Thursday, January 26, 2012

எண்ணங்கள்

ஆர்எஸ்எஸ் காரரா அண்ணா ஹசாரே?

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றப் போராடிவரும் சமூகசேவகர் அண்ணா ஹசாரே அவரது எதிரிகளால் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறார். காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பதால், ஹசாரேவும் பொறுமையாக தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தகையவர்களின் வெறுப்புக்கு காரணம் உள்ளது. தங்களையே லோக்பால் சட்டம் குறிவைக்கிறது என்பது புரிந்திருப்பதால்தான் ஊழலில் தொடர்புடையவர்கள் ஹசாரேவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆளும்கட்சி வட்டாரத்தில், ஹசாரேவை எதிர்ப்பதற்கென்றே களம் இறக்கப்பட்டுள்ளவர் ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங். அண்ணா ஹசாரேவை வசைபாடுவதையே அவர் தினசரி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதில் முக்கியமான விமர்சனமாக திக்விஜய் சிங் முன்வைப்பது, ஹசாரே ஆர்எஸ்எஸ்.காரர் என்பது. 

தன்மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாத ஹசாரே, இந்தக் குற்றச்சாட்டுக்கு மட்டுமே இதுவரை பலமுறை பதில் அளித்துவிட்டார். ஏனெனில் இந்தக் குற்றச்சாட்டின் பின்விளைவை அவர் உணர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள வலதுசாரி இயக்கங்களில் ஆர்எஸ்எஸ்சுக்கு வலிமையான பின்புலம் உண்டு. இந்து தேசியம் என்ற சித்தாந்தத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், துவக்க காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான சக்தியாக வளர்ந்து வந்துள்ளது.

இந்துத்துவத்தை முன்னிறுத்துவதால் சிறுபான்மையினருக்கு எதிரானதாக இந்த அமைப்பு சித்தரிக்கப்படுகிறது. அதேசமயம் தீவிரமான தேசபக்திக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அடையாளமாகக் கூறப்படுவதுண்டு. இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்கு தானாக முன்வந்து உதவுவதில் ஆர்எஸ்எஸ் முன்னணி வகிக்கிறது. இதை முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன் உள்பட பலர் பாராட்டி இருக்கின்றனர்.

1962ல் நடந்த சீனப்போரின் போது அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவிய ஆர்எஸ்எஸ்சைக் கண்டு நெகிழ்ந்த அப்போதைய பிரதமர் நேரு, 1963ம் வருடத்திய தில்லி குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பை இடம்பெறச் செய்தார். காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமர் நேருவால் பாராட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தான், ஹசாரேவை பலவீனப்படுத்த ஒரு கருவியாக்குகிறார் திக்விஜய் சிங்.

இந்திய அரசியலில் யாராவது ஒருவரை ஓரம்கட்ட வேண்டுமானால் அவரை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டினால் போதும் என்ற நிலை உள்ளது.  மகாத்மா காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகியவற்றுடன் இந்த அமைப்பை தொடர்புபடுத்தி பலமடங்கு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதால், ஆர்எஸ்எஸ் முத்திரை குத்தி எவரையும் நிலைகுலையச் செய்ய முடிகிறது.

அதனால்தான், தன்மீது கூறப்படும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்ற வசையை அண்ணா ஹசாரே தொடர்ந்து நிராகரித்து வருகிறார். ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஊழலுக்கு எதிராகத் திரட்டும் தனது யுத்தத்துக்கு ஆர்எஸ்எஸ் முத்திரை தடையாக இருந்துவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வே இதற்குக் காரணம். இதையே திக்விஜய் சிங் பயன்படுத்திக் கொள்கிறார்.

கட்டற்ற ஊழலால் கறை படிந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வேப்பங்காயாகக் கசப்பதில் வியப்பில்லை. அவரது நேர்மையான பொதுவாழ்வு, காங்கிரஸ்காரர்களால் அபாய எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

எனவே, ஹசாரே குழுவினர் காங்கிரûஸக் குற்றம் சாட்டுவதற்கு முன்னதாகவே, அவர்களை தற்காப்பு நிலைக்குத் தள்ளி விடுவதே உசிதமானது என்பது திக்விஜய் சிங்கின் கோட்பாடு.

