலம் மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

புதுக்கவிதை - 34


இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
நுகர்ந்திருக்கலாம்-
வாடிவிட்டது
வாசமலர்.

இன்னும் கொஞ்சம்
சுவைத்திருக்கலாம்-
நிரம்பிவிட்டது
வயிறு.

இன்னும் கொஞ்சம்
ரசித்திருக்கலாம்-
முடிந்துவிட்டது
கச்சேரி.

இன்னும் கொஞ்சம்
களித்திருக்கலாம்-
இருட்டிவிட்டது
மாலைவானம்.

இன்னும் கொஞ்சம்
கூடியிருக்கலாம்-
தளர்ந்துவிட்டது
உடல்.

இன்னும் கொஞ்சம்
வாழ்ந்திருக்கலாம்-
பிரிந்துவிட்டது
உயிர்.

இன்னும் கொஞ்சம்
எழுதலாம் தான்-
படிக்க நீங்கள்
தயார் தானா?

உருவக கவிதை - 11


நெற்றிக்காசு

நெற்றிக்காசு
தெரியுமா?
'பொட்டென போனவுடன்
நெற்றியில் வைக்கும்
வட்டக் காசு.

அறிவும் ஆலயமும்
ஆயிரம் சேர்த்தாலும்
முத்தும் அழகும்
முனைந்து சேர்த்தாலும்
'பொட்டென' போய்விட்டால்
வட்டக்காசே
வழித்துணை.

கோடீஸ்வரனாய் இருந்தாலும்
கோடித் துணி தான்.
இலவச இணைப்பாய்
காலைக் கட்டி,
நெற்றியில்
வட்டக்காசு.
அதுவும்-
வெட்டியானுக்கு.

நெற்றிப்பொட்டின்
மகத்துவம் இதுவே-
'பொட்டென' போகும் முன்
புண்ணியம் செய்.
கட்டையில் போகும் முன்
கருணை காட்டு.

நெற்றிப்பொட்டு
நினைவு படுத்தலே.
'தவறுவதற்கு முன்
தவறுகளைத் திருத்து.
தமாஷாக வாழ்ந்து
தமாஷாகி விடாதே.
காலம் இன்னும் இருக்கிறது'.
நன்றி: விஜயபாரதம்
(12.02.1999)

Monday, October 26, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்? எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்!...

ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
உலகின்பக் கேணிஎன்றே-மிக
நன்றுபல் வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன் திருக்கை!...

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்
அன்பினிற் போகுமென்றே - இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி!...
-மகாகவி பாரதி
(பாரத மாதா)

மரபுக் கவிதை - 39



சூரியப் பரம்பரை


குணத்தில் ஆரியன்! குருத்தில் வீரியன்!
நானே உலகின் ஞானச் சூரியன்!
(குணத்தில்)
சங்கப் பலகையில் தமிழ் தர அமர்ந்த
இறையனார் எந்தன் எள்ளுப் பாட்டனார்!
குறிஞ்சித் திணையின் குலத்தைக் காக்கும்
குன்றக் குமரன் கொள்ளுப் பாட்டனார்!
நெற்றிக் கண்ணால் எரிப்பினும் அஞ்சா
நக்கீரரும் என் நற்குடிப் பாட்டனார்!
'யாது ஊரே யாவரும் உறவினர்'
என்ற கணியனும் எந்தன் பாட்டனார்!
(குணத்தில்)
வாலறிவன் தாள் வணங்கிடச் சொன்ன
வள்ளுவர் எந்தன் வழிவழிப் பாட்டனார்!
அரசியல் பிழைத்தோர்க் கறமே கூற்றென
வரைந்த இளங்கோ வம்சப் பாட்டனார்
சூளையில் சுடினும் ஈசனை மேவிய
நாவுக்கரசர்என் நற்குடிப் பாட்டனார்!
'வன்மை இல்லையோர் வறுமை இன்மையால்'
என்ற கம்பரும் எந்தன் பாட்டனார்!
(குணத்தில்)
கற்பின் கனலால் மதுரையை எரித்த
கண்ணகி தேவியார் எம்குலப் பாட்டியார்!
அரும்புகளுக்கோர் நல்வழி கூறிய
ஆத்தி சூடி ஔவைஎன் பாட்டியார்!
பாவை பாடியே கண்ணனை ஆண்டவள்
சேவை செய்தவள் எம்குலப் பாட்டியார்!
அமுதசுரபியால் அன்னம் இட்டவள்
அன்பின் மேகலை எந்தன் பாட்டியார்!
(குணத்தில்)
பாரதப் போரில் படைகளுக் குணவை
படைத்த பாண்டியன் பரம்பரைப் பாட்டனார்!
பெரிய கோயிலைத் தஞ்சையில் நிறுவிய
ராசராசன் என் பெரிய பாட்டனார்!
யானையில் ஏறி இமயம் ஏகிய
சேரன் பெருமாள் செழுங்கிளைப் பாட்டனார்!
கல்லில் சிற்பக் காவியம் படைத்த
பல்லவ மன்னன் எந்தன் பாட்டனார்!
(குணத்தில்)
பாலுக்கழுத சேய்க்கமுதூட்டிய
பார்வதி தேவியும் எம்குலப் பாட்டியார்!
உலகெலாம் உணர்ந்தோதக் கவிகளை
தந்த சேக்கிழார் தந்தையின் பாட்டனார்!
காரையில் தலையால் காலென நடந்து
கயிலை சேர்ந்தவள் எம்குலப் பாட்டியார்!
உள்ளம் உருக்கும் வாசக மணிகளை
அள்ளித் தந்தவர் எந்தன் பாட்டனார்!
(குணத்தில்)
வாடிய பயிரைக் கண்டதும் வாடிய
வள்ளலார் எந்தன் வம்சத் தந்தையார்!
தேடித்தேடி நூல்களைப் பதித்த
சாமிநாதன்என் பெரிய தந்தையார்!
நானிலம் பயனுற வல்லமை வேண்டிய
நாயகர் பாரதி நாமத் தந்தையார்!
இந்து மதத்தின் அர்த்தம் கூறிய
கண்ண தாசன்என் சிறிய தந்தையார்!
(குணத்தில்)
சங்கப் பாடல்கள் பாடிய அனைவரும்
எம்குலத் தந்தையர்! எம்குலத் தந்தையர்!
பொங்கும் தமிழால் திருமுறை பாடிய
பெரியோர் அனைவரும் எம்குலத் தந்தையர்!
அரங்கன் அடிப்பொடி ஆழ்வார் அனைவரும்
எம்குலத் தந்தையர்! எம்குலத் தந்தையர்!
உறங்கும் தமிழின் உள்ளே கனலாய்
உயிராய் ஒளிர்பவர் எம்குலத் தந்தையர்!
(குணத்தில்)
அகத்திய மாமுனி ஆசி பெற்றவன்!
தொல்காப்பியரின் சூத்திரம் ஆனவன்!
நானே நற்றமிழ்! நாவின் சொற்றமிழ்!
நானிலம் விரும்பும் நாதத் தீந்தமிழ்!
(குணத்தில்)
அறத்தில் மாரியன்! மறத்தில் வீரியன்!
புறத்திலும் அகத்திலும் நானே சூரியன்!
குணத்தில் ஆரியன்! குருத்தில் வீரியன்!
நானே உலகின் ஞானச் சூரியன்!
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2004

