Showing posts with label மகாத்மா காந்தி. Show all posts
Showing posts with label மகாத்மா காந்தி. Show all posts

Saturday, March 5, 2011

எண்ணங்கள்








நம்மை நாம் அறிவோம்!



அண்மையில் நடந்த உலக சரித்திர நிகழ்வுகளில் எகிப்து மக்களின் புரட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. 20 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய எகிப்து அதிபர் முபாரக், மக்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்குப் பணிந்து பிப். 11-ல் பதவி விலகினார்.

அதன் எதிரொலி டுனீசியா, லிபியா, அல்ஜீரியா, ஜோர்டான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், ஏமன், ஒமான் போன்ற அரபு நாடுகளிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரமும் ஊழலும் பெருகியுள்ள வேறு பல நாடுகளிலும் எகிப்து அமைதிப் புரட்சியின் செல்வாக்கு பரவத் தொடங்கியுள்ளது.


இதன் தாக்கம் இந்திய அரசியல்வாதிகளின் பேச்சிலும் வெளிப்படுகிறது. பலரும், எகிப்துபோல தங்கள் பகுதியில் மாற்றம் வரும் என்று ஆரூடம் கூறத் தொடங்கியுள்ளனர்.
எகிப்து அதிபர்போல விரைவில் மாயாவதி தூக்கி எறியப்படுவார் என்று கூறியிருக்கிறார் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ். ஏற்கெனவே முலாயமைத் தூக்கி எறிந்த மக்கள் யாரைப் பார்த்து அவ்வாறு செய்தார்களாம்?

எகிப்தைப்போலவே காஷ்மீரில் மக்கள் எழுச்சி இயக்கம் நடப்பதாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா குறிப்பிட்டிருக்கிறார். பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானியும்கூட, காஷ்மீரில் நடப்பது எகிப்து மக்களின் போராட்டம் போன்றதுதான் என்று
கூறியிருக்கிறார். எகிப்துக்குள் மக்கள் புரட்சி வெடிக்க எந்த அண்டைநாடும் தூண்டுகோலாக இருக்கவில்லை என்பது இவர்கள் இருவருமே சொல்லாதது.

அகில இந்திய இடதுசாரித் தலைவர் ஒருவரும் எகிப்து மக்களை முன்னோடிகளாகக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செஞ்சீனாவின் தியானென்மன் சதுக்கத்தில் ஜனநாயகத்தை மீட்கப் போராடி பலியான மாணவர்களை அவர் வசதியாக மறந்துவிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், எகிப்து புரட்சியிலிருந்து மத்திய அரசு பாடம் கற்க வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார். எகிப்தில் அரசு சொத்துகளைக் கபளீகரம் செய்த முபாரக்போலவே கர்நாடகா மாநிலத்தில் தங்கள் கட்சியைச் சார்ந்த முதல்வர் செயல்பட்டதை அவர் நினைவில் கொள்ளாதது "செலக்டிவ் அம்னீஷியா'வாக இருக்கக்கூடும்.


தமிழக மேடைகளிலும்கூட எகிப்து முக்கிய உதாரணப் பொருளாகியிருக்கிறது. அமெரிக்காவில் ஒபாமா அதிபரானதையே தமிழக அரசியல் மேடைகளில் நெக்குருக முழங்கியவர்கள், எகிப்து விஷயத்தை விடுவார்களா? முபாரக்கையும் தமிழக முதல்வரையும் இணையாக ஒப்பிடும் காட்சிகளுக்குக் குறைவில்லை. .


இவர்களுக்குப் போட்டியாக ஆளும் தரப்பினரும், அதே முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியை முன்னாள் முதல்வருடன் ஒப்பிட்டு தமிழக அரசியலை கேலிக்கூத்தாக்குகின்றனர். இரு தரப்பினருமே சொல்ல மறந்த விஷயம், ஹோஸ்னி முபாரக்குக்கு தமிழக அரசியல்வாதிகள்போல அந்தர்பல்டி அடிக்கத் தெரியவில்லை என்பது. ...