அந்த அடிப்படையிலேயே, ஹசாரேவை ஆர்எஸ்எஸ்காரர் என்று முத்திரை குத்துவதில் அவர் தீவிரமாக முனைந்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இந்தப் புகாருக்கு பதில் சொல்லவே ஹசாரேவின் நேரம் சரியாக இருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இந்தச் சிக்கலை அடிக்கடி எதிர்கொள்கிறது. வலிமையான லோக்பாலுக்காக பாஜக ஒருபுறமும் ஹசாரே மறுபுறமும் தங்கள் வழிகளில் போராடுகிறார்கள். இதையே, பாஜகவுக்கு ஹசாரே உதவுகிறார் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது.

நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வது என்ற ஹசாரேவின் முடிவையும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் திசைதிருப்புகிறது காங்கிரஸ். ஹசாரே நடத்திய உண்ணாவிரப் போராட்டங்களில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தாங்களாகவே பங்கேற்றதை, இவ்வாறு சதியாகவே காண்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

ஆனால், ஒருவிஷயத்தில் ஹசாரேவுக்கு தெளிவில்லை என்றே தோன்றுகிறது. சர்வோதய இயக்கத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திராகாந்தியின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியபோது அவருடன் இயல்பாக இணைந்து போராடியது ஆர்எஸ்எஸ். அப்போது ஜெ.பியை ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் என்று காங்கிரஸ் வசை பாடியபோது, 'தேசபக்தர்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் தவறில்லை' என்று அவர் தெளிவாக பதில் அளித்தார்.

அத்தகைய தெளிவு ஹசாரேவிடம் இல்லாததால் தான், சிறந்த சமூகசேவகரான நாணாஜி தேஷ்முக்குடனான அவரது உறவை காங்கிரசால் கொச்சைப்படுத்த முடிகிறது.

ஊழலுக்கு எதிரான போரில் சிறுபான்மையினரைப் பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் அஸ்திரம் உதவும் என்று காங்கிரஸ் மனப்பால் குடிக்கிறது. இது சிறுபான்மையினரை மட்டமாக எடைபோடுவதாகும். இதையே ஹசாரே பதிலடியாகத் தர வேண்டும். அதை விடுத்து, திக்விஜய் சிங்கின் புலம்பல்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

இறுதியாக ஒரு விஷயம். ஹசாரேவுடன் தொடர்பு படுத்துவதன் மூலமாக, ஒருவகையில் ஆர்எஸ்எஸ்சுக்கு நற்சான்றிதழையே காங்கிரஸ் வழங்குகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளும்போது, காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு ஊழல் அடையாளத்துடன் இழிவான பொருள் ஏற்பட்டுவிடக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.














Sunday, January 15, 2012

எண்ணங்கள்

அனைவருக்கும்  
இனிய பொங்கல் திருநாள்
வாழ்த்துக்கள்!


பண்டிகைகள் நமது அன்றாட வாழ்வில் இனிய திருப்பங்களை நிகழ்த்துபவை.

ஒருவகையில் சமூகத்தின் உயிரோட்டத்தை வெளிப்படுத்துபவை.

அவ்வகையில், இன்று வந்துள்ள சங்கராந்தி மற்றும்  பொங்கல் நன்னாள் விழா பேருவகை  அளிக்கிறது.

பொங்கல் பண்டிகை குறித்த எனது மூன்று கவிதைகள் தினமணி- இணையதள பொங்கல் மலரில் வெளியாகி உள்ளன.

அதன் சுட்டி இங்கே...

Saturday, January 14, 2012

புதுக்கவிதை - 146




எரிக்கப்படாத குப்பைகள்...

பரணில் இருக்கும் பழைய பொருட்களில்
உபயோகமற்ற ஏதாவது இருக்கும்
ஒவ்வொரு போகியிலும் எரிக்க.

வீட்டின் புழக்கடையில் கரையான் அரித்து
எஞ்சிய மரச்சாமான்கள்
ஒவ்வொரு போகியிலும் சாம்பலாகும்.

போன வருடம் படித்த பாடப் புத்தகங்கள் கூட,
இந்த வருட போகியில்  
எதுவும் கிடைக்காவிடில் எரிக்கப்படலாம்.

உபயோகமற்ற, வீணாகிப்போன, காலாவதியான
எந்தப் பொருளும் பொருத்தமானதே
போகியில் கொளுத்த.

ஆனால், ஒவ்வொரு வருடமும் வீணாகக் கடக்கிறது-
பண்டிகையின் தாத்பரியம்  உணராமல்
எதை எதையோ எரித்து.
.

Tuesday, January 3, 2012

புதுக்கவிதை - 145







பாவம் காவலர்!





தெருநாய்களும் முடங்கியிருக்கும்
பனி பொழியும் இரவு...

வளைகளிலிருந்து வெளிவர
பெருச்சாளிகளும் அஞ்சும் கடுங்குளிர்.