Sunday, October 25, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்
அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் -இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்,
துஞ்சுது முகட்டில் என்பார் -மிகத்
துயர்ப் படுவார் எண்ணி பயப்படுவார்...
-மகாகவி பாரதி
(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை)

புதுக்கவிதை - 33


காட்டுமிராண்டி

விடிய விடிய
போஸ்டர் ஒட்டி,
சுவரில் எழுதி
அடி வாங்கி,
எதிர்க்கட்சி மீட்டிங்கில்
பாட்டில் வீசி,
வீட்டை
இருவாரம் மறந்து,
தன் தலைவன்
ஜெயித்தவுடன்
தீ மிதித்து -
தலைவன் சொன்னது போல -
காட்டுமிராண்டி தான்
தொண்டன்.
நன்றி: விஜயபாரதம்
(09.05.1997)

மரபுக் கவிதை - 38


தனுஷ்கோடி

ஜயராம் ஜயராம்
ஜயஜய ஜயராம்!
ஜயராம் ஜயராம்
ஜயஜய ஜயராம்!


அரக்கர் குலத்தை அழித்திட அன்று
அனுமன் சேனை அமைத்தது பாலம்!
அதனை நினைத்து எழுவோம் ஒன்றாய்!
அனுமன் போல ஆர்த்திடுவோமே!

இரக்கம்சிறிதும் இல்லாக் கயவர்
இறுதியில் அடைவர் இருளும் இழிவும்!
இனியவை மட்டும் எண்ணுக நண்பா,
இந்திய நாடு உன்னது கனவில்!

காலம் மாறும், கதிகளும் மாறும்,
காவிய ராமனின் கதையினை அறிவோம்!
காட்சிகள் தானாய் மாறிடும், எனினும்
கண்மணி நீயும் காரணமாகு!

எத்தனை நாட்கள் ஏமாறுவது?
எத்தர்கள் எள்ள விட்டிருப்பதுவோ?
இத்தனை போதும் - பட்டவை துயரம்
இனிமேல் நம்மைக் குவலயம் அறியும்!

தன்னை உணர்ந்த அனுமன் ஆவோம்!
தனுஷ்கோடியில் சங்கமம் ஆவோம்!
'தன்'னெனும் ஆணவ மாயை அகற்றி
தவமாய் ராம மந்திரம் சொல்வோம்!

எல்லாம் வல்லான் ஒருவன் உள்ளான்!
எடுத்தவை எல்லாம் வெற்றிகள் ஆகும்!
இல்லான், உள்ளான் பேதமையில்லை!
நல்லான் ஹிந்து - நாமம் பொதுவே!

இந்திய நாட்டின் விதி மாறிடுது;
இந்தெனப் பட்டோர் யாவரும் வருக!
தன்னை உணர்ந்த அனுமன் ஆவோம்!
தனுஷ்கோடியில் சங்கமம் ஆவோம்!
நன்றி: பசுத்தாய்
(ஆவணி 2000 )

Saturday, October 24, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடைய வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!
- உலகநாதனார்
(உலக நீதி -2)

புதுக்கவிதை - 32


அரசியல்வாதி

நான்
அரசியல்வாதி
நான்
நாளைய முதலமைச்சர்
-இல்லை-
பிரதமர்.

மனிதன்
மாறிக் கொண்டிருக்கிறான்;
என் கொள்கையும்
அடிக்கடி மாறும்.

நானே
என் கட்சி;
தொண்டர்கள் என்
உடன்பிறப்புக்கள்-
நாளைய எம்.எல்.ஏ.,க்கள்.

தொண்டர்கள்
போஸ்டர் ஒட்டித்தான்
ஆக வேண்டும்-
எம்.எல்.ஏ., பதவிக்கு
முன்அனுபவம்.

என்னைவிட முன்னேறும்
தொண்டர்களை
எனக்குப் பிடிக்காது.
இது எச்சரிக்கை-
நானே தலைவன்.

