|
நாச்சிமுத்து பாலிடெக்னிக் - பிரதான கட்டடம் |
25 ஆண்டுகள் என்பது மானுட வாழ்வில் பெரும்பகுதி. அப்படிப்பட்ட 25 ஆண்டுகளைக் கடந்து, முன்னர் தன்னுடன் பயின்ற நண்பர்களைக் காண்பது ஒரு பேறு.
1986- 89-இல் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நான் பட்டயப்படிப்பு (DME) படித்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவ நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NAPAA) வாய்த்தது.
கடந்த 15.06.2014, ஞாயிற்றுக்கிழமை, நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கத்தில் இந்தக் கூடுதல் நடைபெற்றது. அங்கு பயின்று பொன்விழா காணும் முன்னாள் மாணவர்களும் (1964 பேட்ச்) வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களும் (1989 பேட்ச்) அதில் சந்தித்து மலரும் நினைவுகளுடன் கட்டியணைத்துக் கொண்டோம்.
நாங்கள் படித்தபோது பாலிடெக்னிக் வளாகத்தில் மரங்கள் தான் அதிகம்; காடுபோலக் காட்சி அளிக்கும். இப்போது எல்லா இடங்களிலும் கட்டடங்கள். டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியும் அதே வளாகத்தில் இயங்குவதால், கல்வி நிறுவன வளாகமே முற்றிலும் தோற்றம் மாறி இருந்தது.
பாலிடெக்னிக் வளாகம் மட்டுமல்ல, நாங்களும் தான். 25 ஆண்டுகள் அல்லவா? பலரும் இளமைப் பருவத்தைக் கடந்த அனுபவ நிலையை தோற்றத்தில் காட்டினோம். ஆயினும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, பெயரை மறக்காமல் அழைத்து, நலம் விசாரித்து, குதூகலித்தோம்.