முச்சந்தியில்
சாக்கடை தூர்வாரிக் குவித்த
கூளங்களின் அருகே,
மல்லாந்து கிடக்கிறான்
வேட்டி அவிழ்ந்த
போதை ஆசாமி.

லத்தியால் அவனை
தட்டிப் பார்க்கிறார்
இரவுரோந்துக் காவலர்.



Monday, January 2, 2012

உருவக கவிதை - 68



மரம்


மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன
ஊடி விரையும் கிளைகள்.
வானில் அளவளாவுகின்றன
துடிப்பான வேர்கள்.
ஆடி அசைகிறது மரம்.

.

Tuesday, December 6, 2011

எண்ணங்கள்

முல்லைப் பெரியாறு அணை
 
பாசம் தழைக்குமா? பிரச்னை தீருமா?
பேருந்துப் பயணத்தில், அருகில் அமர்ந்திருப்பவர் தூங்கித் தூங்கி விழுந்தால் யாருக்கும் இடையூறாகவே இருக்கும். மிகவும் சாதுவான குணம் கொண்டவர்கூட, இப்படிப்பட்ட தருணங்களில் கோபப்படுவதை பேருந்துப் பயணங்களில் காண முடியும். அந்தப் பயணி உழைப்பின் களைப்பாலோ, உடல் உபாதையாலோ அவ்வாறு தூங்கி விழக் கூடும். அதுபற்றி அருகில் அமர்ந்திருப்பவருக்கு பரிதாப உணர்ச்சி ஏற்படுவதில்லை.
 
 இதே சம்பவம் வேறுவிதமாக நடந்தால் நமது எதிர்வினை எப்படி இருக்கிறது? அதாவது, நமது பிரியத்துக்குரிய மனைவியோ, மகனோ, நண்பனோ, அன்புக்குரிய காதலரோ உடன் பயணிக்கும்போது தூங்கி தன்மீது விழுந்தால் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. சிலசமயம் அவ்வாறு தன்மீது தூங்கிச் சரிய மாட்டாரா என்று ஏங்கும் நிலைகூட ஏற்படுவதுண்டு.
 
 ஒரே சம்பவம் தான். அதில் இடம்பெறும் நபர்கள் தான் வேறு. முதல் நிகழ்வில் தன்மீது தூங்கிச் சரிந்த நபரைக் கடிந்துகொள்ளும் ஒருவர், இரண்டாவது நிகழ்வில் தன்மீது சகபயணி தூங்கி விழுவதை அனுமதிக்கிறார். ஏனெனில் அவர் சக பயணி மட்டுமல்ல, அவரது அன்பிற்குரியவர்.
 
 இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. அன்புக்குரியவர்களின் கஷ்டங்களை ஏற்க எல்லோரும் தயார். இவர் நம்மவர் என்ற எண்ணமே அங்கு பாசஉணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால், அறிமுகமற்ற ஒருவரது கஷ்டத்தைப் பங்கிட யாரும் தயாரில்லை. அவரும் சக மனிதர்தான் என்பது மறந்துபோகிறது.
 
 இது வெறும் பேருந்துப் பயணத்துக்கு மட்டும் பொருந்துவதல்ல. அண்டை மாநிலங்களுடனான நதிநீர்த் தாவாக்களிலும் இந்த மனநிலையைப் பொருத்திப் பார்க்கலாம்.
 
 சிந்தித்துப் பாருங்கள். கர்நாடக மாநிலத்திலுள்ள மக்கள், இதே பாசஉணர்வுடன் தமிழக மக்களை சகபயணிக்கு மேலாக, அன்பிற்குரியவர்களாகக் கருதினால் எப்படி இருக்கும்? காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை உருவாகுமா?
 
 முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அணிதிரளும் கேரள மக்கள், இதே பாசஉணர்வுடன் இருந்தால், பிரச்னை முற்றி இருக்குமா? தமிழகத்திலுள்ள மக்களும் நம்மைப் போன்ற மக்கள்தான்; அவர்களது அடிப்படைத் தேவைக்கு எதிராகப் போராடலாமா என்ற கேள்வியை அவர்களது மனசாட்சி எழுப்பி இருக்காதா?
 
 நதிநீர் என்பது இயற்கை அளித்துள்ள வரம். அதை வீணாகக் கடலில் கலப்பதைவிட அணை கட்டித் தேக்கினால் வறட்சிக் காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது மானுட நன்மையைக் கருதி எடுக்கும் முடிவு. இரு மாநிலங்களிடையே பாயும் நதியில் அணைகட்டி நீரைத் தக்க வகையில் பயன்படுத்துவதைப் பொருத்த வரை, இருததரப்பிலும் பெருந்தன்மையான அணுகுமுறை தேவைப்படுகிறது.
 
