Friday, May 4, 2012

எண்ணங்கள்



நமது தார்மிக வீழ்ச்சி 

பாலியல் சர்ச்சைகளுக்கும் இந்திய அரசியலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அபிஷேக் சிங்வி விலகக் காரணமானது கூட பாலியல் சர்ச்சை தான். தன்னுடன் பணிபுரியும் பெண் வழக்குரைஞருடன் தகாத செயலில் அவர் ஈடுபட்டபோது விடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோ பதிவுகள் தொலைக்காட்சிகளில் வெளிவராமல் தடையாணை பெற்ற சிங்வியால் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு ஒரு வார காலத்துக்கு சிங்விதான் மிகவும் தேடப்பட்ட நபராக இருந்தார். ஆரம்பத்தில் இந்தச் சர்ச்சைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று மறுத்து வந்த சிங்வி, இறுதியில் கட்சியின் பெயரைக் காப்பாற்ற பதவி விலகி இருக்கிறார்.

இப்போதும்கூட சிங்விக்கு காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்குகிறது. தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் முடிச்சுப் போடக் கூடாது என்று அக்கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய சர்ச்சைகள் புதியவை அல்ல. 1995-இல் தனது மனைவி நைனா சஹானியைக் கொலை செய்த தில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏ.வுமான சுஷீல்குமார், அந்தச் சடலத்தை தந்தூரி அடுப்பில் எரித்தார். இந்தக் கொலைக்குக் காரணம்கூட முறையற்ற உறவுதான். 2003-இல் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநராக இருந்தபோது நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவத்தை மறக்க முடியாது. ஆளுநர் மாளிகையிலேயே மூன்று பெண்களுடன் கும்மாளமிட்டதாக திவாரி மீது விடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து அவர் 2009 டிசம்பரில் பதவி விலக வேண்டிவந்தது.

இதைவிட வேதனையான நிகழ்வு, திவாரிதான் தனது உண்மையான தந்தை என்று நிரூபிக்க நீதிமன்றத்தில் போராடிவரும் ரோஹித் சேகரின் வாழ்க்கை. தனது தாய் உஜ்ஜாலா சர்மாவுக்கும் திவாரிக்கும் இடையிலான கள்ள உறவில் பிறந்தவன்தான் என்று நிரூபிக்க அவர் போராடுகிறார். இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க மரபணு சோதனைக்கு ஆட்படுமாறு திவாரிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நாட்டின் ஆளும் கட்சி மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியும் இவ்விஷயத்தில் சளைத்ததல்ல. பாஜக முழுநேர ஊழியரும் தேசிய பொதுச்செயலாளருமான சஞ்சய் ஜோஷி, ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டதற்காக 2005-இல் கட்சியிலிருந்தே விலகினார். அண்மையில் தான் கட்சிக்குள் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ.க்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண சவதி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் பேரவையிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை தற்போதும் நடக்கிறது.

விசாரணையில், மேலும் 15 எம்எல்ஏ.க்கள், கட்சி வித்தியாசமின்றி இக்காட்சியை ரசித்தது தெரிய வந்தது. மக்களாட்சியின் கோவிலான சட்டப் பேரவைக்கு நேரிட்டிருக்கும் நிலை பரிதாபமானது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் அக்கட்சியின் அமைச்சரான ஷோபா கரந்தலேவை தொடர்புப்படுத்தி பலவிதமான பிரசாரங்கள் செய்யப்பட்டுவிட்டன; வித்தியாசமான கட்சி என்ற தனது முத்திரை வாக்கியத்தை இழந்து நிற்கிறது பாஜக.

1990-களில் கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு நமது அரசியல்வாதிகளின் அசிங்கமான பக்கத்தைத் தோலுரித்தது. கோழிக்கோட்டில் ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் விபசாரத் தொழில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் லீக் தலைவர் குன்னாலிக்குட்டி மீது வழக்கு நடக்கிறது. இன்றும் அவர் கேரளத்தில் முக்கியமான அமைச்சராக நீடிக்கிறார்.