என்னைப் பற்றி
எதிர்க்கட்சியினர்
குற்றம் சொல்லக் கூடும்.
மறந்து விடுங்கள்-
அவர்கள் என்
நேற்றைய தொண்டர்கள்.

மக்களே...
நான்
உங்கள்
கால் தூசுக்கு சமம்.

Friday, October 23, 2009

இன்றைய சிந்தனை


குறள்அமுதம்


காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது.
-திருவள்ளுவர்
(செய்நன்றி அறிதல்-102 )

மொழிமாற்றக் கவிதை - 5


பலம் மிகுந்திடு

பலம் மிகுந்திடு; பலம் மிகுந்திடு
பாரதத் தாய்க்கு பெருமை ஆகிடு!
களத்தில் வென்றிடும் வீரனாகிடு;
ஹனுமனைப் போல பலம் மிகுந்திடு! (பலம்)

செல்வம் ஈட்டிடு; பண்பில் சிறந்திடு;
நன்மகன் ஆகி ஞானிஆகிடு!
வள்ளல் ஆகிடு; ஒழுக்கம் பேணிடு
நாகரிகமுறு தீரம் கொண்டிடு! (பலம்)

தீமை ஓடிட மிடுக்கு நடையிடு;
நாயகன் ஆகத் தலைமை ஏற்றிடு!
ராமனாகிடு; கண்ணன் ஆகிடு;
வீரப் பிரதாபனின் இணையாய் ஆகிடு! (பலம்)

குறிப்பு: இப்பாடல் ஹிந்தியில் உள்ள 'பலவான் பனோ' ( बलवान बनो )என்ற பாடலின் மொழிபெயர்ப்பு.

மரபுக் கவிதை - 37



கீதை


''செயல் புரிய மட்டுமே உனக்கு உரிமை உண்டு;
சிந்தித்துச் செயல்படுவாய்,
சிறப்பாய் நன்கு வாழ்வில்.
செயலற்றிருக்க மட்டும் ஆசைப் பட்டிடாதே;
செயல் புரியாமல் வாழ்ந்து,
செத்து மடிதல் வீணே.

பலனை எதிர்பார்த்து நீயும் கடமையாற்றலாகா;
பலனை எனக்கு அர்ப்பணித்து
பல செயல்கள் புரிவீர்.
நலம் பெறுவீர்; நானிலத்தில் புகழ் மிகவே பெறுவீர்''
என்று சொன்ன கண்ணன் சொல்லை
என்றும் மறந்திடாதே!
(எழுதிய நாள் : 28.09.1987)

Thursday, October 22, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
-ஒளவையார்
(வாக்குண்டாம் -4 )

புதுக்கவிதை - 31


பெருந்தன்மை

விட்டுக் கொடுத்துவிடு.
நீ கட்டியிருக்கும்
கோவணத்தை
விட்டுக் கொடுத்துவிடு.
பார், உன் எதிரி
தோளில் துண்டில்லாமல்
துடித்துக் கொண்டிருப்பதை.
நன்றி: விஜயபாரதம்
(29.04.1994)

மரபுக் கவிதை - 36


அற்ப மானுடன் அல்லன்

அற்ப மானுடன் அல்லன் - நான்
அற்புதங்களை ஆற்ற வல்லவன்!
அற்ப மானுடன் அல்லன்!
தற்பெருமை என்றுஎண்ணிடல் வேண்டா!
நற்பதங்களைச் சாற்ற வந்தவன்
அற்ப மானுடன் அல்லன்!

கற்பனைக்கெட்டாஅழகிய உலகை
கவியாய்ப் புனைபவன் நான்!
விற்பனைக்கில்லா விலைமிகு மணிகளை
வீதி குவிப்பவன் நான்!
அற்ப மானுடன் அல்லன்- நான்
அற்ப மானுடன் அல்லன்!

சொற்பொருள் வகை சொல்ல வந்தவன்!
சொல்லும் கவியால் வெல்ல வந்தவன்!
விற்பன்னர்களும் வியக்க வல்லவன்!
விதிகளைக் கவியாய் எய்தும் வில்லவன்!
சொற்பம் என்றுஎண்ணிடல் வேண்டா!
அற்ப மானுடன் அல்லன்- நான்
அற்புதங்களை ஆற்ற உள்ளவன்!!

Wednesday, October 21, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்


மரணம் எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை. எனவே ஒருவன் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நல்ல எண்ணங்களை செயலாக்கிட வேண்டும். அதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்து இருக்கக் கூடாது. மரணத்துக்கு அவன், இவன் என்ற பாகுபாடு கிடையாது.
-அன்னை சாரதா தேவி.

வசன கவிதை - 18


பகுத்தறிவுத் தம்பட்டம்

பலருடைய பாதம்
பட்டுப் பட்டு
தேய்ந்து போன
படியிலும் கூட
படிக்க வேண்டிய
பாடம் இருக்கிறது.

கரிந்து சாம்பலாயினும்
அறையில் இன்னும்
வளைய வரும்
ஊதுவத்தியின் புகையிலும்
புரிந்துகொள்ள வேண்டிய
விஷயம் இருக்கிறது.

ஓடி ஓடி,
நடந்து நடந்து,
ஓய்ந்து போன
செருப்பும்
ஒரு முன்மாதிரி தான்.

வெயிலில் பொசுங்கி,
மழையில் நனைந்து,
தன்னைப் பிடித்தவனை
தற்காக்கும்
குடையின் கொற்றம்
மிகப் பெரியது.

