Wednesday, June 30, 2010

உருவக கவிதை - 50



பகுத்தறிவற்ற மரங்கள்



உடனே வெட்டச் சொன்ன
அண்டை வீட்டுக் காரனுக்கே
தினமும் தேங்காய் தருகிறது
என் வீட்டு தென்னை மரம்.

முதல் கனிகளை
அணிலுக்கே தருகிறது
தினசரி நீர் பாய்ச்சி
நான் வளர்த்த கொய்யா மரம்.

மதிலில் விரிசலிட்டு
வீட்டிலும் வேரோடுகிறது
வாசல் முன் நிழலுக்காக
நட்டுவைத்த வேப்ப மரம்.


எல்லாவற்றையும் வெட்டிவிட்டு
வளர்க்க வேண்டும்
தொட்டியில் வளரும்
குட்டை மரம்.
.

Tuesday, June 29, 2010

உருவக கவிதை - 49



தூங்குமூஞ்சி நகரம்


இரவானால் கூம்பும்
தூங்குமூஞ்சி மரங்கள்
சாலையின் இருபுறமும்.

இரவெல்லாம் கண்விழித்து
பகலில் கண்ணயரும்
எவருக்கும் தெரியாது
தூங்குமூஞ்சி மரங்களின்
துடிப்பான இயக்கம்.

பகலில் கிளை ஆட்டி
குதூகலிக்கும் மரமா
இரவில் தூங்குகிறது?

எப்போதும் மயக்க நிலையில்
இயங்கும் மனிதருக்கு
தெரிவதில்லை
தூங்குமூஞ்சி மரங்களின்
கனவற்ற உலகம்.
.

Monday, June 28, 2010

உருவக கவிதை - 48



திரும்பும் சரித்திரம்...


ஓராண்டுக்கு முன்...
திருவிழா முடிந்த நகரம் போல
காட்சி அளிக்கிறது
போரில் வீழ்ந்த கிளிநொச்சி.
எங்கும் பரந்து கிடக்கின்றன
சிதிலமான பொருட்கள்,
உடைந்த, உருக்குலைந்த
தளவாடங்கள்.

ஓராண்டுக்குப் பின்...
போரில் வீழ்ந்த முல்லைத்தீவு போல
காட்சி அளிக்கிறது
செம்மொழி மாநாட்டுத் திடல்.
எங்கும் பரந்து கிடக்கின்றன
மக்கள் உபயோகித்து வீசிய
கழிவுப் பொருட்கள்,
பாலித்தீன் பைகள், காகிதங்கள்,
அறுந்த செருப்புக்கள்...

.

Sunday, June 27, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டு ரசிகர்கள் பார்வைக்கு...

உலகம் தழுவிய தமிழ்ப் பார்வை
-வ.மு.முரளி.

உலகு தழுவிய பார்வை என்பது தமிழ் மொழிக்குப் புதியதன்று. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று (புறநானூறு -192) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் பிரகடனம் செய்திருக்கிறார்.

'வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில்' (தொல்காப்பியம் - சிறப்புப் பாயிரம்) வாழ்ந்தாலும் ஆழிசூழ் உலகம் குறித்த பரந்த பார்வை தமிழர்களிடம் இருந்துள்ளது.

இலக்கியம் என்பது மனிதனை மேம்படுத்தவே; அந்த மக்களை 'உலகம்' என்ற ஆகுபெயரில் அழைப்பதும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பு. அதிலும் தமிழின் முதன்மையான இலக்கியங்கள் பலவும் 'உலகம்' என்ற சொல்லிலோ அதற்கு இணையான பிற சொற்களிலோ துவங்குவது, வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாகும்.

தமிழின் இலக்கணத்தைச் செம்மைப்படுத்திய பவணந்தி முனிவரும்,
'மலர்தலை உலகின் மல்குஇருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்...'
-என்றே நன்னூலைத் துவங்குகிறார் (சிறப்புப் பாயிரம்).

பத்துப்பாட்டில் உலகம்:

சங்க இலக்கியக் கருவூலத்தில் முதல் நூலான திருமுருகாற்றுப்படையை,
'உலகம் உவப்ப வலன் ஏற்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு...'
-என்றுதான் நக்கீரர் துவங்குகிறார்.

தனது இன்னொரு பத்துப்பாட்டு நூலான நெடுநல்வாடையிலும்,
'வையகம் பனிப்ப, வலனேர்பு வளைகிப்
பொய்யா வானம் புதுப்பெண் பொழிந்தென...'
-என்றே நக்கீரர் துவங்குகிறார்.