இவ்வாறாக இந்திய அரசியலில் பாலியல் சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து அடங்குகின்றன. இந்தியாவில் பாலியல் கருத்துகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. அதேசமயம் அதிகார பலத்தால் பாலியல் வரைமுறைகளை மீறவும் அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. இவ்விஷயத்தில் ஒரு விசித்திரமான அலட்சிய மனப்பான்மை நமது மக்களிடையே நிலவுவதுதான் புரியாத புதிர்.

துறவறத்தை உயர்ந்ததாகப் போற்றும் பண்பாடு இந்தியப் பண்பாடு. இல்லறத்திலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கலாசாரம் உள்ள நாடு இந்தியா. நமது வீட்டில் இந்த உயர்ந்த கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் நாம், பொதுவாழ்க்கையில் இவை மீறப்படும்போது புலம்புவதுடன் நிறுத்திக் கொள்கிறோம். அதுதான் விசித்திரம்.

போகபூமி என்று விவேகானந்தரால் வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில், அதிபர் கிளிண்டன் ஒரு பெண்ணுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார் என்பதற்காக அவரது ஆட்சிக்கு அந்நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். பாலியல் சுதந்திரம் உள்ள அமெரிக்காவிலேயே தமது ஆட்சியாளர்களும் தலைவர்களும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாமோ, தனிப்பட்ட வாழ்க்கையில் தூயவர்கள். அதேசமயம், நமது தலைவர்கள் உதிர்க்கும்  ‘பொது வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு’ என்ற தத்துவங்களை ஜீரணித்தபடி வாழ்கிறோம். நமது தார்மிக வீழ்ச்சி வருத்தம் அளிக்கிறது.

- தினமணி (04.05.2012).
நன்றி: மதி (தினமணி- 28.04.2012 )
.
.

எண்ணங்கள்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்

.



அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம்.

உங்கள் யானைப்பலி கட்டுரை கண்டேன். மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அடிக்கடி ‘யானைகள் அட்டகாசம்’ செய்தி வெளியாகும் கோவை மாவட்டத்தில் இருக்கும் எனக்கு, யானைகள் படும் பாடு உங்களைப் போலவே துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

யானைகள் நடமாடும் வழித்தடங்களை ஆக்கிரமித்து கான்கிரீட் கட்டடங்களையும் வேலிகளையும் அமைத்துவிட்ட நிலையில், யானைகள் தடுமாறுகின்றன. அவை தடம் மாறிக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும்போது, “யானைகள் அட்டகாசம்” என்று செய்தி வெளியிட்டு அதுகுறித்து சட்டசபையிலும் நாம் பேசுகிறோம். உண்மையில் அட்டகாசம் செய்வது யார்? யானைகளைக் கண்காணிக்க கருவி மாட்டுவதற்காக மயக்க ஊசி செலுத்தியதில் உயிரிழந்த யானைக்கு பதில் சொல்ல யாருமில்லை. கேட்கவும் நாதியில்லை.

இது குறித்த எனது ‘வென்றவனின் பிரகடனம்’ என்ற கவிதை எனது வலைப்பூவில் 12.07.2011 -ல் எழுதினேன் (http://kuzhalumyazhum.blogspot.in/2011/07/88.html).

யானைகள் நமக்குப் பிரியமானவை. அதே சமயம் நம்மால் அதிகமாகக் கொடுமைப்படுத்தப்படுபவை. அரை வயிறு கூட நிறையாமல், கோவில் வாசலில் நாம் போடும் ஒரு ரூபாய்க் காசுக்காக நமது தலையை வருடப் பயிற்சி அளிக்கப்பட்ட பரிதாப ஜீவன்களாக அவை காட்சி அளிக்கின்றன.

நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தகவலும் உண்மை. இந்த அடிமைத் தளையை உடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் தார்மீக ஆவேசம் அனைவரிடத்திலும் பரவ வேண்டும். சூழல் இயக்கங்கள் இதனை ஒரு போராட்டமாகவே முன்னெடுக்க வேண்டும்.

