Wednesday, July 27, 2011

புதுக்கவிதை - 143


பரிதாப ஜீவன்கள்




சாலையின் இருபுறமும்

புழுதியையும் கரியையும்

ஜீரணித்தபடி நிற்கின்றன

நிழல் மரங்கள்-

கசாப்புக் கடையில் தவிக்கும்

ஆடுகள் போல.



கடந்துபோகும் வேக வாகனங்கள்

எப்போதும் ஏற்படுத்தும்

அதிர்வுகளைத் தாங்கியபடி,

மோதுமோ மோதாதோ என்ற

பதைபதைப்புடன்

காட்சி அளிக்கும் பரிதாப மரங்கள்.



சாலை விரிவாக்கத்துக்காக

அளக்கும் கருவிகளுடன் நிற்கும்

ஊழியர்களுக்கும்

அதே மரம் நிழல் தருகிறது-

எல்லைக் கோட்டுக்குள்

தான் வருவது தெரியாமல்.



அதுசரி.

தெரிந்துதான்

என்ன ஆகப் போகிறது?

தன்னை அறுக்கும் ரம்பத்தை

மௌனமாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர?

.

Friday, July 22, 2011

எண்ணங்கள்


அனந்த பத்மனாபரின் களஞ்சியம் 

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலில்  கண்டெடுக்கப்பட்டுள்ள  பல  லட்சம் கோடி  மதிப்புள்ள ஆலயக் கருவூலம்   பலரையும் பிரமிப்பில்  ஆழ்த்தி உள்ளது.  இந்த பெருமளவு தங்கம், நவரத்தினங்கள் உள்ளிட்ட சொத்துக்களை என்ன செய்வது என்று உபதேசிக்க, இதில் எந்த பாத்தியதையும் இல்லாத  அறிவுஜீவிகள்  கிளம்பி விட்டார்கள். கடந்த வாரங்களில்  நடந்துவரும் அனைத்து கூத்துக்களையும் கண்டபின்னும், என்ன தான் நடக்கிறது என்று அமைதி காத்ததில், அற்புதமான பலன் விளைந்திருக்கிறது.
 .
ஹிந்து ஆலய களஞ்சியங்களை சூறையாடும் ஆர்வம் கொண்டவர்கள்   யார்?  அந்த மாநில அரசின் நிலை என்ன? ஹிந்து மத காப்பாளர்களின் நிலை என்ன? இந்த விவகாரம் வெளிவரக் காரணமாக இருந்த உச்சநீதி மன்றத்தின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் இப்போது தெளிவாகி விட்டது.
 .
இடதுசாரி சிந்தனை சார்ந்தவர்கள் எப்போதுமே ஆலயத்தை மதிப்பவர்கள் அல்ல;  அவர்கள் கிடைத்த  களஞ்சியத்தை  மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும் என்று சொன்னதில் வியப்பில்லை. வரலாற்று நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்தான் இதில் சறுக்கினார்கள். கிடைத்துள்ள களஞ்சியத்தின் சரித்திர மதிப்பை உணர்ந்தும், கீழ்மை உணர்வால், தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்தார்கள் அவர்கள்.
 .
ஆனால், கேரள  மாநில முதல்வர் உம்மன்  சாண்டி (இத்தனைக்கும்  இவர் கிறிஸ்தவர்!) ' அனந்த பத்மநாபர் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து கருவூலமும் பத்மநாப சுவாமிக்கே சொந்தம்' என்று கூறி, விவாதத்திற்கு  முற்றுப்புள்ளி  வைத்திருக்கிறார்.  அவருக்கு நன்றி.
 .
தோண்டத் தோண்ட  பெருகிவந்த கருவூலம் கண்டு அதிர்ந்த நீதிமன்றம், புலிவாலைப் பிடித்ததை உணர்ந்துகொண்டு, கோவிலின் கடைசி நிலவறையைத்   திறக்க தடை விதித்திருக்கிறது. கிடைத்துள்ள சொத்துக்களின்  மதிப்பை யூகத்திற்கு ஏற்றபடி ஊடகங்களில் வெளியிட்டதையும் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
.
அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து ஆலயச் சொத்துக்களைக் காக்க ரகசிய நிலவறை அமைத்து அதில்  ஆலயச் சொத்துக்களை பத்திரப்படுத்தியதுடன், பல தலைமுறைகளாக இந்த ரகசியத்தையும் காத்துவந்துள்ள திருவாங்கூர்  மார்த்தாண்ட வர்மா வம்சம் பாராட்டப்பட வேண்டியது.
.
எண்ணிப் பாருங்கள், நாடு முழுவதும் சிதிலமாக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்ட ஹிந்து கோவில்களில் எத்தனை கோடி கருவூலங்கள் இருந்திருக்கும்? தமிழகம் மட்டும் தான் அந்நிய ஆக்கிரமிப்பில் ஓரளவேனும் தப்பிப் பிழைத்தது. ஆயினும் நிலவறைகள் உள்ள திருச்செந்தூர், திருவட்டாறு கோவில்களின் கருவூலங்கள் மாயமானதையும் நாம் அரசல் புரசலாக அறிவோம். ஹிந்து ஆலயங்கள் அரசின் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயம் இப்போது உணரப்பட்டுள்ளது.
.
திருவனந்தபுரம் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஆலயச் சொத்துக்களின் மதிப்பை குறிப்பிடுகையில் ஊடகங்கள் புலம்புகின்றன. அவற்றுக்கு ஒரு வார்த்தை. அந்த சொத்துக்களை விலை மதிப்பிட முடியாது. அப்படியே பொருள்களின் எடை அளவில் மதிப்பிடுவதாக இருந்தாலும் அவற்றின் மதிப்பு கண்டிப்பாக ரூ. 1.76  லட்சம் கோடியைத் தாண்டும் என்பது திண்ணம். 