மற்றொரு பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சியை,
'ஓங்கு திரை பரயின்
ஒளி முந்நீர் வரம்பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து...'
-என்று துவங்குகிறார் மாங்குடி மருதனார்.

தொகை நூல்களுள் ஒன்றான கடவுள் வாழ்த்தை அடுத்த பாடல், உலகின் ஐம்பூதங்களை வியந்து பாடுகிறது.
'மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு...'
-என்று முரஞ்சியூர் முடிநாகனார் (புறம்- 2 ) பாடிச் செல்கிறார்.

சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றின் உள்ளடக்கத்தில் உலகம் குறித்து வரினும், இலக்கியத்தின் துவக்கத்திலேயே 'உலகம்' இடம் பெறுபவை மட்டுமே சிறப்புக் கருதி இங்கு குறிப்பிடப்பட்டன.

காப்பியங்களில் ஞாலம்:

ஐம்பெரும் காப்பியங்களும் உலகின் முதன்மையை உணர்த்தியுள்ளன. முதன்மைக் காப்பியமான இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், உலகை வாழ வைக்கும் ஞாயிற்றைப் போற்றி, அடுத்ததாக திங்களையும் மாமழையையும் போற்றித் துவங்குகிறது.

உலகின் பசிப்பிணி அறுப்பதே தலையாய அறம் என்கிறது, பௌத்தக் காப்பியமான மணிமேகலை.

திருத்தக்கத் தேவரின் சீவக சிந்தாமணி, 'மூவர் முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த...' என்றே துவங்குகிறது.

முழுமையாகக் கிடைத்திராத வளையாபதியும்,
'உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான்
திலகம் ஆய திறல் அறிவின் அடி...'
-என்று வணங்கித் துவங்குகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதன்மையானதும், உலகப் பொதுமறை என்று போற்றப்படுவதுமான திருக்குறளில் 70 -க்கு மேற்பட்ட குறட்பாக்கள் உலகம் குறித்த கண்ணோட்டத்துடன் இலங்குகின்றன.
ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற தலைமைக் குறளே (குறள் - 1 :1 ) திருக்குறளின் அடிநாதமாக விளங்குகிறது.

பக்திக்காலக் காப்பியமான கம்பரின் ராமாயணம், 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்றே (பால காண்டம் -1) துவங்குகிறது. ஆழிசூழ் உலகம், மானுடம் வென்றதம்மா - போன்ற சொற்றொடர்கள் வாயிலாக உலகம் குறித்த கம்பரின் கனிந்த பார்வையை உணர முடிகிறது.

சைவக் காப்பியமான, தொண்டர்தம் பெருமை கூறும் பெரிய புராணம், 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று துவங்குகிறது. இந்த முதலடியை சேக்கிழாருக்கு ஈசனே அசரீரியாய் எடுத்துக் கொடுத்ததாக நம்பிக்கை. இக்காப்பியம், 'உலகெலாம்' என்றே நிறைவடைகிறது.

வாழ்க வையகம்:

'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' (திருமூலரின் திருமந்திரம்-147) என்று வாழ்ந்த சித்தர்களின் பூமி தமிழகம். உலகம் குறித்த அவர்களது பார்வை விசாலமானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று அறைகூவியவர் திருமூலர்.

சைவத் தத்துவ விளக்கமான சிவஞானபோதம் நூலினை,
'மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு பகரின் அல்லதை...'
-என்று மெய்க்கண்டார் துவங்குகிறார்.

இவ்வாறாக, வாழையடி வாழையென, தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் 'உலகம்' என்ற சொல்லையே முதன்மைப்படுத்தி, இலக்கியங்கள் உருவாக்கியது கண்டு உவகை மிகுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே, சென்ற நூற்றாண்டில் நாடகக் காப்பியம் படைத்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை' என்று மனோன்மணீயம் நூலினைத் துவங்குகிறார்.

இந்த சிந்தனைப் பெருக்கால் தான், 'வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று மகாகவி பாரதியால் வேண்ட முடிந்தது; 'புதியதோர் உலகம் செய்வோம், கேட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்று பாரதிதாசனால் பாட முடிந்தது .