வெள்ளத்தின் சீற்றத்துக்கு
வளைந்து கொடுத்து
வெயில் காலத்தில்
நிமிர்ந்து நிற்கும்
நாணல் தான்
மணல் அரிப்பைத்
தடுக்கிறது.

தன்னைக் கரைத்துக் கொண்டு
கற்பூரம் தந்த ஒளியோ
கடவுளின் தரிசனத்தை
கரிசனமாய்த் தருகிறது.

ஆனால்-
அக்றிணைப் பொருட்களின்
அறிவும் பயனும் கூட
ஆறறிவு மானிடனுக்கு
இல்லாது
இருக்கிறது.

ஆயினும் என்ன?
படிக்கல்லின் பயனை விட,
கற்பூரத்தின் தியாகத்தை விட,
செருப்பின் சேவையை விட,
'பகுத்தறிவுத் தம்பட்டம்'
அடித்துக்கொள்ள
மனிதனுக்கு மட்டுமே
உரிமை இருக்கிறது.
நன்றி: விஜயபாரதம்
(25 ஜூலை, 1997

Tuesday, October 20, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

கற்புடைப் பெண்டிர்க்கெல்லாம்
கணவனே தெய்வமென்பர்!
மற்பெரும் வீரர்க்கெல்லாம்
மானமே தெய்வமென்பர்!
சொற்பொருள் அறிந்தோர்க்கெல்லாம்
சொன்னசொல் தெய்வமென்பர்!
நற்பெயர் நாட்டைக் காக்கும்
நமக்கிந்தக் கொடியே தெய்வம்!
- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை

மரபுக் கவிதை - 35


சிக்கல்

பல்லவி
சிக்கல் சிங்காரவேலா - எந்தன்
சிக்கலைத் தீர்க்க நீ ஓடி வாராய்!

அனுபல்லவி
பக்கல் வந்து பாராமல் - இந்தப்
பாவி மீது என்ன கோபம்?

சரணங்கள்
அக்கம்பக்கம் மனிதரில்லை!
அன்பு காட்ட யாருமில்லை!
தக்க ஒரு துணையுமில்லை!
தண்ணீருக்கும் வழியுமில்லை!

விக்க ஒரு பொருளுமில்லை!
விதியினில் நன்மை இல்லை!
வெக்க, மான, ரோஷமில்லை!
வெந்து வெந்து, புழுங்குகின்றேன்!

புதுக்கவிதை - 30


ஒரு கட்டிடம் எழும்புது

எழுபது அடி உயரக் கட்டிடம்
எழும்பிக் கொண்டிருந்தது.
பிளாட்பாரத்தில் வசிக்கும்
பெருமாளின் குடும்பம்
புறப்பட்டது
செங்கல் தூக்க.

மொழி மாற்றக் கவிதை - 4


ஒருமை மந்திரம்

மந்திரம் அனைத்தும் கண்டநல் ரிஷிகள்
இந்திரன், யமன் என உனை அழைத்திட்டார்;
சொற்களால் விளக்கிட இயலா உன்னை
நற்பிரம்மம்என வேதாந்திகளும்,

"சிவமே வாழி" எனச் சைவர்களும்,
'தைவதம் விஷ்ணு' என வைணவரும்,
வணங்கிடுகின்றார் வளமுறு எட்டுக்
குணங்களை உடையாய், கோவே வாழி!

பௌத்தர்கள் உன்னை புத்தன் என்றோத,
'பவித்திர அருகர்' என ஜைனர்களும்,
சீக்கியர் 'சத்ஸ்ரீ அகாலி' எனவும்,
வாக்கிடை வணங்கும் வரமே வாழி!

ஞாலம் உய்ந்திட நடமிடு ராஜன்,
காலம் ஆளும் சரவணன், சாஸ்தா
எனப் பலவாறு உனைத் தொழுகின்றோம்
மனமதில் வாழும் மதியே வாழி!

அன்புடன் உன்னை அன்னையே என்றும்,
தண்ணிழல் வேண்டித் தந்தையே என்றும்,
பாடிப் பரவசமாகிட முக்தி
நாடிப் பிரார்த்தனை செய்தோம் வாழி!

இத்தனை பெயரால் வணங்கிய பின்னும்
அத்தனைக்குள்ளும் அசைந்திடு தீபம்
ஒன்றே, ஒன்றே, இரு வேறல்ல!
நன்றே! உந்தன் அடிபணிகின்றோம்!

ஓம் சக்தி!

நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2000
குறிப்பு: இக்கவிதை, சமஸ்கிருத ஸ்லோகமான 'ஏகாத்மதா மந்திரம்' பாடலின் மொழிபெயர்ப்பு.

Monday, October 19, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்



ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகத்தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையை கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்த தெய்வீகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான லட்சியம்.

-சுவாமி விவேகானந்தர்




உருவக கவிதை - 10


இலைகள் உதிரும்

உதிர்ந்த இலைகள்
கிளை திரும்புவதில்லை
முடிந்துபோன காலம் போல.
எனினும் -
இலைகளில் பெருகிய அமுதம்
வாழ்வின் ஜீவித அனுபவம்.
கிளைகள் மீண்டும் துளிர்க்கும்.

மண்ணில் வேர்களும்
விண்ணில் இலைகளும்
இடையறாது ஊடுருவும்;
வயது சேகேற
அடிமரம் கணக்கும்.

வெட்டுண்ட கிளையின்
அண்டையில் கிளம்பி
விரியும் இளங்கிளையில்
பசிய இலைகள் மிளிரும்.
பல்லாயிரமாண்டு கால
பச்சையம்
இலையாய், மரமாய் விளையும்.