அரசியல்வாதிகள் போதாதென்று திரைத்தாரகைகளும் எகிப்தைப் 'பார்க்க' ஆரம்பித்திருப்பது புல்லரிக்கச் செய்கிறது. எகிப்தில் புரட்சியால் மக்கள் மாற்றம் கண்டதுபோல மாணவ சமுதாயம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக வேண்டும் என்று கல்லூரி விழா ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா....


இலங்கைப் பிரச்னையை ஊர்தோறும் முழங்குபவரும், மீனவர்கள் நலனுக்காக திடீரென களத்தில் குதித்திருப்பவரும்கூட, உலக அரசியலுடன் தமிழக அரசியலை ஒப்பிட்டுத் தங்கள் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதுவரை ஜாதி அரசியல் பேசியவர்களையும் உலகளாவிய பார்வையுடன் பேசச் செய்திருக்கிறது எகிப்து. அந்நாட்டு மக்களுக்கு நன்றி....


உண்மையில் எகிப்து மக்களின் அரசியல் புரட்சிக்கு அடிப்படைக் காரணம், அது கடும் வன்முறைகள் இன்றி அமைந்திருந்ததுதான். நூறு ஆண்டுகளுக்கு முன், எகிப்து இடம்பெற்றுள்ள அதே ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் தென்ஆப்பிரிக்காவில் இந்தியர் ஒருவர் நிகழ்த்திக்காட்டிய போராட்ட முறை அது. அதே வழிமுறையால்தான் இந்தியாவும் விடுதலை பெற்றது. பல நாடுகளின் தளைகளை அறுக்க உத்வேகம் அளித்த அதே அஹிம்சை முறை, இன்று எகிப்தில் மீண்டும் வென்றிருக்கிறது; மக்களின் சத்திய ஆவேசம் வென்றிருக்கிறது.


கொடுங்கோலாட்சி நடத்திய முபாரக்கின் அதிகாரத்துக்கு இணங்க மறுத்து, சர்வாதிகார அரசுக்கு ஒத்துழைக்க மறுத்து, ராணுவ பலத்துக்கு அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்திp, எகிப்தில் ஆண்களும் பெண்களும் 18 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தியது வீர வரலாறு; சந்தேகமில்லை. இதற்கான கருவை அவர்கள் பெற்றது மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிமுறைகளிலிருந்துதான்.

நமது சரக்கையே எகிப்து புதுப்பித்திருக்கிறது. அது புரியாமல், நமது கருவூலத்தை அறியாமல், நாம் யாரைப் பின்தொடர்கிறோம்? எப்போது நம்மை நாமே பார்க்கப் போகிறோம்?

நன்றி: தினமணி (05.03.2011)
தலையங்கப் பக்க துணைக்கட்டுரை

Saturday, October 2, 2010

மரபுக் கவிதை - 109




சர்வ மத சமரசம்





ஆல்நிழல் தனிலே அமைதியின் உருவாய்
ஞானம் கூறிடும் மோனத்திருவே!
வேலினை அணிந்து சூரனை அழித்த
தேவர்கள் சேனாபதியே முருகா!


ஆழ்கடல் தனிலே நித்திரைகொள்ளும்
புன்னகை தவழும் புருஷோத்தமனே!
வேழமுகத்தால் வேதனை தீர்க்கும்
பாரதம் எழுதிய வேலனின் முன்னே!


மகிஷனை அழிக்க மறஅணி தரித்து
சிம்மம் ஏறிய சிவனது துணையே!
தகித்திடும் தணலால் உலகினைக் காக்கும்
ஜொலித்திடும் கதிரே, சூரியதேவா!

அன்பினைப் பரப்பி அஹிம்சையைக் காத்து
ஆசையை வெறுத்த அச்சுத புத்தா!
நன்மணி மூன்றை நானிலம் ஏற்க
நயம்பட உரைத்த நாயக, அருகா!

பேதமை ஓட்டிட சீக்கியர் வணங்கும்
நேரிய சத்ஸ்ரீ அகாலி இறைவா!
யூதர்கள் மனதில் உறுதியை ஊட்டி
பேரருள் புரியும் ஜெகோவ தேவா!

