Sunday, August 8, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

-நல்லாதனார்
(திரிகடுகம்- 12)

.

Saturday, August 7, 2010

புதுக்கவிதை - 112


சுட்ட பழம்


ஏதோ ஒரு கோபத்தில்
'காய்' விட்ட குழந்தை
கள்ளமின்றிச் சிரிக்கிறது
மறு நிமிடமே.
பதிலுக்கு சிரிக்கும்
உள்ளத்தின் கள்ளத்தை
சுள்ளெனச் சுடுகிறது
மழலையின் 'பழம்'.

Friday, August 6, 2010

உருவக கவிதை - 56



கயிற்றரவு



நேரம் சோரம் போகாமலிருந்தால்
அரவும் கயிறாகும்;
இரவும் பகலாகும்.

நெஞ்சில் உரமிருந்தால்
பாம்பும் ஏணியாகும்;
பரமபதம் சித்திக்கும்.

பாற்கடல் கடைந்த மேருவின்
முதுகில் பாம்பின் சுவடுகள்.
விடமுண்டு மீண்டால்
ஈசனாகலாம்.

பாம்பின் விடம் பல்லில்.
மனிதனின் விடம் எதில்?

படையும் நடுங்குவது தெரியாமல்
உயிராசையுடன் விரையும்
அரவின் அரவம்
காதுள்ளவர்களுக்குக் கேட்பதில்லை.

வாலைப் பிடித்து சுழற்றி அடித்த
வீரத்தைப் பறை சாற்றுபவர் எவரும்
பாம்பின் பாவத்தைச் சொல்வதில்லை.

விடமில்லா மண்ணுளியை
ருசிப்பதில் தலையென்ன?
நடுக்கண்டம் என்ன?

பாம்பின் ஜீவன் எதில்?
மனிதனின் பயத்தில்.
எல்லாம் நேரம் தான்.

இரை விழுங்கிய மலைப்பாம்பு
நகராமல் நகர்கிறது.
யானையைப் பிணைக்கும்
வடக்கயிறாய்க் கிடக்கிறது.

இது பாம்பா, பழுதா?
கவிதையா, கழுதையா?
கயிற்றரவு பிடித்து
கரை சேர்ந்தால் தெரியும்.
..

Thursday, August 5, 2010

உருவக கவிதை - 55



நடுநிசி நாய்கள்



ஒன்றை ஒன்று மோப்பம் பிடித்தபடி,
ஒன்றை ஒன்று உறுமியபடி,
வாலைக் குழைத்தபடி,
அங்கும் இங்கும் அலைகின்றன தெருநாய்கள்.

இருபுறமும் வெறிக்கப் பார்த்தபடி
தலையைச் சொறிந்துகொண்டு நடக்கும்
பித்தனைக் கண்டு காதை விரைக்கும் நாய்களை
கல்லெடுத்து விரட்டுகிறாள்
இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் அரவாணி.

மிதிவண்டியை உந்திச் செல்லும்
கூர்க்காவின் தடிவீசலுக்கு
பயந்து பம்முகின்றன
சிரங்கு பீடித்த தெருநாய்கள்.

ஒதுக்குப்புறமாய் கோணி விரித்துப் படுத்திருக்கும்
பிச்சைக்காரியை நோட்டமிடும்
மர்ம ஆசாமியைக் கண்டு குரைக்கிறது
ஜோடி கிடைக்காத தெருநாய் ஒன்று.

சற்றுத் தள்ளி இருக்கும் கடைத் திண்ணையில்
சுருண்டு கிடக்கும் தொழுநோயாளியின்
இருமல் சத்தம் எங்கும் எதிரொலிக்கிறது;
அருகில் படுத்திருந்த தெருநாய்
விருட்டென எழுந்து வேறிடம் நகர்கிறது.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.
தெரு விளக்குகள் மந்தமாக எரிகின்றன.
நகரமே தூங்குகிறது தெருநாய்களைத் தவிர.