இளவேனிலில் மலரும்
பூக்களில்
கனிகள் எழும்பும்.
அவற்றில்-
புதைந்திருக்கும்
அடையாளமற்ற மரத்தின்
அமைதி உணர்ந்து
இலைகள் ததும்பும்.

முடிந்து போன காலம்
திரும்புவதில்லை-
உதிர்ந்த இலைகள் போல.

விரைகிறது காலம்
மாறுகிறது பருவம்
உதிர்கின்றன இலைகள்
எழுதுகிறது பேனா.
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2009

Sunday, October 18, 2009

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று.

-திருவள்ளுவர்
(இனியவை கூறல் - 100)

புதுக்கவிதை - 29


ஹைக்கூ பூக்கள்

சிரிப்பு
குற்றவாளி சிரித்தான்
சாட்சி இல்லையென.
கடவுளும் சிரித்துக் கொண்டார்.

அழுகை:
அரசியல்வாதி
அழுது கொண்டிருந்தான்.
நேற்று தேர்தல்.

தவிப்பு:
சாக்கடை பரவாயில்லை
சகித்துக் கொள்ளலாம்.
அரசியலை?
நன்றி: விஜயபாரதம்
(26.05.1989)
குறிப்பு: முதன்முதலில் பத்திரிகையில் வெளியான கவிதை இது.

மரபுக் கவிதை - 34


வலிமை பெறுவோம்!

பாவிகள் யாருமேஉலகினில் இல்லை
பரமனின் பிள்ளைகள், பாவிகளா நாம்?
ஆவி, பேய் என்று அஞ்சுதல் தவறு
அன்னை சக்தியை எண்ணிடுவோம் நாம்!

நாத்திகம் பேசிடும் வல்லவர் ஒழிய
நல்லவர்கள் நாம் ஒன்றுபட்டிடுவோம்
சாத்திரம் கூறும் சொற்படி நடக்க
ஷண்முகநாதனை வணங்கிடுவோம் நாம்!

தாயை வெட்டிப் பிரிவினை செய்த
தண்டனைக் குள்ளோர் நாட்டினில் மீண்டும்
காயம் செய்திட விட்டிடலாமா?
கண்ணனை எண்ணி பலம் பெறுவோமே!
நன்றி: நாளை நமது நாள்- 5
(கையெழுத்துப் பத்திரிகை 1993)

Saturday, October 17, 2009

ஏதேதோ எண்ணங்கள்

அடுத்த தீபாவளியாவது விடியலைத் தருமா?

நமது சகோதரர்கள் இலங்கைத் தீவில் முள்வேலிச் சிறைகளில் அகப்பட்டுக் கிடக்கிறார்கள், தூங்கும் இடத்திலேயே மலஜலம் கழித்துக்கொண்டு. பச்சிளம் குழந்தைகளுக்கு பாலுமில்லை; பாலூட்ட தாய்மார்களுக்கு திராணியுமில்லை. அவ்வப்போது முகாமுக்குள் வரும் சிங்கள இராணுவம், சந்தேகத்திற்குரியவர்களை அழைத்துச் செல்கிறது. அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அது பற்றி கேட்கவும் யாருக்கும் தைரியம் இல்லை; தெரிந்து ஆகப் போவதும் ஒன்றுமில்லை.

நலம்புரி நிலையம் எனப்படும் இந்த முகாம்களில் சுமார் மூன்று லட்சம் மக்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக 'சிறை' வைக்கப்பட்டிருக்கிறார்கள். கேட்க நாதி இல்லை. இவர்கள் உணவுக்காக வரிசையில் முண்டி அடிக்கிறார்கள்; குடிநீருக்கு அல்லல் படுகிறார்கள். இங்கு (இந்தியாவில் தான்) நாம் நடிகைகளின் பேட்டிகளையும் 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முதலாக' ஒளிபரப்பாகும் சினிமாக்களையும் குடும்பத்துடன் வெட்கமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அங்கு... நோயுற்ற மக்களுக்கு தனி வசதி செய்ய முடியாது. ஏனெனில், முகாம் முழுவதுமே ஏதாவது ஒரு வகையில் நோயாளிகள் தான். உடலும் மனமும் சோர்ந்த நிலையில், உலகமே தங்களைக் கைவிட்டு விட்டதை நம்ப முடியாமல், கண்கள் வறண்ட நிலையில், உயிரை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு நடை பிணங்களாக இருக்கிறார்கள். இங்கு நாம், காசைக் கரியாக்கி பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறோம்.

அங்கு... மழை வந்தால் இப்போதைய நிலையும் கெட்டு விடுமோ என்ற அச்சத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி, சகதி நிறைந்த, அசுத்தமான முகாம் தடுப்புகளுக்குள் சுருண்டு கிடக்கிறார்கள், நமது சகோதரர்கள். இங்கு... சொந்த சகோதரர்கள் துயரத்தில் சாதல் கண்டும், திரைக் கலைஞர்கள் 'முதல்வருக்கு' வழங்கிய பட்டத்திற்கான கலையுலக பெருவிழாவை கண்டு களித்துக் கொண்டிருக்கிறோம்.

அங்கு நமது சகோதரர்கள் நல்ல நிலையிலேயே இருப்பதாக, இலங்கை சென்று திரும்பிய தமிழ்(?) எம்.பி.,க்கள் சான்றிதழ் வழங்கிக் கொண்டு, இங்கு... அரசியல் கச்சேரி நடாத்துகிறார்கள். காசு வாங்கி ஒட்டு போட்ட தமிழ்நாட்டு மக்கள் அதற்கான பலனை அனுபவிக்கலாம், தவறில்லை; எந்தப் பாவமும் செய்யாத இலங்கைத் தமிழர்கள் தண்டிக்கப் படுவதில் என்ன நியாயம் இருக்கிறது? தமிழ்நாட்டு தமிழர்களை தங்கள் ரத்த சொந்தம் என்று கருதியது தான் இவர்களது தவறா?