பகைவரிடமும் அன்பினைக் காட்டி
சிலுவையில் ஏறிய சீர்மிகு ஈசா!
குகையென இருண்ட மனத்திருள் நீக்கி
குலத்தினைக் காத்த நபியின் இறையே!


எனப் பலவாறு வணங்கிட்டாலும்
எல்லாம் ஒன்றே! ஏன் அதிபேதம்?
மனத்துறு மதியே, மதவெறி தவறு!
உடலுறை ஆன்மா- உயிரே கடவுள்!


அனைவரும் அவரவர் விரும்பியவாறு
வணங்கிடுகின்ற வரமே, வளமே!
அனைவரின் மதமும் மனிதனை உயர்த்த
பேதமகற்றிப் பேரருள் புரிக!
.
இன்று மகாத்மா காந்தி பிறந்த தினம்.
.

Friday, October 1, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்




வாடிக்கையாளரே நமது நிறுவனத்திற்கு வரும் மிக முக்கியமான வருகையாளர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை; நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம். அவர் நமது வர்த்தகத்திற்கு வெளியில் இல்லை; அதன் ஓர் அங்கமாக இருக்கிறார். அவருக்கு சேவை செய்வதன் மூலமாக நாம் அவருக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை; அதற்கான வாய்ப்பை வழங்கியதன் மூலமாக அவரே நமக்கு நன்மை செய்துள்ளார்.
-மகாத்மா காந்தி.
.

Tuesday, May 25, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்


கடவுளை நான் என் கண்ணால் காணவில்லை. வேறு விதத்திலும் நான் கண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. உலகம் எல்லாம் நம்புகிறது, ஈசன் ஒருவன் இருக்கிறான் என்று. அந்த நம்பிக்கையைக் கொண்டு நானும் வாழ்க்கையைச் செலுத்துகிறேன். எனக்கு உண்டாகியிருக்கும் இந்த நம்பிக்கை அழிக்க முடியாத நம்பிக்கை. அழியாத நம்பிக்கை பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு சமமாகவே ஆகிவிடுகிறது. என்றாலும் எவ்வளவு உறுதியானதாயினும் ஒரு நம்பிக்கையை பிரத்யக்ஷமாக கண்டேன் என்று சொல்லுவது உண்மைக்கு மாறாகும். ஆனபடியால் என்னுடைய கடவுள் நம்பிக்கைக்கு சரியான ஒரு சொல்லை நான் காணவில்லை...
-மகாத்மா காந்தி.
(ரகுபதி ராகவ- பக்: 5)

Saturday, March 27, 2010

இன்றைய சிந்தனை




சான்றோர் அமுதம்



முன்னேற்றம் என்பது ஒரே அடியாக வந்துவிடாது. பிழைகள் செய்து, அறிவடைந்து, பிழைகளைத் திருத்திக்கொண்டே தான் முன்னேற்றம் அடைய முடியும். முற்றிலும் நன்மையாக ஆண்டவன் நமக்கு எதையும் தர மாட்டான். மீண்டும் மீண்டும் செய்த பிழைகளைத் திருத்திக்கொண்டு தான் பல தோல்விகளுக்குப் பின் வெற்றி அடைய முடியும். இதுவே தனி மனிதனுடைய முன்னேற்றத்தைப் பற்றிய நியதி. அந்த நியதிப் படியே சமூக முன்னேற்றமும் அரசியல் முன்னேற்றமும் நிகழும். பிழை செய்யும் உரிமையும் அதைத் திருத்திக் கொள்ளும் உரிமையும் நமக்கு உண்டு. அதுவே முன்னேற்றத்துக்கு வழி.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ-பக்:189)
.

Saturday, March 13, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

அரசியல் என்பது ஷேமநலத்தைப் பற்றிய விவகாரம். மக்களுடைய ஷேம நலத்துக்காக பணி செய்யும் தகுதி யார் உடையவர்கள்? தெய்வத்தையும் மெய்ப்பொருளையும் நாடும் மனிதர்களே அந்தப் பணியில் ஈடுபட வேண்டும். தெய்வ பக்தியில்லாதவர்கள் அப்பணியில் சேராமல் இருப்பதே நலம்.
-மகாத்மா காந்தி

.