 முதலாவதாக, இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் பரிபூரணமாக நம்ப வேண்டும். இரண்டாவதாக, இயற்கை வளத்தை வீணடிக்கக் கூடாது என்ற அறிவார்ந்த உணர்வுடன் இருதரப்பும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். மூன்றாவதாக, ஒரு காலகட்டத்தில் எடுக்கப்படும் முடிவு பிற்கால சந்ததியினருக்கும் நன்மை விளைவிப்பதாக இருக்க வேண்டும்.
 
 முந்தைய தலைமுறையினரிடம் காணப்பட்ட அத்தகைய தொலைநோக்குப் பார்வையும், பரந்த மனப்பான்மையும் இப்போது அருகிவிட்டதையே, தற்போதைய நதிநீர்ப் பிரச்னைகள் காட்டுகின்றன. மொத்தத்தில் தமிழகமோ, கர்நாடகமோ, கேரளமோ, எல்லாமே பாரத நாட்டின் அங்கங்கள்தான்; அங்கு வாழ்பவர்களும் நமது சகோதரர்கள்தான் என்ற நேச உணர்வு குறைந்துவிட்டது.
 
 இதனால்தான் ஒரே அரசியல் கட்சியின் இரு மாநிலத் தலைவர்கள் மாறுபாடான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். தேசியக் கட்சி, பிராந்தியக் கட்சி என்ற பாகுபாடே அங்கு மறைந்துபோகிறது. நாட்டைப் பிணைக்க வேண்டிய அரசியலே மக்களைப் பிளவுபடுத்தும் விதிவசத்தை அனுபவிக்கிறோம்.
 
 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக அரசியலில் இப்போது நிலைகொண்டிருக்கிறது. கர்நாடகத்தை எதிர்த்து முழங்கிய அதே அரசியல் தலைவர்கள் இப்போது கேரளத்தை எதிர்த்து கோஷமிடுகிறார்கள். கேரளத்திலும் இதே நிலை.
 
 இருதரப்பிலும் வெறுப்பை உமிழும் பிரசாரம் நடக்கிறது. நடுநிலை வகிக்க வேண்டிய மத்திய அரசோ, கடமை மறந்து தடுமாறுகிறது; நீதிமன்ற உத்தரவுகளை முறைப்படி அமல்படுத்தத் தயங்குவதை அரசியல் ராஜதந்திரமாகக் கருதுவதே, பிரச்னையைப் பெரிதுபடுத்துகிறது.
 
 இதற்கு என்னதான் தீர்வு? இரு மாநில மக்களையும் சமமாகக் கருதும், அரசியல் லாபத்தைவிட நாட்டு நன்மையை முக்கியமாகக் கருதிச் செயல்படும் தலைமையே இப்போதைய தேவை. நாட்டு மக்கள் அனைவரையும் சகோதரர்கள் என்ற உணர்வுகொள்ளச் செய்யும் கல்விமுறையும் தேவை.
 
 இவை இப்போது பற்றாக்குறையாக இருக்கலாம். இந்தப் பற்றாக்குறை சரியாகாமல், நதிநீர்ப் பற்றாக்குறை தீராது. முதல் பற்றாக்குறை நிவர்த்தியாக, இப்போதைக்கு இறைவனைப் பிரார்த்திப்போம். அதுவரை, பேருந்தில் நம்மீது தூங்கி விழும் சக பயணியை சகித்துக் கொள்ளவாவது முயற்சிப்போம்.
 
 
நன்றி: தினமணி (06.12.2011)
.

Monday, November 7, 2011

எண்ணங்கள்

சட்டத்தின் காவலர்கள் 
அடித்துக் கொள்ளலாமா?

'சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு' என்பார் அறிஞர் அண்ணா. சட்டம் கூறும் விதிமுறைகள் அனைவருக்கும் புரியாது என்பதால்தான், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் வாதிகள் சார்பாக வாதாடுகிறார்கள். வாதிகளை அவர்களே சட்ட நுணுக்கங்களைக் கூறி நெறிப்படுத்துகிறார்கள்.

