Tuesday, November 24, 2009

மரபுக் கவிதை -51


இனியவை படைப்போம்!

தேசம் காத்திட வாருங்கள் - நம்
தெய்வம் காத்திட வாருங்கள்!
தேசம் காத்திட வாருங்கள்- நம்
தெய்வம் பாரத தேசமிதே!

எல்லையில் எதிரிகள் நடமாட்டம் - உள்
நாட்டினில் துரோகிகள் கொண்டாட்டம்!
எல்லாம் தெரிந்தும் வீட்டுக்குள்ளே
முடங்கியிருப்பது ஏனய்யா?

பலமரம் சேர்ந்தால் ஒரு தோப்பு- இப்
பழமொழி அனைவரும் அறிந்தது தான்
பலவகைக் கட்சி கூறுகளாலே
பட்ட அவலங்கள் போதுமய்யா!

சுதந்திரக் காற்றை சுவாசித்து- நாம்
சுகமாய் வாழ்ந்திட வீழ்ந்தவரை
மனதில் இருத்தி பூஜிப்போம்!
மடமை அழித்திட வாருமய்யா!

பலமலர் சேர்ந்தால் ஒருமாலை - அது
பரமனை வழிபட உதவிடுமே!
பலப்பல சாதி வேற்றுமை சொல்லி
பைத்தியமானது போதுமய்யா!

வாய்மை, தூய்மை, ஒழுக்கத்தை - தன்
வாழ்வில் பேணிய காந்தியினை
மறந்துவிட்ட தலைவர்களாலே
மானம் கேட்டது போதுமய்யா!

பலதுளி சேர்ந்தால் பெருவெள்ளம் - நாம்
பலரும் சேர்ந்தது பாரதமே!
இதுவரை பெற்ற அனுபவம் போதும்
இனியவை படைப்போம் வாருமய்யா!
நன்றி: விஜயபாரதம் (02.07.1999)

No comments:

Post a Comment