Monday, January 4, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்


... மாலை ஆறு மணி சமயம். குசேலர் வீட்டு முன் வாசல். தெருக்கோடியில் நிற்கும் மின்சார விளக்கு தன் திறமையை எல்லாம் வைத்துக்கொண்டு குசேலர் வீட்டு வாசலில் வெளிச்சம் போடப் பார்க்கிறது. எங்கோ ஒருவன் 'மலாய்வாலா' என்று கத்திக்கொண்டு போகிறான். கிருஷ்ணன் கோயில் வாத்திய கோஷம். பவழக்காரத் தெருவில் தலை தெறிக்க ஓடும் மோட்டார் ஹார்ன். கதம்பக்காரன், வெற்றிலைக்காரன் குரல்கள் தம்மில் மாறுபட்டுக் குழம்புகின்றன. வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, திடீர் திடீரென்று மன உலகத்தில் சுடர்விடும் உண்மைகள் போல வெளிவரும் நட்சத்திரங்கள்...
-புதுமைப்பித்தன்
(பக்த குசேலா நாடகத்தில்; புதுமைப்பித்தன் நாடகங்கள்- பக்:119)

.

உருவக கவிதை - 19



குடில்

கண்ணுக்குப் புலப்படாத
மசமசக்கும் இருளினூடே
அதோ தெரிகிறது குடில்.
எங்கோ ஒலிக்கும்
நரியின் ஊளை உளறல்
செவிக்கு எட்டாமல்.
நாசியில் நுழைய மறுக்கும்
வெட்டியான் எரித்த
பிணத்தின் புகை.
குருதியின் உவர்ப்பை
உணர மறுக்கும்
பற்கடி பட்ட நாக்கு.
ஆயினும் இயங்குகிறது
கண்ணியற்ற இரவிலும்
கனாக் கண்ட தேகம்.

கண்ணுக்குப் புலப்படாத
மசமசக்கும் இருளினூடே
அதோ தெரிகிறது குடில்.

(எழுதிய நாள்: 17.02.1999)
.

Sunday, January 3, 2010

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


இளைஞர்களே என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்புக்கு செவி சாய்ப்பீர்களா? என்னை நம்புவதற்கான துணிவு உங்களிடம் இருக்குமானால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொன்னான எதிர்காலம் இருக்கும்...
அசைக்கக் முடியாத நம்பிக்கையை உங்களிடம் நீங்கள் கொள்ளுங்கள். அத்தகைய மகத்தான நம்பிக்கையை, ஒவ்வோர் ஆன்மாவிலும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டீர்களானால், இந்திய முழுவதையும் நீங்கள் புதுப்பித்து விடலாம். அதன் பிறகு ஒவ்வொரு நாட்டிற்கும் போவோம். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் உருவாக்குகின்ற பல சக்திகளுள் ஒன்றாக நமது கருத்துகளும் விளங்கும். இந்தியாவிலும் வெளியிலும் இருக்கின்ற ஒவ்வோர் இனத்தின் வாழ்க்கையிலும் நாம் புக வேண்டும். இப்போது நாம் பாடுபட்டாக வேண்டும்.
-சுவாமி விவேகானந்தர்

.

புதுக்கவிதை - 60


ஞானம்

பாரத ஞானம்
விமானம் ஏறுகிறது -
பார் முழுவதும்
ஆகர்ஷிக்க.

கப்பலில் ஏறிய
மானம் எல்லாம்
கடந்த காலம்.

இனி
இளமைத் துடிப்புள்ள
எம் இளைஞர்களின்
ஞானம்
ஞாலத்தை வழிநடத்தும்.

பாரத ஞானம்
விமானம் ஏறுகிறது.

நன்றி: விஜயபாரதம் (09.06.2000)
.

Saturday, January 2, 2010

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


மனிதர்கள் அனைவரும் பார்க்க ஒரேபோல்தான் இருக்கிறார்கள். ஆனால், இயல்போ மனிருக்கு மனிதர் வேறுபடுகிறது. சிலரிடம் சத்வ குணம் அதிகம்; சிலரிடம் ரஜோகுணம், சிலரிடம் தமோ குணம். கொழுக்கட்டைகள் எல்லாம் பார்க்க ஒரேபோல் தான் உள்ளன. ஆனால், சிலவற்றின் உள்ளே திரட்டுப்பால், சிலவற்றில் தேங்காய், இன்னும் சிலவற்றில் உளுத்தம்பருப்பு.