சட்டம் என்பது நம்மைக் காக்க நாமே வகுத்துக் கொண்டது. சமூகக் கட்டுப்பாடுகளுக்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும் சட்டங்கள் இன்றியமையாதவை. அதேசமயம், சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு நிர்வாக நடைமுறை தேவையாக இருக்கிறது. அதற்காகவே காவல்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை யார் மீறினாலும் அதைக் கட்டுப்படுத்துவது காவல்துறையின் கடமை. சமூக ஒழுங்கிற்குச் சவால்விடும் குற்றங்களைத் தடுப்பதும், குற்றம் நிகழும் தருணங்களில் அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனை பெற்றுத் தருவதும் காவல்துறையின் பணிகள்.

ஆக, வழக்குரைஞர்களும் காவல்துறையும் சட்டம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாகவே உள்ளனர் எனில் மிகையில்லை. இந்த நாணயத்தின் எந்த ஒரு பக்கம் அரிக்கப்பட்டாலும் நாணயம் செல்லாது போய்விடும்.

இந்த இரு தரப்பினரும் சுமுகமாக இணைந்து பணியாற்றினால்தான் சட்டத்தின் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆனால், சமீபகாலமாக நடைபெறும் இந்த இரு தரப்பினரிடையிலான மோதல்கள், சட்டத்தின் மாட்சிமைக்கே சவால் விடுபவையாக மாறி வருகின்றன.

கடந்த 2011, அக். 7-ல், கோவை அருகே உள்ள துடியலூர் காவல்நிலையத்தில் தனது வாதிக்காக விசாரிக்கச் சென்ற வழக்குரைஞர் ஆனந்தீஸ்வரன் காவல்துறையினரால் கை முறியும் அளவுக்கு கடுமையாகத் தாக்கப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய நிலஉரிமை தொடர்பான வழக்கை "கட்டப் பஞ்சாயத்து' செய்ய காவல்துறையினர் முயன்றதே இப்பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்.

எனினும், இந்த மோதலுக்கு வழக்குரைஞரின் ஆத்திரமூட்டும் செயல்பாடும் காரணமாக இருந்ததாக, காவல்துறையினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, காவல்நிலையத்தில் வழக்குரைஞர் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளரும் காவலர்கள் நால்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேற்படி காவல்துறையினர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட வழக்குரைஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கோர வழக்குரைஞர்களுக்கு உரிமை உள்ளது எவ்வளவு உண்மையோ, அதேபோல, தங்கள் போராட்டத்தை நாகரிகமாக நடத்த வேண்டிய கடமையும் அவர்களுக்கு உள்ளது.

ஆனால், கோவையில் நடந்துள்ள நிகழ்வுகள் வருத்தம் அளிப்பதாக உள்ளன. தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை இரு வாரகாலம் தொடர் முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராடினர். தவிர தங்கள் நீதிமன்றப் பணிகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதனால் வழக்குகளில் தொடர்புடையவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு போராட்ட நாளில் காவல் கண்காணிப்பாளர் அறைக்குள் வழக்குரைஞர்கள் அத்துமீறி நுழைய முயன்றதும், அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும், கண்டிப்பாகத் தவிர்த்திருக்கப்பட வேண்டும். இந்த களேபரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறையை ஒருநாள் பூட்டிவைக்க நேர்ந்தது.

இதைவிட மோசமான நிகழ்வு, எதிர்கால வழக்குரைஞர்களான சட்டக் கல்லூரி மாணவர்களின் நடத்தை. துடியலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாங்கள் கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினரின் வாகனத்தை உடைத்து நொறுக்கினர். இதுதான் சட்டத்தை இவர்கள் காப்பாற்றப் போகும் லட்சணமா?

இதுபோன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. 2008, செப். 12-ல் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டதையும், தங்களுக்குள் கொலைவெறித் தாக்குதல் நடத்திக் கொண்டதையும் யாரும் மறக்க முடியாது. அப்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையத் தயங்கி, காவல்துறையினர் வேடிக்கை பார்த்த அவலமும் நடந்தேறியது.

அதே காவல்துறையினர், அதே சென்னை உயர்நீதி மன்றத்தில், 2009 பிப். 19-ல் வழக்குரைஞர்களுடன் மோதியபோது, துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தியதும், வழக்குரைஞர்களால் நீதிமன்ற வளாக காவல்நிலையம் எரிக்கப்பட்டதும், தமிழக வரலாற்றில் கறை படிந்த பக்கமாக பதிவாகி இருக்கின்றன.

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் இவ்வாறு மோதிக் கொள்ளலாமா? சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே, அதை மதிக்காவிட்டால், பிறகு சட்டத்தை யார் மதிப்பார்கள்? இதைத் தடுக்க வேண்டிய நீதிபதிகளும் அரசும் வேடிக்கை பார்க்கலாமா?

