பின்தொடர்பவர்கள்

Sunday, January 16, 2011

வசன கவிதை - 85


குறளின் குரல்


குறள் என்றும்
தமிழின் முகவரி.
உலகம் அறிந்த
தமிழின் முதல் வரி.
.
அறம், பொருள், இன்பம்
என்னும் முக்கடலில்
வாழ்க்கைத் தோணியை
செலுத்தி முடித்தால்
வீட்டை ஏகலாம்.
தவிர்க்க வேண்டியவற்றில் விலகவும்,
நாட வேண்டியவற்றில் விளங்கவும்,
வழிகாட்டும் குறள்.
அந்தகார இருளில் தவிக்கும் மானிடத்திற்கு
ஒளிவிளக்காய் விழி காட்டும் குறள்.

133 அதிகாரமும்
கடையில் விற்க அல்ல;
கடைபிடிக்க.

பேருந்துகளில் எழுதுவதுடன்
முற்றுப்பெறுவதில்லை
குறளின் பயணம்.
மேடைப் பேச்சுகளில்
அலங்கரிக்க மட்டுமல்ல
குறளின் விநயம்.

தவிக்கும் மானுடத்தின் தாகம் தீர்க்கும்
அறிவு கங்கையை அருகில்வைத்துக்கொண்டு
பாலைவனச் சோலைகளைத்
தேடி அலையும் கோடைக்காலப் பயணிகளா நாம்?

நிழல் தரும் ஆலமரம் குறள்.
இன்சுவைக் கேணி குறள்.
வீசும் நறுந் தென்றல் குறள்.
மணங்கமழ் மலர்வாசம் குறள்.
காற்றின் இன்னிசை குறள்.
எல்லாம் அனுபவித்தறிய வேண்டியவை.
சிலைகளில் மயங்குபவர்களுக்கு
சித்தாந்தங்கள் புரிவதில்லை.

133 அடி உயர சிலை வைப்பதால்,
நிழல் கிடைத்துவிடுவதில்லை.
கோட்டம் அமைப்பதால்
குறட்பாக்கள் புரிவதில்லை.
வள்ளுவர் தினத்தால்
வாய்ப்பது ஒன்றுமில்லை.

படிப்பதோ, பரவசப்படுவதோ,
குறளுக்குப் பெருமையில்லை.
குறள் கூறும் பாதையில் நடை பயின்றால்
வாழ்க்கை வசப்படும்.
வையகம் வனப்புறும்.

இது குறளின் குரல்.
வள்ளுவர் தினம்
மனதில் எழுப்பிய
நினைவின் குரல்.

மூன்றடியால் உலகளந்த
உத்தமன் போல,
ஈரடியால் வாழ்வை அளந்த
வள்ளுவன் வாழ்க!
இனியேனும்,
ஓரடியேனும் குறளைப்
பின்பற்றி குவலயம் உய்யட்டும்!
..

No comments:

Post a Comment