Thursday, March 4, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

பிரமச்சரியம் என்கிற விரதம் மற்ற விரதங்களைப் போலவே மனம், வாக்கு, காயம் மூன்றிலுமே காக்கப்பட வேண்டும். கீதையில் எடுத்துக் காட்டியிருப்பது போல், உடலில் மாத்திரம் பிரமச்சரியத்தைக் காத்து, மனத்தில் காமத்தை வளர்த்தால் அது பயனற்ற முயற்சியாகும். உடலுக்கு அது நல்லதுமாகாது. மனம் சென்ற வழியில் உடலும் இன்றோ நாளையோ கட்டாயம் செல்லும். அசுத்தமான எண்ணங்களில் மனத்தைச் செல்லவிடுவது குற்றமாகும். நாம் எவ்வளவு முயன்றாலும் மனமானது தவறிச் செல்லப் பார்க்கும். அதை நாம் தடுத்துக் கொண்டே வர வேண்டும். முடிவில் வெற்றி அடைவோம்...

-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்:166)

Wednesday, March 3, 2010

இன்றைய சிந்தனை




சான்றோர் அமுதம்



வாழ்க்கைக்கு மந்திரம் அன்பு அல்லது அஹிம்சை. இல்லாவிடில் கட்டாயமாக யுத்தங்கள் வந்துகொண்டே இருக்கும். ஒரு யுத்தத்துக்கு மேல் அடுத்த யுத்தத்தின் கோரம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
-மகாத்மா காந்தி
(ரகுபதிராகவ - பக்:27)
.

Wednesday, February 24, 2010



சான்றோர் அமுதம்

இந்தியாவை நகரங்களில் அல்ல, அதன் கிராமங்களில் தான் காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதையே எண்ணற்ற தடவைகள் திரும்பத் திரும்பக் கூறி வந்திருக்கிறேன். ஏழை மக்களுக்கு உணவும் உடையும் போதுமான அளவுக்குக் கிடைக்கிறதா என்றும், வெய்யிலிலும் மழையிலும் ஒதுங்க ஒரு கூரையாவது உண்டா என்றும் நாம் ஒருபோதும் நின்று விசாரித்ததில்லை.
இந்தச் சீரழிவை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? எல்லோரும் இன்னலின்றி வாழக்கூடிய அளவுக்கு இந்திய கிராமங்களை உருவாக்குவதே நாட்டை நேசிக்கும் அனைவருடைய பணி.

-மகாத்மா காந்தி
(நன்றி: எண்ணங்களின் சங்கமம் - 2008; பக்:250 )

நண்பரும் ஓவியருமான, 'எண்ணங்களின் சங்கமம்' அமைப்பின் நிறுவனர்
திரு. ஜெ. பிரபாகர் அவர்களுக்கு இது சமர்ப்பணம்.

.

Saturday, February 20, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

இந்தியாவில் தற்போது ஒருவேளை உணவு உண்டு இருப்போர் லக்ஷக் கணக்கு. அந்த ஒருவேளை சாப்பாட்டில் நெய்யும் இல்லை, எண்ணெயும் இல்லை. இந்த லக்ஷக் கணக்கான ஏழைகள் பசியாற உண்டு, மானம் காக்க உடையும் அடைந்த பிறகே, நீங்களும் நானும் எதையும் நமது என்று சொல்லி உரிமை பாராட்ட முடியும். நமக்கு அறிவு வேண்டும். நம்முடைய ஆசைகளை குறைத்துக்கொண்டு ஏழைகளுக்கு ஓரளவு மிஞ்சும்படி செய்வது நமது கடமை.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ-பக்:40)
.

Sunday, February 7, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

என்னுடைய குறைகளை நான் உணராமல் இல்லை. நன்றாகவே உணர்வேன். உணர்ந்து அதற்காக வருத்தமும் படுகிறேன். ஒருவன் தன் குறைகளைக் கண்டுகொண்டு விட்டால் அதுவே ஒரு பெரும் பாக்கியம். எனக்கு ஏதேனும் விசேஷ சக்தி இருப்பின் அதன் ரகசியம் என்னவென்றால் நான் என் குறைகளை நன்றாக அறிந்திருப்பதே ஆகும்.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்:3 )

.