இந்த இரு தரப்பிடையிலான மோதலுக்கு, பரஸ்பர நல்லுணர்வு இல்லாததே காரணமாக உள்ளது. இருவரில் யார் பெரியவர் என்ற 'ஈகோ' மோதலும் பிரச்னையை வளர்க்கிறது. இதற்கு என்னதான் தீர்வு? இரு தரப்பிலும் நடுநிலையானவர்கள் ஒருங்கே அமர்ந்து விவாதிக்க வேண்டிய தருணம் இது.

காவல்துறையினரும் நீதித்துறையினரும் உரசிக்கொள்ளும் நேரங்களில் சமரசப்படுத்தத் தேவையான ஒரு வியூகத்தை அரசு வகுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. சட்ட விதிமுறைகளை காவல்துறையினருக்கு தெளிவாகச் சொல்லித் தர வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு.

அமைதியை நிலைநாட்டுவதில் அரசுக்கு உள்ள பங்கைவிட காவலர்களுக்கும் வழக்குரைஞர்களுக்குமே அதிகமான பொறுப்பு உள்ளது. ஏனெனில், வீண் பிடிவாதமும் அகந்தையால் மோதிக் கொள்வதும் இரு தரப்புக்கும் என்றுமே பெருமை சேர்க்காது.





 

Tuesday, November 1, 2011

வசன கவிதை - 90


காற்றாலை கிராமம்

அந்த வண்டிப்பாதையில் அதிகாலையிலேயே 
தூக்குப்போசிகளுடன் சாரிசாரியாக
சென்று கொண்டிருப்பார்கள் 
முண்டாசு கட்டிய ஆண்களும் 
நூல்சேலை கட்டிய பெண்களும்
சிலர் கைகளில் கருக்கு அரிவாள்கள்;  
சிலரிடம்  மண்வெட்டிகள்.
வேலை தருவோரும் வேலை செய்வோரும்
இணைந்த அணிவகுப்பு அது.
திரும்பி வரும்போது பெரும்பாலான பெண்களின்
சும்மாட்டில் விறகுச் சுமை இருக்கும்.

இருள் விலகாத அந்த மசமச வெளிச்சத்தில்,
முந்தைய நாள் ஊர்க் கொட்டகையில் பார்த்த
‘குலேபகாவலி படம் பற்றி சிலாகித்தபடியோ,
‘நல்ல தங்காள் படத்தை திட்டியபடியோ,
உழைப்பாளிகள் படை சென்று கொண்டிருக்கும்.
மரங்களில் பறவைகள் கூவத் தொடங்கி இருக்கும்.

ஆற்றங்கரை வந்தவுடன் சிலருக்கு வேலை இருக்கும்.
கலங்கலின்றி ஓடும் ஆற்றில் ஒரு கையெடுத்து
தலையில் தெளித்தபடி கீழ்வானைப் பார்ப்பார் ஒரு பெரியவர்.
அவருடன் இருக்கும் மாடு "மா'' என்று அழைக்கும்.

வண்டிப்பாதையின் இருபுறமும் வானம் பார்த்த பூமிகள்,
தென்னந்தோப்புகள், சோளக்காடுகள், பச்சை வயல்கள்.
வரப்பின் மீது வரிசையாக காட்சி தரும்
கம்பீரமான பனை மரங்கள்.
தோட்டங்களின் மத்தியிலோ, ஓரத்திலோ,
அமைக்கப்பட்டிருக்கும் ஆட்டுப்பட்டிகள்.
உழைப்பாளிகள் கூட்டம் இருபுறமும் பிரிந்தபடி செல்லும்.
அவர்கள் செல்லும் இடங்களில் யாரும் சொல்லாமலே
அவர்களுக்கென பிரத்யேக வேலைகள் காத்திருக்கும்.

காலை சூரியன் சுள்ளெனச்  சுடும்வரை
களை பறிப்பு, காய் பறிப்பு, வரப்பு அணைப்பு,
நாற்றுநடவு... என வேலைகள் தொடரும்.
உடன்  வேலை செய்வார் தோட்டக்காரர்.
நீராகாரம் முடிந்தபின் சில நிமிடம் ஆசுவாசம்.

அந்தக் கரட்டாங்காடு அப்படித்தான்
விவசாய பூமி ஆனது.
அந்த நிலத்தின் விளைச்சல் திறனுக்கு
காரணம் இல்லாமல் இல்லை.
தண்ணீர் பாய்ச்சிய விவசாயக் கூலிகளின்
செங்குருதியும் வியர்வையும் கலந்தது அந்த மண்.