இத்தகைய மிக உயர்ந்த உலகு தழுவிய பார்வையுடன் இலக்கியங்கள் தழைத்தெழுந்த மண் தமிழகம்.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே'
-என்று வாழ்ந்த தாயுமானவர் போன்ற மாமேதைகளின் அடியொற்றி, தமிழ் இலக்கியங்களின் உலகப் பார்வையை நம்முள் விரித்து, நாமும் தமிழ் வளர்ப்போம்.
.
நன்றி:
தினமணி (27 .06 .2010௦) பொங்கும் தமிழோசை இணைப்பிதழ் - கோவை.
.
குறிப்பு: தலைக்கு மேல் குண்டுகள் பறந்து கொண்டிருந்த நிலையிலும், உலகம் தம்மைக் கைவிட்டுவிடாது, யாரேனும் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற அற்ப ஆசையுடன் மண்ணில் புதைந்த லட்சக் கணக்கான ஈழ சகோதரர்களுக்கு இக்கட்டுரை அர்ப்பணம்.
.

Saturday, June 26, 2010

சிந்தனைக்கு



செம்மொழிப் பேராளர்கள் நினைவுக்கு...

தமிழ்த்தாய் வாழ்த்து



நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!



பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!


-மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

குறிப்பு: இதுவே நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்தின் முழு வடிவம்.
.

Friday, June 25, 2010

உருவக கவிதை - 47



காற்றுக்குமிழிகள்




முன்னொரு காலத்தில்
கிரேக்க வீரன் அலெக்சாண்டர்.
இடைக்காலத்தில்
சீன செங்கிஸ்கான்.
18-ம் நூற்றாண்டில்
நெப்போலியன் போனபோர்டே
70 ஆண்டுகளுக்கு முன்
ஹிட்லர், லெனின், மாவோ, ஸ்டாலின்,...

வெற்றியில் திளைத்த நேரத்தில்
உலகத் தலைவர்களாக
முடிசூடியவர்களின் பட்டியல் இன்னும் நீளம்.

காற்றுக்குமிழிகளின் வனப்பில்
உலகம் சில நேரம் அதிசயித்தது.
குறுகிய காலத்தில் எவரையும்
புதைத்து எக்காளமிடுவது வரலாறு.
காற்றுக்குமிழிகளின் வாழ்நாள்
சாற்றுவதும் அரிதோ?


ஓராண்டுக்கு முன்பு
கொல்லப்பட்ட தம்பியை மறக்க
செம்மொழியில் திளைக்கும்
செஞ்சோற்று உதியலாத நெடுஞ்செழிய
விசயாலாய, மகேந்திர வர்ம, சேரமான்
அண்ணனுக்கு வந்தனம்!


உலகத் தமிழ்த் தலைவரென்ற
பத்திரங்கள் பத்திரம்!.
.

Thursday, June 24, 2010

மரபுக் கவிதை - 99




செம்மொழியின் காதலன்



கண்ணனின் தாசனாய்ப் பெயர் புனைந்து
கடவுளின் தத்துவம் விளங்க வைத்து,


கன்னலின் சாறெனக் கவி புனைந்து
காவிய கண்ணியம் உணரச் செய்து,


திண்ணிய நூல்களை எழுதிவைத்து
திகைப்புறு தன்கதை நிலைகள் சொல்லி,


மண்டிய அரசியல் சேற்றினிலே
மலர்ந்திடு பங்கய மணம் பரப்பி,


தன்னது வாழ்வினைச் சுட்டிக்காட்டி
தவறான துணிச்சலை மறுக்கவைத்து,


தென்றலின் தேரென பவனி வந்து
தெவிட்டாத நற்றமிழ்க் கவிதை பெய்து,


மின்னலின் வேகமாய்ப் பிறந்திறந்து
மிளிர்ந்திடு ரத்தின ஒளி விரிந்து,


சென்றவர் புகழினை நினைந்து காண
செழிப்புறு பற்பல நூல் பிறக்கும்.



குறிப்பு: இன்று கவியரசர் கண்ணதாசனின் 83-வது பிறந்த நாள்.


.

Wednesday, June 23, 2010

சிந்தனைக்கு


செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து

தமிழ்மொழி வாழ்த்து


தான தனத்தன தான தனத்தன
தான தந்தான

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்து மளந்திடு
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
யிசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!

சூழ்கடல் நீங்கத் தமிழ்மொழி யோங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
-மகாகவி பாரதி

குறிப்பு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படுவது என்றாலும், தாய்மொழியாம் தமிழுக்காக நடத்தப்படும் விழா என்பதால், மகாகவி பாரதியின் அர்த்தமுள்ள வாழ்த்து இங்கு இடம் பெறுகிறது. செம்மொழி மாநாட்டை வாழத்துவதற்கு அவரை விட யாருக்கு தகுதி உள்ளது?
.