போர்வை போர்த்தியது போல
இருளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது
லேசான நடுநிசிப்பனி.

இரவு ரோந்தை சபித்தபடி
தெருமுனையில் நாற்காலியில் அமர்ந்து
பூனைத் தூக்கத்தில் இருக்கும் காவலரை
நெருங்கி முகர்ந்துவிட்டு நகர்கிறது
இன்னொரு தெருநாய்.

இரவுத் தொழிலாளிகளுக்காக
பீடியும் தேநீரும் கொண்டு செல்லும்
இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் விரட்டிவிட்டு
மூச்சிரைக்கத் திரும்புகின்றன தெருநாய்கள்.

திடீரென்று எங்கோ ஒரு நாய் குரைக்கிறது.
தொடர்கிறது இதர நாய்களின் குரைப்பு.
பத்து நிமிடத்திற்குப் பிறகு அமைதி.

விடியும்வரை தொடரும்
நாய்களின் ராஜாங்கத்தில்
நிம்மதியாகத் தூங்குகிறது நகரம்.

சாக்காட்டில் ஆழ்ந்துவிட்ட நகரின் உயிர்த்துடிப்பாக
முன்னங்கால்களை முன்னே பரப்பி
இருளைக் கிழித்தபடி ஊளையிடுகிறது,
கைவிடப்பட்ட ஜாதிநாய்.

வேசை வார்த்தைகளால் ஏசியபடி
கம்பெடுத்து துரத்துகிறான்
கோயில் வாசல் பிச்சைக்காரன்.
.

Wednesday, August 4, 2010

புதுக்கவிதை - 111



கிரிக்கெட் அகராதி - 7




கிரிக்கெட்:
சாகச விளையாட்டுக்களையும்
தடகளத்தையும் ஒழித்துக்கட்டிய-
மேன்மையான விளையாட்டு.
.

Tuesday, August 3, 2010

புதுக்கவிதை - 110



கிரிக்கெட் அகராதி - 6




கிரிக்கெட் 'கேட்ச்'
பறந்துவரும் பந்தை
குட்டிக்கரணம் அடித்துப் பிடித்து
கரவொலி வாங்குவது.

கிரிக்கெட் 'சீசன்'
பயிர் விளையாத கழனிகளில்
உள்ளூர் சிறுவர்கள், இளைஞர்கள்
உற்சாகமாய் விளையாடும் காலம்.
.

Monday, August 2, 2010

புதுக்கவிதை - 109



கிரிக்கெட் அகராதி - 5




கிரிக்கெட் 'பிட்ச்'
ஆடத் தெரியாதவர்கள்
கோணல் என்று சொல்வது;
களிமண்ணால் ஆனது.

கிரிக்கெட் 'பிக்சிங்'
ஆட்டத்தின் போக்கை
முன்கூட்டியே தீர்மானிப்பது;
களிமண்கள் அறியாதது.

கிரிக்கெட் 'விக்கெட்'
பந்து வீசுபவர் குறி பார்ப்பது;
மட்டையாளர் பாதுகாப்பது;
வெற்றி பெற்றவர் பிடுங்கிச் செல்வது.

.

Sunday, August 1, 2010

புதுக்கவிதை - 108



கிரிக்கெட் அகராதி - 4




கிரிக்கெட் அணி
இணைந்து ஆடுவதாக
தோற்றம் தருவது;
மேலாளர், மருத்துவர் கொண்டது.

கிரிக்கெட் தொடர்
ஒரு மாதத்துக்கேனும்
சோற்றுக் கவலை மறக்கவைப்பது;
ஆண்டுக்கு 12 முறை நடப்பது.

கிரிக்கெட் விளம்பரதாரர்
வாழவைப்பதாகக் கூறி
வாழ்வதில் வல்லவர்;
விதிகளை இயக்குபவர்.

கிரிக்கெட் 3-வது நடுவர்
தீர்மானிக்க முடியாத
சிக்கல்களை அவிழ்க்க
விஞ்ஞானம் அளித்த பரபரப்பு உத்தி.
.