இந்நிலையில், அனந்த பத்மநாப சுவாமி கோவிலின் களஞ்சியம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வியே தேவையில்லை என்று அறுதியிடும் கட்டுரைகள் இணைய பக்கங்களில் காணக் கிடைத்தன.

அவை இதோ...

     - இரா. நாகசாமி (தமிழ் ஹிந்து)

      -ஜெயமோகன்

      -ஜெயமோகன்

     - ஆர்.வைத்தியநாதன் (சொல்வனம்)

   - உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா நேர்காணல் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

    - தினமணி தலையங்கம்

.

Tuesday, July 12, 2011

வசன கவிதை - 88







வென்றவனின் பிரகடனம்


ஆள்தான் பெரிய உருவம்

ஆனால், பரிதாபம்.


எதற்குத் துரத்துகிறார்கள் என்று

ஏதும் தெரியாமலே

ஓடிக் களைத்த போதில்தான்

பிருஷ்டத்தில் அந்த ஊசி பாய்ந்தது.

அடுத்த நிமிடம் என்ன நடந்தது?

மயங்கிச் சரிந்த பெரிய உருவம்

செங்கல் சூளைக்கு மண் அகழ்ந்த குழியில்

தன்னைத் தானே புதைத்துக் கொண்டது.


ஆள் தான் பெரிய உருவம்.

மனிதரின் பகுத்தறிவு சிறிதும் இல்லாத

பரிதாபத்திற்குரிய உயிரினம்.


கழுத்தில் ஒரு மின்னணுக் கருவியை மாட்டவே

துரத்துகிறார்கள் என்பது தெரியாத முட்டாள்.

துப்பாக்கியில் சுட்டது மயக்க ஊசி தான்

என்று தெரியாத ஐந்தறிவு ஜடம்.

ஓட ஓடத் துரத்துவார்கள் என்பது அறியாமல்

புவியில் பிறந்துவிட்ட அற்பப்பதர்.

ஆள் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால் போதுமா?


காட்டை ஆளும் லாவகம் தெரிந்தும்

நாட்டு மக்களின் அச்சம் புரியாமல்

எல்லை தாண்டிய பேராசைக்கு

சாவு தானே பரிசு?

'அட்டகாசம்' செய்யும் தும்பிக்கையான்

இப்போது உணர்ந்திருக்கக் கூடும்

மனிதரின் வலிமையை.


அப்பாவிகளுக்கும் பரிதாபிகளுக்கும்

மனிதரின் உலகில் என்றும் இடமில்லை.

வலிமை உடையவனுக்கே உலகம் சொந்தம்.

இது, உயிருடன் உள்ள பிற யானைகள்

புரிந்துகொள்ள வேண்டிய பாடம்.


காட்டைத் தாண்டாதே; தண்டனை உண்டு.

காட்டுக்குள் வந்தாலும் அனுமதி; அதுவே உன் தலைவிதி.

இது வென்றவனின் பிரகடனம்.

------------------------------------------------

குறிப்பு: கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் கடந்த ஜூலை 9 ம் தேதி இரவு,  காட்டு யானை ஒன்றுக்கு கழுத்தில் 'ரேடியோ காலர்' என்ற மின்னணுக் கருவியை மாட்டுவதற்காக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையின்போது மயக்க ஊசியால் யானை குழியில் விழுந்து பலியானது. அந்த யானைக்கு மூன்றாம் நாள் அஞ்சலி இது.

காண்க: பத்திரிகை செய்தி


படம்: இந்த யானைதான் வனத்துறை நடவடிக்கையில் பலியானதாக நம்பப்படுகிறது.
(பட உதவி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு, கோவை)

.