உங்கள் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி.

-வ.மு.முரளி

.


Friday, April 27, 2012

எண்ணங்கள்

உணர்ச்சிகளைத் தூண்டும் நேரமல்ல இது...

 

1999-ஆம் ஆண்டு, டிசம்பர் 30-ஆம் தேதி, நேபாளத்திலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தலிபான்களால் நடுவானில் கடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்தில் இறக்கப்பட்ட அந்த விமானத்தில் பிணைக் கைதிகளாக 178 பயணிகள் இருந்தனர்.

அவர்களை விடுவிக்க, இந்தியச் சிறைகளில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்க நிறுவனர் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று தலிபான்கள் மிரட்டினர்.

இதையடுத்து, தலிபான்களுடன் பேச்சு நடத்த அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காந்தஹார் சென்றார். அவரே பயங்கரவாதிகள் மூவரையும் தலிபான்களிடம் ஒப்படைத்து, விமானத்தையும் பயணிகளையும் சிப்பந்திகளையும் மீட்டு வந்தார்.

இந்தச் சம்பவத்தில் தலிபான்களால் மீட்கப்பட்ட மசூத் அசார், பின்னாளில் 2001 டிசம்பரில் தில்லி நாடாளுமன்றம் மீது நடந்த தாக்குதலிலும், மும்பையில் 2008 நவம்பரில் நடந்த பயங்கரத் தாக்குதலிலும் மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது. இன்று உலகில் தேடப்படும் அதிபயங்கரக் குற்றவாளி என்று இவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

1989, டிசம்பர் 8-ஆம் தேதி காஷ்மீரில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா சயீத் பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த, சிறையிலுள்ள ஐந்து பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. தனது மகளை விடுவிக்க உள்துறை அமைச்சரே நேரில் சென்று பேச்சு நடத்தினார். இறுதியில் 5 பயங்கரவாதிகளை விடுவித்து, மகளை மீட்டு வந்தார் அன்புத் தந்தை. விடுவிக்கப்பட்ட அந்தப் பயங்கரவாதிகளால் ஜம்மு காஷ்மீரில் இன்றும் தொடர்கிறது பிரிவினைப் போராட்டம்.

இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் அரசின் மீது நமது ஊடகங்கள் செலுத்திய நிர்பந்த வலிமை அளப்பரியது. இதுபோன்ற ஆள்கடத்தல்களின்போது, ஊடகங்கள் பல சமயங்களில் தாங்களே தீர்ப்பு வழங்கும் நிலைக்குச் சென்று விடுகின்றன.

கடத்தப்பட்டவர் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அதேசமயம், கடத்தல்காரர்களுடன் அரசு பேச்சு நடத்திக் கொண்டிருக்கும்போது, அரசை நிலைகுலையச் செய்வதாக ஊடகங்கள் செயல்படக் கூடாது. ஆனால், பரபரப்புக்காக ஊடகங்கள் எல்லை மீறுகின்றன.

காந்தஹார் விமானக் கடத்தலின்போது, நமது 24 மணிநேர செய்தி சேனல்களின் நேரடி ஒளிபரப்பு ஒருவகையில் தலிபான்களுக்கு உதவுவதாகவே அமைந்தது. பிணைக் கைதிகளின் உறவினர்கள் நடத்திய போராட்டங்களுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கடத்தல்காரர்களின் பிடியில் விமானம் இருந்தபோது, பத்திரிகைகளும் ஊடகங்களும் தினசரி அரசைக் கடுமையாகக் கண்டித்துச் செய்திகள் வெளியிட்டு, அரசின் தன்னம்பிக்கையைக் குலைத்தன. அதனை பின்னாளில் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அரசு மீது செலுத்தப்பட்ட நிர்பந்தமே பயங்கரவாதிகளிடம் அரசு அடிபணியக் காரணமானது என்று அவர் கூறியிருக்கிறார்.