Sunday, January 31, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் அல்லது எழுதப்படுவதால், உண்மையில்லாதது உண்மையாகிவிடாது. உண்மையை யாரும் காணாததால் அது பொய்யாகி விடாது. உண்மை என்றும் உண்மையே.
-மகாத்மா காந்தி.
(ரகுபதி ராகவ-பக்:131)

Saturday, January 30, 2010

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


...தன்னுயிர் போலே தனக்கழிவெண்ணும்
பிறனுயிர் தன்னையுங் கணித்தல்;
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞானத் துணிவினை மற்றாங்
கிழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனிற்
பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்!...
-மகாகவி பாரதி
(மகாத்மா காந்தி பஞ்சகம்)
இன்று மகாத்மா காந்தி பலிதான தினம் (1948)

.

புதுக்கவிதை - 67



ஜனவரி முப்பது

இன்று காந்திஜி இறந்த தினம்.

மாலைகளைச் சுமக்க முடியாமல்
தள்ளாடும் அவர் மேல்
காகம் உட்கார்ந்து
கரைந்து கொண்டிருக்கிறது.

பாவம் காந்திஜி!

அருகில் நெருங்கினால்
'மணம்' வீசுகிறதே?
யாரோ சாணாபிஷேகம்
செய்திருக்க வேண்டும்.

சுதந்திர ஜனநாயகம்!

அவர் காங்கிரஸ் கட்சி
என்றல்லவா எண்ணியிருந்தேன் -
எல்லாக் கட்சிக் கொடிகளையும்
ஏந்தியிருக்கிறாரே?

பரந்த மனப்பான்மை?
இல்லை...
பக்கா சுயநலம்!

சிற்பி ஊன்றுகோலை
கையுடன் நன்கு
பிணைத்திருக்கலாம் -
பாருங்கள்,
காந்திஜி ஊன்றுகோலில்லாமல்
தள்ளாடுவதை!

கட்சிக்கொடிகள்
இருப்பதால் தான்
அவர்
நின்று கொண்டிருக்கிறார்!

கட்சிகள் வாழ்க!

என்ன கண்ணாடியையும்
காணவில்லை?
ஊன்றுகோலை உருவியவன் தான்
கண்ணாடியையும்
களவாடியிருப்பான்!

பரவாயில்லை,
அவருக்கு எளிமையே
விருப்பம்!
நல்ல வேளை
உடையையாவது சிமென்ட்டில்
செய்தார்கள்!

ஒருவரையே
பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி?
இந்தப்புறம்
ஒருவர் இருப்பாரே?

ஆஹா...
அதோ...
நன்றி: விஜயபாரதம் (29.01.1999)
.

Thursday, January 28, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

மற்றவர்களுடைய குறைகளை யாருமே காண்பார்கள். தன்னுடைய குற்றம் குறையை ஒருவன் கண்டுகொள்வது அரிது. அதற்கு வேண்டிய ஞானம் எளிதில் கிடைக்காது.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ - பக்: 3)

Friday, October 2, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

பத்திரிகை, ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப்பிரவாகம் எவ்விதம் கிராமப்புறங்களை எல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசம் செய்து விடுமோ, அதேபோல கட்டுத் திட்டத்திற்கு உட்படாத பேனாவும் நாச வேலைக்குத் தான் பயன்படும்.

கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத் திட்டமில்லாததை விட அது அதிக விஷமானதாகும். கட்டுத் திட்டம் உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்தச் சோதனைகளில் தேறும்? ஆனால் பயன் இல்லாதவையாக இருப்பவற்றை யார் தடுத்து நிறுத்துவார்கள்? மேலும் இதில் முடிவு கூறுவது யார்?

பொதுவாக நன்மையும் தீமையும் போல, பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து இருந்துகொண்டு தான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

-மகாத்மா காந்தி
(சத்திய சோதனை - பக்: 288 )