-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
(அமுத மொழிகள்;முதல் பாகம் - பக்:133)

.

மரபுக்கவிதை - 61


எல்லோரும் நல்லவரே!

எல்லோரும் நல்லவரே- இந்த
எண்ணமே நம்மைப் புனிதர்களாக்கிடும்!
எல்லோரும் நல்லவரே!

குற்றமே அற்றவர் யார்? இந்தக்
குவலயத்தில் பிறந்தோர்களுள் பிறர்மனம்
குதறாத பெருமகன் யார்? என்று
சுற்றமாய் மனிதர் தம்மை எண்ணி
சுறுசுறுப்பாகவே தொண்டுகள் செய்பவர்
சுவர்க்கத்தை ஆக்குகின்றார்!
(எல்லோரும்)
பொற்பதம் வாய்க்குமேனும் - அன்றி
பொசுக்கிடும் கொடுந்துயர் எதிரினில் நிற்பினும்
பொறுமையாய் அணுக வேண்டும் - உள
நற்றுணை தெய்வமாகும் - இதில்
நம்பிக்கை கொண்டுநற் பணிகளில் முனைபவர்
நமனுக்கு அஞ்ச மாட்டார்!
(எல்லோரும்)
வற்றாத அன்பு வேண்டும் -முகம்
வாடாத பொலிவுடன் வளர்கின்ற சேவையே
வாழ்வுக்கு அர்த்தமாகும்- ஆசை
பற்றாத உள்ளம் வேண்டும் - நலம்
பகர்கின்ற பணிகளால் மானுடம் தழைத்திட
பாரதம் உயர வேண்டும்!
(எல்லோரும்)
நன்றி: விஜயபாரதம் (23.06.2000)
.

Friday, January 1, 2010

இன்றைய சிந்தனை


கருவூலம்

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான.
-பவணந்தி முனிவர்
(நன்னூல்; சொல்லதிகாரம் - 462 )
.

வசன கவிதை - 36


இரண்டும் உடையவன்

வாழ்த்துவதற்கும்
வயது வேண்டும்.
வரவேற்பதற்கும்
பண்பாடு வேண்டும்.
இரண்டும் உடையவன்
நான்.

எனது முன்னோர்
வாழ்வினில் முத்துக் குளித்து
கவிதைகளாய்
வேதங்களைப்
பொழிந்தவர்கள்.

எனது பித்ருக்களில் ஒருவரான
கண்ணனின் கீதைக்கு
வயது
5000ஐ
தாண்டிவிட்டது.

வாடி வதங்கி வந்த
யூதர்களுக்கும்
பார்சிகளுக்கும்
அமுதூட்டி
அரவணைத்தவர்கள்
என் அன்னையர்கள்.

குறுமுனி அகத்தியரும்
குறட்பா வள்ளுவரும்
வாழ்ந்த காலம் -
பிறக்கப் போகும்
2000ஐ விட
அதிகம்.

கௌதம புத்தனையும்
கரிகால் சோழனையும்
அளவிடத் தகுந்த
காலக் கணக்கீடு
என்னிடம் மட்டுமே உண்டு.

எனது கோத்திரத்தின்
துவக்கம்
என்று தோன்றியதென்று
அறியப்படாத
பழமை மிக்கது.

எதையும்
வாழ்த்துவதற்கும்
வரவேற்பதற்குமான
தகுதி
எனக்கு மட்டுமே
இருக்கிறது.

ஏ!
இரண்டாயிரம் முடிந்து
மூவாயிரத்திற்குள்
கால் வைக்கும்
'ரோம'க் காலண்டரே!
உனக்கு ஒரு வாழ்த்து!

உனக்கு நல்வரவேற்பு!
ஆனால்
சற்றே அடக்கமாக இரு!

நான்
2000
பலமுறை கடந்தவன்.
நன்றி: விஜயபாரதம் (31.12.1999.)
குறிப்பு: 'மில்லெனியம் ஆண்டு' என்று கூறிக்கொண்டு, 2000ஆண்டின் முடிவில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு உருவாக்கப்பட்டது. அப்போது வெளியான கவிதை இது.
.