Tuesday, June 28, 2011

சிந்தனைக்கு

குறள் அமுதம்

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

- திருவள்ளுவர்

(வாய்மை- 298)

Thursday, June 23, 2011

எண்ணங்கள்




தீயில் கருகிய பயணிகளின் கதறல் காதில் விழுகிறதா?



கடந்த ஜூன் 7ம் தேதி இரவு வேலூர், காவேரிப்பாக்கம் அருகே நடந்த பயங்கர சாலைவிபத்தில், சென்னையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிவந்த தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 21 பேர் கருகி பலியாகி இருக்கின்றனர். இந்த விபத்தில் சிக்கிய அபலைகள் தப்பவே வழியின்றி கூண்டில் அடைபட்டவர்களாக எரிந்து சாம்பலாகி இருக்கின்றனர்.


மிகுந்த மனவேதனை அளிக்கும் இந்தக் கொடிய விபத்திற்கு தனியார் பேருந்து காரணமாக இருந்தாலும், விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தாத அரசுத் துறைகளுக்கும் இதில் பொறுப்புண்டு.


விபத்துக்குள்ளான தனியார் சொகுசுப்பேருந்தை வாங்கி ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. குளிர்சாதன வசதி கொண்டது என்பதால் இதன் முப்புறமும் கண்ணாடிச் சாளரங்கள் திறக்க முடியாதவையாக இருந்துள்ளன. முன்புற வாயிலும் மூடப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கிய பயணிகளால் பேருந்திலிருந்து வெளியேற முடியவில்லை. சாகும் தறுவாயில் அவர்கள் எழுப்பிய மரண ஓலத்தை நினைத்தாலே நெஞ்சம் பதைக்கிறது.


இந்த விபத்திற்குக் காரணம் பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே என்பது முதல்கட்ட விசாரணையில் தெளிவாகி இருக்கிறது. முன்செல்லும் வாகனங்களை வலதுபுறமாகவே முந்திச் செல்ல வேண்டும் என்ற சாலைவிதியை மீறி, முன்னால் சென்ற இரு லாரிகளை இடதுபுறமாக முந்த முயன்றுள்ளார், தனியார் பேருந்தின் ஓட்டுநர். அதேசமயம், முன்னால் சென்ற லாரி ஒன்றும் இடதுபுறமாகத் திரும்பவே, பேருந்து விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததில் சாலைவிபத்து தீவிபத்தாக மாறிவிட்டது.


பொதுவாகவே, தனியார் பேருந்துகள் எந்த சாலை விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இயக்கப்படுவதைக் காணலாம். இவற்றை போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மரியாதையைக் கண்டால் பல சூட்சுமங்கள் புரியவரும்.


அரசுப் பேருந்துகளைவிட அதிவேகமாக இயக்கப்படுவதால் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே, செல்ல வேண்டிய இடத்தை இவை அடைந்துவிடுகின்றன. இதுவே தனியார் சொகுசுப் பேருந்துகளின் வியாபார வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் இருக்கிறது. சாலைகளில் வாகனங்களை இயக்க உச்சபட்ச வேகம் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றை தனியார் பேருந்துகள் மதிப்பதே இல்லை. போக்குவரத்து காவல்துறையினரும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸôரும் இந்த விதிமீறலைக் கண்டுகொள்வதும் இல்லை.


அரசுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக உள்ளது. குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் ஓட்டுநர் நினைத்தாலும் அரசுப் பேருந்தை விரட்ட முடியாது. இது பேருந்துப் பயணிகளின் அச்சமற்ற பயணத்தை உறுதிப்படுத்துகிறது; தவிர எரிபொருள் செலவையும் குறைக்கிறது. தனியார் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படுவதில்லை.


தவிர வாகனங்களில் பொருத்தப்படும் முகப்பு விளக்குகளின் திறனுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. எதிர்வரும் வாகன ஒட்டுனர்களின் கண்களைக் கூசச் செய்யாததாக அவை இருக்க வேண்டும். இந்த விதியும் தனியார் பேருந்துகளில் அப்பட்டமாக மீறப்படுகிறது.


வாகனப் பதிவின்போதும், அவ்வப்போது செய்யப்படும் ஆய்வின்போதும் இவற்றை உறுதிப்படுத்த வேண்டியது போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கடமை. அவர்கள் கடமை தவறுவதால், தனியார் பேருந்துகளைக் கண்டாலே எமனைக் கண்டதுபோல எதிர்வரும் வாகனங்கள் விலக நேரிடுகிறது.