அதேபோன்ற நிலைதான் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் விவகாரத்திலும் காணப்படுகிறது. கடந்த 21-ஆம் தேதி வனப்பகுதியில் அரசு விழாவில் பங்கேற்ற சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டிருக்கிறார். அதற்கு முன் இரு காவலர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஏற்கெனவே ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் ஒரு மாதத்துக்கு முன் கடத்தப்பட்ட ஆளும் பிஜு ஜனதாதள எம்எல்ஏ ஜினா ஹிகாகா விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

அதற்கு முன் கடத்தப்பட்ட இரு இத்தாலியர்களை மீட்பதற்காக 13 மாவோயிஸ்டுகளை ஒடிசா அரசு சிறைகளிலிருந்து விடுவிப்பதாக அறிவித்திருக்கிறது.

இனி இத்தகைய ஆள்கடத்தல் நாடகங்கள் தொடர்கதையாகக் கூடும். மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ளும் திறனற்று நமது அரசுகள் திண்டாடும் நிலையில், அரசுக்கு மேலும் சுமையாகின்றன, ஊடகங்களின் செய்திகள். சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழக ஊடகங்கள் இதில் விசேஷ கவனம் செலுத்துகின்றன.

கடத்தப்பட்ட அதிகாரியின் குடும்பத்தினர், உறவினர்கள், சொந்த ஊர்க்காரர்கள், அவர் படித்த பள்ளி, கல்லூரி, வசித்த பகுதிகளின் மக்களைப் பேட்டி கண்டு பரபரப்பாகச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் செய்யத் தவறிய ஒரு விஷயம், மாவோயிஸ்டுகளின் அசுரத்தனத்தை வெளிப்படுத்தாதது.

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதிலும் முறையிடுவதிலும் தவறில்லை. ஆனால், ரத்தத்தில் மனு எழுதி திருநெல்வேலி ஆட்சியரிடம் ஒருவர் அளித்திருப்பதை என்னென்பது?


தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், முக்கிய அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கடத்தப்பட்ட அதிகாரிக்காக அறிக்கை வெளியிடுகின்றனர். கடத்தப்பட்டபோது அவரைக் காக்கப் போராடி உயிர் நீத்த சத்தீஸ்கர் காவலர்கள் இருவரைப் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா?

 சிக்கலான நேரங்களில் தான் உணர்ச்சிகளைத் தள்ளிவைத்து அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். பதறிய காரியம் சிதறிவிடும். கடத்தப்பட்டவர்களை மீட்கப் போராடும் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்கலாமே?

- தினமணி (27.04.2012)
.
 

Friday, March 23, 2012

உருவக கவிதை - 65


அஸ்தியில் கனவுகள் கலப்போம்!

உறையாத ரத்தத்தின்
வாசம் எங்கும்.
வெடிக்காத குண்டின்
நெடி இன்னமும்.
வெல்லாத போரின் நினைவுகள்
என்றும் எங்கும்.

தூக்குக் கயிறை
முத்தமிட்ட இளைஞர்களின்
இறுதி ஆசைகள்
நிறைவேறாத கனவுகள்.
விடுதலை வேள்வியில்
ஆகுதியான வீரர்களின்
சாம்பல் மீது எழுந்த
கட்டடம் சரிகிறது.

சாம்பலின் வீரியம் உணராமல்
கற்களைப் பிணைத்த
அரசியல் கலவையால்...
ரசமட்டம் தவிர்த்த
சுயநலமிகளின் மேதமையால்...
சரியும் கட்டடத்திற்கு
காரணமாயிரம்.

இப்போதும்
கட்டடத்தைக் காப்பாற்றலாம் -
அஸ்திவாரத்தில்
அவர்களது கனவுகளைக் கலந்தால்.



(இன்று மாவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் நாட்டிற்காக உயிர் நீத்த தினம்)

.
மீண்டும் பதிவிடப்படும் பதிவு



Thursday, March 22, 2012

எண்ணங்கள்


'திடக்கழிவு மேலாண்மை' - நாமகரணம் தீர்வாகுமா?