அங்கு... பொசுங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள்; இங்கு... கொண்டாட்டத்தில் தமிழ் மக்கள்! விதியே விதியே, தமிழச் சாதியை என் செய்யப் போகிறாயோ?
-வ.மு.முரளி.

இன்றைய சிந்தனை



கருவூலம்


தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்!
மௌனம் ஸைவாஸ்மி குஹ்யாநாம் ஞானம் ஞானவதாமஹம்!!
(பகவத் கீதை : 10-38 )
பொருள்:
தண்டிப்பவர்கள் பால் நான் செங்கோல்; வெற்றி வேண்டுபவர்களிடத்தில் நான் நீதி; ரகசியங்களில் நான் மௌனம்; ஞானிகளுடைய ஞானமும் நானே.
- கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்

மரபுக் கவிதை - 33




நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?


நாடு முழுவதும் நரகாசுரர்கள்!
எத்தனை கொடியோர், எத்தனை வடிவில்?
நரகாசுரரை ஒழித்திடும் வீர
நாயகர் யாரோ? சிந்தித்திடுவோம்!

ஊழல் செய்து வயிறு வளர்க்கும்
உழைப்பே இல்லா உண்ணிகள் ஆட்டம்!
லஞ்சப் பேயை லாவகம் ஆக்கி
லாபம் பார்க்கும் சுயநலக் கூட்டம்!

பகுத்தறி வென்ற பெயரினில் நாட்டின்
பாரம்பரியம் இகழ்ந்திடும் துஷ்டர்!
முற்போக் கென்று சொல்லிக் கொண்டே
முன்னேறாமல் தடுக்கும் கயவர்!

ஏழை, செல்வர் பிளவு பெருக்கி
ஏய்க்கும் எண்ணம் நெஞ்சில் கொண்டோர்!
பசியால் வாடும் ஏழைகளின் பால்
பரிவினைக் காட்டும் பண்பினை அற்றோர்!

கோயிலுக் குள்ளே குண்டு வெடிக்கும்
குரூர மான பயங்கர வெறியர்!
மதப்பிரி வினையால் நாட்டைப் பிளந்தும்
மனமடங் காத மமதை கொண்டோர்!

சாதிக ளுக்குள் சங்கடம் வளர்த்து
சண்டைகள் மூட்டும் சகுனி குலத்தோர்!
சேவை என்ற பெயரினில் நாட்டை
கூறாய் ஆக்கும் ஐந்தாம் படையோர்!

ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்யும்
ஆணவம் மிக்க அரசியல் தலைவர்!
நம்பிய வர்களின் கழுத்தை அறுத்து
தன்னலம் பேணும் தந்திரக் காரர்!

அந்நிய நாட்டு சித்தாந் தங்கள்
அமுதம் என்று சொல்லித் திரிவோர்!
பண்பா டொழிக்க முயற்சிக் கின்ற
பதர்களுக் குதவும் பாவ மனத்தோர்!

மத மாற்றத்தால் நாட்டைக் குலைக்கும்
மதியிலி செயலை வளர்க்கும் தீயோர்!
காட்டிக் கொடுக்கும் துரோகத் தனத்தால்
நாட்டைக் கெடுக்கும் நாணய மற்றோர்!

ஒற்றுமை விதையில் அமிலம் ஊற்றி
ஒழிக்க நினைக்கும் அண்டை நாட்டோர்!
தினமும் படுகொலை செய்து மகிழும்
தீமையின் உருவாய் வாழும் பகைவர்!

எத்தனை வடிவம் எடுத்திடும் போதும்
எத்தர்கள் உருவம் ஒன்றே யன்றோ?
இத்தனை தெரிந்தும் இனிமேல் நாமும்
இழிவைத் தாங்கிப் பொறுப்பது நன்றோ?

நாடு என்பது நாமென்று உணர்ந்தால்
நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?
நாம் எல்லோரும் இணைந்து எழுந்தால்
நரகா சுரர்கள் அற்பம் தானே?
நன்றி: விஜயபாரதம்
(தீபாவளி மலர் -2002 )

Friday, October 16, 2009

இன்றைய சிந்தனை





சான்றோர் அமுதம்



அரசு என்பது பல அமைப்புகளில் ஒன்றாகும். அது முக்கியமானது தான். ஆனால்அனைத்திற்கும் மேலானது அல்ல. இன்றைய உலகின் பிரச்னைகளுக்கெல்லாம் முக்கியக் காரணங்களில் ஒன்று, அனேகமாக அனைவரும் அரசு சமுதாயத்தின் மறுபெயர் என்று கருதுவது தான். நடைமுறையில் அவர்கள் அரசை சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதியாக கருதுகிறார்கள். பிற அமைப்புகள் வலுவிழந்து விட்டன. அதே சமயம், அனைத்து அதிகாரங்களும் படிப்படியாக அதனிடம் குவியும் அளவிற்கு அரசு அனைத்தையும் அடக்கிடுமளவிற்கு ஆகிவிட்டது...


-பண்டித தீனதயாள் உபாத்யாய

(ஏகாத்ம மானவ வாதம் - பக்:52)

புதுக்கவிதை - 28


அறியாமைப் படிகள்

ராமராஜ்யத்தில் தான்
இன்று
அறியாமை
ஆட்சி செலுத்துகிறது.