தோட்டங்களில் இருக்கும் ஓலைச்சாலைகளில்
எருமைகளும் மாடுகளும் கன்றுகளை நக்கியபடி
கால் மாறி நின்றுகொண்டிருக்கும்.
அவற்றுக்கு தண்ணீர் காட்டவும்,  தட்டுப்  போடவும்
சாணி அள்ளவும் சிலருக்கு நேரம் சரியாக இருக்கும்.
பால்காரர் வருவதற்குள் குப்பை அள்ளி,
மாடுகளைத் தடவிக் கொடுப்பதே அலாதி சுகம்.
அருகில் நாட்டுக்கோழிகள் நடமாடும்.

ஆடு, மாடுகளை விடுவித்து
கழுவிக் குளிப்பாட்டி, கொழுவில் கட்டி
மேய்ச்சலுக்கு விட்டபின்
கிணற்றடியில் வேலை இருக்கும்
பண்ணையத் தொழிலாளிக்கு.
தோப்பில் பறிக்கப்பட்ட தேங்காய்களை
ரகம் பிரித்து எண்ணி வைப்பதற்குள்
வந்துவிடுவார் நகர வியாபாரி.
அருகிலேயே சந்தைக்குக் காத்திருக்கும்
காய்கறிக் கூடைகள்.

மதியவேளை சுட்டெரிக்கும்போது
அருகிலுள்ள மாமர நிழலிலோ, வேப்ப மர நிழலிலோ
தலை சாய்க்கும்  உழைப்பாளிகள் கூட்டம்.
தோட்டக்காரர் மனைவி காய்ச்சிக் கொடுத்த
காபித்தண்ணி குடித்தபின்
மீண்டும் சிலமணிகள் நிலத்தில் தவம்.
அவர்கள் வீடு திரும்பும்போது
மணிக்கு வரும் .என்.ஆர் பஸ்சின்
ஹாரன் ஒலி  கேட்கும்.

மாலை ஒவ்வொருவரது  வீடுகளிலும் 
வாழ்க்கை வாழப்படும்.
ஊர்மேடை நோக்கி பெரிசுகள் செல்ல,
கோவில் செல்லும் பெண்களுடன் 
தொற்றியபடி குழந்தைகள் செல்லும்.  
கள்ளுண்ட மயக்கத்தில் உழைப்பாளிகள் சிலர் உருள,
அந்திசாய ஆரம்பிக்கும்.
ஊர்க் கொட்டகையிலிருந்து
"மருதமலை மாமணியே முருகையா''
பாடல் எங்கும் எதிரொலிக்கும்.

டீக்கடைகளில் ரெண்டு ரூபாய்க்கு
வறுக்கியும் ஜிலேபியும்  வாங்கிக்கொண்டு
தெருமுனையில் பூவும் கட்டிக்கொண்டு  
வைரம் பாய்ந்த உடலுடன் செல்லும்
குடும்பஸ்தர்களுக்கு வீடு காத்திருக்கும்.

மறுநாள் ஆகாரத்துக்கு வேண்டிய
உப்பு, புளி வாங்கிக்கொண்டு,
அரிசி பொறுக்கும் பெண்களின் முகங்களில்
உழைப்பின் பொன்னிறம் கூடி இருக்கும்.
தோட்டங்களில் இருந்து திரும்பிய விவசாயிகளின்
வீடுகளிலும் இதே காட்சி காணக் கிடைக்கும்.

பகலில் ஒருவரை ஒருவர் அனைவரும் காண்பது
ஊரில் திருவிழா நடக்கும்போதுதான் சாத்தியம்.
அதற்காகவே மாரியம்மன்  நோன்பு சாட்டுதலும்
பெருமாள் கோவில் புரட்டாசி மெரமனையும்
வழிமேல் விழி வைத்துப் பார்க்கப்படும்.
இளசுகள் பார்வையில் பேச,
மழலைகள் தூரி விளையாடும்.
இடையே வரும் பட்டிப்பொங்கலில்
தோட்டங்கள் விழாக்கோலம் பூணும்.
"அசனம் பட்டியாரே அசனம்'' என்ற கோஷத்தில்
ஆடு, மாடுகள் அதிரும்

                  ***

எனது பால்யம் இனிமையானது.
கிராமியத்தின் வாசம் வீசும்
அந்த நினைவுகளைக் கலைக்க
நான் என்றும் விரும்புவதில்லை.
பள்ளியில் சாதி வேறுபாடின்றிப் படித்த
இளம் பருவத் தோழர்களின்
முகங்கள் மறவாதது போலவே,
கிராமிய சூழலின் வீரியம்
மனதில் புகைப்படம் போலவே
பதிவாகி இருக்கிறது.
அனைத்தும் பழங்கதையென  
மாறுவதுதான் உலகியல் வழக்கமோ?