தனியார் பேருந்துகள் பயணிகளின் பாதுகாப்புக்கும், ஆபத்தான காலகட்டங்களில் தப்புவதற்கும் ஏற்றதாக உள்ளதையும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்திருந்தால், வேலூர் அருகே நடந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை குறைந்திருக்கக் கூடும்.


நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சிறுபாலங்கள் இருக்கும் இடங்களில் சாலையின் அகலம் குறைவது "பாட்டில் நெக்' எனப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் அத்தகைய பாலம் இருந்ததும் விபத்துக்கு காரணமாகிவிட்டது. இத்தகைய பாலங்கள் மாநிலம் முழுவதும் பல இடங்களில் விபத்தை ஏற்படுத்தியபடியே உள்ளன. சாலைப் பாதுகாப்பு பிரசாரம் செய்யும் நெடுஞ்சாலைத் துறை, இந்த சாலைக் குறைபாட்டைக் கவனிப்பதே இல்லை.


எந்த ஒரு விபத்தும் பல படிப்பினைகளை அளிக்கவே செய்கிறது. ஏர்வாடியில் மனநலக் காப்பகத்தில் நேரிட்ட தீவிபத்தில் (2001) 27 மனநோயாளிகள் தப்ப வழியின்றி பலியானதும், கும்பகோணம் பள்ளியில் நேரிட்ட தீவிபத்தில் (2004) ஏதுமறியாத 83 மழலைகள் கருகி பலியானதும், ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நேரிட்ட தீவிபத்தில் (2004) 57 பேர் பரிதாபமாக பலியானதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.


காவேரிப்பாக்கம் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தும், 21 பேரை உயிரோடு எரித்துக் கொன்று துக்ககரமான சம்பவங்களில் இடம்பிடித்துவிட்டது. இந்தச் சம்பவம் அளித்துள்ள படிப்பினைகளை நாம் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோமா? கடமையாற்ற வேண்டிய அரசுத் துறைகளின் அலட்சியப்போக்கை அரசு சரிப்படுத்துமா?


.

Wednesday, June 15, 2011

உருவக கவிதை - 68



சுழியம்



தொடக்கமும் முடிவும் ஒன்றெனக்கொண்ட

புள்ளியும் சுழியமும் முடிவில்லாதவை.


.

Friday, June 10, 2011

உருவக கவிதை - 67



நிலவின் களங்கம்


வட்ட முழு நிலவில்

கருந்திட்டுக்கள்,

வண்ணக்கலவையின்

அற்புத ஜாலம்.



நிலவை உரசும்

கருமேகங்கள்,

வண்ணக்கலவையின்

இயற்கைக்கோலம்.



நிலவின் களங்கம்

கருந்திட்டுக்களுமல்ல;

கருமேகங்களுமல்ல.

நமது மனதின்

தோற்றப்பிழைகள்.

.

Tuesday, May 31, 2011

உருவக கவிதை - 66





ஏக தேசம்




ஏகதேசமாய்
இது 'ஏக' தேசம் தான்


எல்லையில் அத்துமீறப்பட்டாலும்
கொல்லையில் தாக்கப்பட்டாலும்
அல்லையில் அரிக்கப்பட்டாலும்
எல்லைக்கோடுகள் பறிபோகாத
வரைபடங்களில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


மொழிவேற்றுமையால் கூறுபட்டாலும்
மதங்களுக்குள் மாறுபட்டாலும்
உணவும் உடையும் வேறுபட்டாலும்
ஜாதி அரசியலில் சாதித்துக்
காட்டுவதில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


சோற்றுக்கு வழியற்ற கபோதிகளும்
பணத்தில் மிதக்கும் பரிதாபிகளும்
நடுத்தர வர்க்க நாதாரிகளும்
திரையுலக மாயையில்
உழல்வதில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


கட்சிகள் பலவாய்ப் பிரிந்திருந்தாலும்
சித்தாந்தங்கள் பல இருந்தாலும்
மேடைகள், அணிகள் மாறி வந்தாலும்
குற்றவாளிகளின் கூடாரமான
அரசியலில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


ஏறுக்கு மாறாக இருக்கும் சூழலிலும்
எங்கும் காணாத இனப்பூசல் இருப்பினும்
வர்க்க வேற்றுமை வாதிக்கும் போதிலும்
மக்களை கழுத்தறுக்கும்
ஊழலில் என்னே ஒற்றுமை!
ஏகதேசமாய்
இது ஏக தேசம் தான்.


அநேக காரணங்கள் இருந்தாலும்
ஏகமாய் ஏற்கலாம்-
அநேக நாடுகளில்
நம்மைப்போல 'ஏக' தேசம்
யாருண்டு உலகில்?
இது ஏக தேசமே தான்-
இது ஏகதேசமல்ல.


.

.