எங்கள் அறியாமையையும்
படிகளாக்கிக் கொண்ட
அறிவிஜீவிகள் தான்
எங்களை
ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

கோகுலங்கலெல்லாம்
கோவாக்கள் ஆகிவிட்டதால்
கோவர்த்தனகிரியின் கீழ்
சிக்கித் தவிக்கிறோம்
நாங்கள்.

சாணக்கியன்
வாழ்ந்த நாடா இது?
சாக்கடை நாற்றம்
அடிக்கிறது?

புதுக்கவிதை - 27


விரைவு

எங்கள் ஊரில்
ஓட்டு போட்டுவிட்டு
தொண்டர்கள்
விரைந்தார்கள் -
அடுத்த ஊரில்
ஓட்டுப் போட.

Thursday, October 15, 2009

இன்றைய சிந்தனை

சான்றோர் அமுதம்

தனி வாழ்க்கையில் பெண்ணுள்ளம் பண்பாட்டிற்கு காரணமாய் இருக்கின்றது. எந்த நாட்டில் ஆண்கள் பெரும்பாலோர் பெண்களை அழகுப் பொம்மைகளாக மட்டும் கருதாமல், வாழ்க்கைத் துனைவியராக, அன்பு உள்ளங்களாகக் கருதுகிறார்களோ, அந்த நாடே முற்போக்கான நாடாகும்.
-மு.வரதராசனார்.

மரபுக் கவிதை - 32

சிந்தியல் வெண்பா

நல்லவர் நாட்டம் நாவினில் ஒடுக்கம்
வல்லவர் ஆகிட வழியது ஒன்றே
அல்லவை அறவே ஒழி.

வசன கவிதை - 17







என்ன ஆயிற்று இந்துக்களுக்கு?

நெடிதுயர்ந்து நிற்கும்
கோபுரத்தின் உச்சியில்
புறாக்களின் சிறகடிப்பு.
பாசி படர்ந்த
உடைந்த சுதைகள் மட்டும்;
கலசத்தைக் காணவில்லை.

எங்கு போனது கோபுர கலசம்?

ஆலம் விழுதோடி
அரசு கால் பதித்து
சிதிலமடைந்த நிலையில்
அகன்ற மதில்கள்.
அருகில்
தூர்ந்து போன
திருக்குளம்.

எங்கு போனது அறநிலையத் துறை?

கரையான் புற்றுக்குள்
கருங்காலி மரத் தேரின்
காருண்யமற்ற மரணம்.
வௌவால்களின்
சிரசாசனத்தில்
பிரகாரமெங்கும்
முடை நாற்றம்.

எங்கு போயினர் அறங்காவலர்கள்?

திறந்து கிடக்கும்
உற்சவர் அறைக்குள்
சிதறிக் கிடக்கும்
எலிப் புழுக்கைகள்.
உடைந்து கிடக்கும்
ஆபரணப் பெட்டிகளில்
வளைய வரும்
பூனைக் குட்டிகள்.

எங்கு போயின சட்டமும் அரசும்?

மண்டிக் கிடக்கும்
புதர்களைக் கடந்து,
நெருஞ்சித் தடத்தில்
பதுங்கி நடந்து,
விட்டால் போதுமென
விரையும்போது,
உச்சிக்கால சேகண்டி
சோகமாய் ஒலிக்கிறது.

எங்கு போயினர் ஆலய பக்தர்கள்?

ஒட்டிய வயிறும்
உடைந்த தேகமுமாய்,
கருவறை நிலைப்படியில்
அர்ச்சகரின்
ஒற்றைக்கால் தவம்.
இருள் கம்மிய
மூலவருக்குப் பக்கத்தில்
ஒரேயொரு எண்ணெய் விளக்கு.

என்ன ஆயிற்று இந்துக்களுக்கு?

இது.........
நிகழக் கூடாத கதை.
நினைத்துப் பார்ப்பதே வதை.

நன்றி: விஜயபாரதம்
(27.02.2004)

Wednesday, October 14, 2009

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள்.
நமக்குத் தேவை இரும்பைப் போன்ற தசைகளும், எஹ்ஹைப் போன்ற நரம்புகளும் தான்.
சுய வலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.

-சுவாமி விவேகானந்தர்.

வசன கவிதை - 16


நூறு சதவீத வெற்றிப் பந்தயம்

நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம்
நூறு பேர் ஓடுகிறார்கள்.
அனைவர் மனங்களிலும்
வெற்றியின் துடிப்பு.
முதலாவதாக வருவது யார்?
இருநூறு கால்கள் ஓடுகின்றன.

வெற்றிக் கோட்டை எட்டும் தருணம்
திரும்பிப் பார்க்க நேரமில்லை.
இலக்கை நோக்கி
அம்புகள் பாய்கின்றன.

ஒருவருக்கே வெற்றிமாலை என
ஒருவரும் ஓயவில்லை.
ஒருநொடிப் பொழுதில்
வெற்றியைப் பறிக்க
நூறு பேரும் அதிதீவிரம்.

ஆனால்-
வெறும் ஓட்டப் பந்தயமல்ல,
தேர்வு.
முயன்று படித்தால் அனைவரும்
மகுடம் சூடலாம்.
அந்த மகுடங்களே
கல்வியின் உப்பரிகைக்கு
படிக்கட்டுகள்.

தேர்வு-
நூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் அல்ல,
நூறு மீட்டர் வெற்றிப் பந்தயம்.
நன்றி: தினமலர் (ஈரோடு)
(ஜெயித்துக் காட்டுவோம் இணைப்பு- 01.12.2001)

உருவக கவிதை - 9

அப்துல் கலாமுக்கு அன்புடன் 'சலாம்'!

பத்திரிகை விற்று
பாடம் படித்த,
படகோட்டி மகன்
இன்று-
பாரதத்தின்
முதல் குடிமகன்.