                  ***

முப்பது  ஆண்டுகள் இடைவெளியில்,
நகரத்தின் சாயல் படியத் துவங்கியதாக  
எனது கிராமம் வளர்ந்திருக்கிறது.
அரசமர மேடை இருந்த இடத்தில்
கான்கிரீட்டிலான விநாயகர் கோயில் வீற்றிருக்கிறது.

கிராமத்தின் மையத்திலிருந்து பார்க்கும்போதே தெரிகிறது
ஊரை வேலியிட்டது போலக் காட்சி தரும்
ராட்சத மின்சாரக் காற்றாலைகள்.
ஊர்க் கொட்டகை இருந்த இடத்தில்
'அவளோட ராவுகள்' படம் ஓடும் தியேட்டர்.
ஊர்க்கோடியில் இருந்த எல்லையம்மன் கோயில் அருகே
நிமிர்ந்து நிற்கின்றன செல் கோபுரங்கள்.
ஆற்றங்கரை செல்லும் வண்டிப்பாதையில்
வாழைத்தோட்ட அய்யன் கோவில் மண்மூடிக் கிடக்கிறது.
ஆற்றில் பெரும்குழிகள்-
மணல் வற்றியதன் அடையாளங்கள்.

விவசாய நிலங்களில் காற்றாடிகள்.
ஊரை ஒட்டிய நிலங்களில் மனைப்பிரிவுகள்.
ஊருக்குள் மச்சுவீடுகள் எழுந்திருக்கின்றன.
ஊரைத் தாண்டினால் நடமாட்டம் குறைந்திருக்கிறது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை
கிராமத்தில் திறந்திருக்கிறது.
நகைக்கடன் விளம்பரம் அங்கே வரவேற்கிறது.

ஓடாத ஆற்றின் குறுக்கே தடுப்பணையை 
ஊரின் வடகோடியில்  கட்டிக் கொண்டிருக்கிறார்கள்,
வேலைக்கு  உணவுத் திட்டத் தொழிலாளர்கள்.
நிலத்துக்கு வலிக்குமோ என்பது போல
கொத்திய இடத்திலேயே கொத்திக் கொண்டிருக்கும் பெண்கள்.  
காலையில் ஏற்றிய டாஸ்மாக் சரக்கு போதையில்,
புகையாத பீடியை முறைத்தபடி விட்டெறிகிறார் மேஸ்திரி.
அமர மரமின்றி அல்லாடும் அண்டங்காக்கை
ஓரக்கண்ணால் பார்த்தபடி தத்தித் தத்தி அமர்கிறது.

ஒருகாலத்தில் காய்ச்சலுக்கு கஷாயம் கொடுத்த 
சுப்புன்னி வைத்தியர் வீடு இருந்த இடத்தில்
எம்.பி.பி.எஸ். டாக்டரின் கிளினிக் இருக்கிறது.
அங்கு திருவிழாக்கூட்டம்.
பஞ்சாயத்து திடலில் திரும்பி நிற்கின்றன இரு பேருந்துகள்.
சுற்றிலும் கோலா விளம்பரங்களுடன் பெட்டிக்கடைகள்.
பிரதானத் தெருமுனையில் பல கட்சிகளின் கொடிக்கம்பங்கள்.
தெருக்களில் சொறிநாய்கள்.

பவுடர் பூசிய ஒப்பனைக்காரி போல
பொலிவுடன் மினுக்குகிறது எனது கிராமம்.
ஆயினும் மனம் ஒட்டவில்லை.
காற்றாலைகளில் இருந்து கிளம்பி வருகிறது
ஊரின் அழிவை கட்டியம் கூறும் கிறீச்சிடும் சத்தம்.
கண்ணை மூடி மேடையில் சாய்கிறேன்.

யாரோ தோளைத் தட்டி உசுப்பியபோதுதான்,
18 வது மாடியில் குளிரூட்டப்பட்ட அறையில்
கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பது தெரிகிறது.
வெளியே தேவலோகமாக மிளிரும்  
நியூயார்க்  மன்ஹாட்டன் சர்க்கிளின்  இரைச்சலற்ற
நள்ளிரவு அமைதி என் நெஞ்சை அறைகிறது.  

--------------------------------
விஜயபாரதம் (தீபாவளி மலர் - 2011)