குப்பை இல்லாத நகரத்தைப் பார்ப்பது ஊழலற்ற அரசியல்வாதியைப் பார்ப்பது போலாகிவிட்டது. நகரங்கள் என்றில்லை, கிராமங்களிலும் கூட இப்போது திடக்கழிவு மேலாண்மை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பின்மையே காரணம் எனில் மிகையில்லை.

மனித உடலே தினசரி தன்னிடம் சேரும் அசுத்தத்தை வெளியேற்றிக்கொண்டு தான் உயிர் வாழ்கிறது. அவ்வாறே நமது வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தினசரி வீட்டைப் பெருக்கி குப்பைகளை அகற்றாத இல்லத்தில் திருமகள் வாசம் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையும் நம்மிடம் உண்டு.

அதேசமயம், நமது வீடு மட்டும் சுத்தமானால் போதும், தெருவும் ஊரும் எப்படிப் போனால் என்ன என்ற அலட்சிய மனப்பான்மை பலரிடமும் உள்ளது. அதன் விளைவையே தெருக்களிலும் முச்சந்திகளிலும் குப்பை மலைகளாக நாம் காண்கிறோம். அவற்றை மூக்கைப் பொத்தியபடி, மறுபுறம் திரும்பியபடி வேகமாகக் கடக்கிறோம்.

இந்தக் குப்பைகளைக் கிளறியபடி வலம் வரும் பன்றிகளும், நாய்களும், கோழிகளும் சுகாதாரக் கேட்டை அதிகப்படுத்துகின்றன. இதுகுறித்து மக்களுக்கும் கவலையில்லை; மக்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளாட்சிப் பதவிகளில் அமர்ந்திருப்போருக்கும் கவலையில்லை.

குப்பைகளை அகற்றுவதற்கு "திடக்கழிவு மேலாண்மை' என்ற புதிய நாமம் சூட்டியது மட்டுமே நமது அரசுகளின் சிறப்பு. ஒவ்வொரு உள்ளாட்சியிலும் திடக்கழிவுகளைக் குவிக்க தனியிடம் ஏற்பாடு செய்வதற்குள் நிர்வாகங்களின் விழி பிதுங்கி விடுகிறது. இதற்கு அதனருகே குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவிப்பது எல்லா ஊர்களிலுமே காட்சியாகி வருகிறது.

இந்தக் குப்பையை உரமாக்க பல லட்சம் செலவில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் எந்த இடத்திலும் குப்பைகள் உயிர் உரமாக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனையானதாக செய்திகள் இல்லை.

குப்பைகளில் மறுசுழற்சிக்கு உரியவற்றைத் தரம் பிரித்துப் பயன்படுத்துவதும் திடக்கழிவு மேலாண்மையில் ஓர் அம்சம். நிதர்சனத்திலோ, மட்க இயலாத குப்பைகளைத் தீவைத்து எரிப்பதே நிகழ்வாக இருக்கிறது. அந்தப் புகைக்கு அஞ்சியே அதன் அருகிலுள்ளோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வீதிதோறும் குப்பை சேகரிக்கும் ஏற்பாடும் பலவீனமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் குப்பை தெருவை நாறடிக்கிறது. குப்பை சேகரிப்பதற்கு உள்ளாட்சிகளில் இருந்த பணியாளர் எண்ணிக்கையும் சிறுகச் சிறுகக் குறைந்து வருகிறது.

உதாரணமாக, திருப்பூர் மாநகராட்சியில் தோராயமாக இருக்க வேண்டிய தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை: 3,000. ஆனால் இருப்பவர்களோ 1,200 பேர். கிட்டத்தட்ட மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. இந்த எண்ணிக்கையிலுள்ள பணியாளர்களைக் கொண்டு மாநகரைத் தூய்மையாகப் பராமரிப்பது எப்படி?

கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் 72 பேர் இருக்க வேண்டும். ஆனால் "மருந்துக்கும்கூட' சுகாதார ஆய்வாளரே இல்லை. இந்தப் பணியை தற்போது மேற்கொள்பவர்கள், இதற்கு அடுத்தநிலையில் உள்ள மேற்பார்வையாளர்கள் தான். எனில் மேற்பார்வையாளர்களின் பணியை யார் மேற்கொள்வது? 

இதேபோன்ற நிலைதான் பெரும்பாலான உள்ளாட்சிகளில் காணப்படுகிறது. புதிய பணியாளர் நியமனம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. இருக்கும் பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் காலியாகவே விடப்படுகின்றன. இதன்மூலமாக, செலவினத்தைக் குறைப்பதாக உள்ளாட்சிகளும் அரசும் கருதுவதாகத் தெரிகிறது.

மாறாக, குறைந்த ஒப்பந்தக் கூலியுடன், குப்பை சேகரிக்கும் பணிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. குறைந்தபட்சக் கூலி, தொழில் நிரந்தரமின்மை, பணிப் பாதுகாப்பின்மை போன்ற காரணிகளால், அவர்களால் இப்பணியில் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய முடிவதில்லை. இதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் முடங்கினால் ஊரின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். எது எதற்கோ கோடிக் கணக்கில் செலவு செய்யும் நமது அரசுகள், நாட்டின் சுகாதாரம் காக்கும் பணியில் தங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்துப் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளித்தால் குறைந்தா போய்விடும்?

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு பல முறை ஊதிய உயர்வு வழங்கும் அரசுகள், நமது அடிப்படை சுகாதாரத்தைக் காக்கும் பணியாளரின் வாழ்க்கை நிலை குறித்து கவலைப்படாமல் இருப்பது முறையல்ல. பிற அரசுத் துறைப் பணியாளர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களது ஊதியம் மிகக் குறைவாகவே இருக்கும்.

நகர சுத்தித் தொழிலாளர்கள் தேர்தல் பணியாளர்களாக இருக்கப் போவதில்லை என்பதால், அவர்களது முக்கியத்துவம் இல்லாது போய்விடாது. இதை அரசு உணர்வது அவசியம். திடக்கழிவு மேலாண்மையை திறம்படச் செய்வது எப்படி என்பதற்கான அணுகுமுறைகளை வகுப்பதும் அதைவிட அவசியம்.



Wednesday, February 15, 2012

உருவக கவிதை - 69


பால் டீ


லைட் டீ,
ஸ்ட்ராங் டீ,
மீடியம் டீ,
லெமன் டீ,
மசாலா டீ,
பிளாக் டீ,.. .

சுகர் குறைச்சல், சுகர் அதிகம், சுகர் இல்லாமல்,
ஆற்றாமல், நல்லா ஆறவைத்து,...

பார்சல் டீ, டூ பை த்ரீ, ஒன் பை டூ,
பேப்பர் கப்பில்,  டவராவில்...

எப்படிக் கேட்டாலும்
கொடுக்கிறார் மூலைக்கடை நாயர்.

எல்லாம் சரிதான்.
அது என்ன பால் டீ?


.

Monday, February 13, 2012

புதுக்கவிதை - 147






நாய்களும் 
நாய்கள் நிமித்தமும்....



காதலர் தினம் கொண்டாடுவதில்லை...

காதலியை மயக்கமாக்கி
சகாக்களுடன் நாசமாக்குவதில்லை...

அதையும் படம் பிடித்து
இணையத்தில்
காணொளி ஆக்குவதும் இல்லை...

நாய்கள்.
 
 
குறிப்பு: நாளை (பிப். 14) காதலர் தினம் என்கிறார்கள்....

Thursday, February 2, 2012

எண்ணங்கள்


'போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

எம்பிபிஎஸ் முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து.

ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், எமலோகத்துக்கு அனுப்பிவைத்த அதே மொபைல்போன் தான்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை.÷கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம். அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்?

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
 
நன்றி: தினமணி (02.02.2012)