வாழ்வினை தவமாய்
ஆராய்ச்சியில் செலுத்தி
வல்லரசுக் கனவில்
வாழும் கவிஞன்.

வாழ்வின் பொருளை
சிவானந்தரிடம்
தீட்சையாகப் பெற்ற
அறிவியல் துறவி.

எட்டா உயரம்
எட்டிய போதும்
நன்றியை மறவா
நாணயச் செல்வன்.

உழைப்பால் உயர்ந்த
சுயம்பு மனிதன்.
தேச சேவகம்
செய்வதில் பிரியன்.

'விஜயபாரதம்'
காணத் துடிக்கும்
வினைத்திறன் மிக்க
விஞ்ஞான இதயன்.

மதக் காழ்ப்பற்ற
இறை நெறியாளன்.
கீதை கூறும்
ஸ்திதப் ப்ரக்ஞன்.

போக்ரான் சோதனையின்
வேரெனத் திகழ்ந்த,
தனக்கென வாழா
ஏவுகணை மனிதன்.

உள்நாட்டிலேயே
உருவாக்கப்பட்ட
சுதேசி விஞ்ஞானி-
சுதந்திர ஞானி.

சுயநலம் மிகுந்த
அரசியல் தெரியா,
அறிவுலகத்தின்
அற்புதப் படைப்பு.

'அக்னி' செலுத்திய
அணியின் தலைவன்.
இந்தியா வழங்கிய
'சுதேசி செய்தி'.

தேசப் பற்றின்
தெளிந்த வடிவாய்
தமிழகம் நல்கிய
எளிமையின் தலைவன்.

அக்கினிச் சிறகினை
அசைத்து அசைத்து,
இளைஞரைத் தூண்டும்
அக்கினிக் குஞ்சு.

திக்குத் தெரியா
நாட்டினருக்கு
தீபஸ்தம்பமாய்
சுடரொளி காட்டும்,
ராமேஸ்வரத்தின்
கலங்கரை விளக்கம்.
நன்றி: விஜயபாரதம்
(19.07.2002)

Tuesday, October 13, 2009

இன்றைய சிந்தனை

கருவூலம்

எங்கள்ஊர் எம்.எல்ஏ.,
ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்?

இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்.
என்ன தேசம்?
இந்த தேசம்!
-கவிஞர் மீரா
(ஊசிகள் - பக்:13)

புதுக்கவிதை - 26

குப்பை- 1

குப்பையில்
மாணிக்கம்
விளையுமா?
தெரியாது.
மாணிக்கம்
குப்பை ஆகும்
குப்பை உலகில்!

வசன கவிதை - 15


முகவரி அறிவோம்!

கத்தியின்றி ரத்தமின்றி
பெற்றிடவில்லை இந்த
பெருமை மிகு சுதந்திரத்தை!

தீரன் சின்னமலையும்
ஜான்சிராணியும்,
கட்டபொம்மனும்,
தாந்தியாதோபேயும்,
திப்பு சுல்தானும்
அடித்த முதலடி
மறந்திட முடியுமா?

செக்கிழுத்தோம்...
குண்டடி பட்டோம்..
தூக்கு மேடையில்
துணிந்து ஏறினோம்!

உத்தம் சிங்குகளும்,
மதன்லால் திங்க்ராக்களும்,
வாஞ்சி நாதன்களும்,
பகத் சிங்குகளும்
அந்நியனை அலற வைக்கும்
அமரச் சமரில்
ஆகுதி ஆகினர்!

வெஞ்சிறையில் வீழ்ந்த
சாவர்க்கரும்,
திலகரும்,
தடியடி பட்ட
லஜபதிராயும்
ரத்தம் சிந்தாமலா - நாம்
சுதந்திரர் ஆனோம்?

நேதாஜியின்
தேசிய இராணுவம்
வடகிழக்கில்
சுதந்திரம் கண்டதை
மறைக்க முடியுமா?
மறுக்க முடியுமா?

சும்மா வரவில்லை
சுகமான சுதந்திரம்!
ஆருயிர் ஈந்த
அரும்பெரும் தியாகியர்
சரித்திரம் மறப்பது
சம்மதம் தானா?

அஹிம்சையின் பெயரில்
சுதந்திரப் போரை
மூடி மறைத்தால்
முகவரி இழப்போம்!
பொன்விழா கண்ட பூரிப்பு போதும்...
இன்றே நமது முகவரி அறிவோம்!
நன்றி: தினமலர் (ஈரோடு, சேலம்)
(15.08.2004)

மரபுக் கவிதை - 31


கலப்புத் திருமணம் செய்வீர்!

கலப்புத் திருமணம் செய்வீர்!
கலியென இங்குள ஜாதியை மாய்ப்பீர்!
கலப்புத் திருமணம் செய்வீர்!

முதலியும் பிள்ளையும் ஒன்றே!
முக்குலத்தோர்களும் ஒன்றே!
கவுண்டனும் செட்டியும் ஒன்றே!
ஹரிஜனும் நாயுடும் ஒன்றே!
வன்னியர், அந்தணர் ஒன்றே!
வகைமிகு பற்பல ஜாதியும் ஒன்றே!

கலப்புத் திருமணம் செய்வீர்!

அனைவரின் குருதியும் செம்மை - நாம்
அனைவரும் ஆண்டவன் பொம்மை!
மனிதருள் வெறுப்புகள் ஏனோ?
மதியது வெற்றிடம் தானோ?
உலகினில் ஜாதிகள் இரண்டு!
உடலதால் பெண்களும் ஆண்களும் உண்டு!

கலப்புத் திருமணம் செய்வீர்!